தேடுதல்

Vatican News
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், இஸ்லாமிய தலைமைக்குரு முகம்மத் அல்-தய்யிப் அவர்களும் கையெழுத்திடுகின்றனர் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், இஸ்லாமிய தலைமைக்குரு முகம்மத் அல்-தய்யிப் அவர்களும் கையெழுத்திடுகின்றனர்  (Vatican Media)

வரலாற்று சிறப்பு மிக்க அபு தாபி ஒப்பந்தம்

போர்களுக்கும், வன்முறைக்கும், கிறிஸ்தவமும், இஸ்லாமும் துணை போகாது என்பதை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், இஸ்லாமிய தலைமைக்குரு அல்-தய்யிப் அவர்களும், இந்த ஒப்பந்தத்தின் வழியே, உலகிற்கு உணர்த்தியுள்ளனர்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களாலும், இஸ்லாமிய தலைமைக்குரு முகம்மத் அல்-தய்யிப் அவர்களாலும் அபு தாபியில் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தம், கிறிஸ்தவர்களுக்கும், இஸ்லாமியருக்கும் வரலாற்று சிறப்பு மிக்க ஒரு நிகழ்வு என்று, சிரியா நாட்டில் பணியாற்றும் திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

சிரியா நாட்டு அலெப்போவின் அப்போஸ்தலிக்கப் பிரதிநிதியாகப் பணியாற்றும் இலத்தீன் வழிபாட்டு முறை ஆயர், Georges Abou Khazen அவர்கள், ஆசிய செய்திக்கு அளித்த பேட்டியில், அடிப்படைவாதத்தையும், பயங்கரவாதத்தையும் விலக்கி வாழ, இந்த ஒப்பந்தம் அழைப்பு விடுக்கிறது என்று கூறினார்.

போர்களுக்கும், வன்முறைக்கும், கிறிஸ்தவமும், இஸ்லாமும் துணை போகாது என்பதை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், இஸ்லாமிய தலைமைக்குரு அல்-தய்யிப் அவர்களும், இந்த ஒப்பந்தத்தின் வழியே, உலகிற்கு உணர்த்தியுள்ளனர் என்று, ஆயர் Abou Khazen அவர்கள் எடுத்துரைத்தார்.

அரேபிய நாடுகளில் முதல் முறையாக, பொதுவான ஓரிடத்தில், திருப்பலியை, கத்தோலிக்க உலகின் தலைவரான திருத்தந்தை நிறைவேற்றியிருப்பது, மத வழிபாட்டிற்கு இவ்வுலகம் வழங்கவேண்டிய உரிமையை நிலைநாட்டுகிறது என்று ஆயர் Abou Khazen அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்.

திருத்தந்தை மேற்கொண்ட திருத்தூதுப் பயணத்தின் பல நிகழ்வுகள், குறிப்பாக, அவர் நிறைவேற்றிய இறுதித் திருப்பலி, சிரியாவில் நேரடி ஒளிபரப்பானது என்பதை மகிழ்வுடன் குறிப்பிட்ட ஆயர் Abou Khazen அவர்கள், இந்தப் பயணம், சிரியா நாட்டில் பல்வேறு நேர்மறையான தாக்கங்களை உருவாக்கும் என்று தான் நம்புவதாகவும் தெரிவித்தார். (AsiaNews)

05 February 2019, 14:54