தேடுதல்

Vatican News
விமானப் பயணத்தில், செய்தியாளர்களிடம் உரையாடிய திருத்தந்தை விமானப் பயணத்தில், செய்தியாளர்களிடம் உரையாடிய திருத்தந்தை  (ANSA)

உரையாடலை மேற்கொள்ளாவிடில் பெரும் ஆபத்து

அபு தாபியில், இஸ்லாமிய அல் அசார் மத குருவும் தானும் கையொப்பமிட்ட ஒப்பந்தம், ஓராண்டளவாக உருவாக்கப்பட்டு வந்தது – திருத்தந்தை பிரான்சிஸ்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

அபு தாபியில் நான் ஒரு நவீன நாட்டையும், மிகச் சுத்தமான ஒரு நகரையும் கண்டேன். அதே வேளையில், இந்நாடு பலரையும் வரவேற்கும் மனப்பான்மை கொண்டிருந்தது, என்னைக் கவர்ந்தது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து திரும்பி வரும் வழியில், விமானப் பயணத்தில், செய்தியாளர்களிடம் கூறினார்.

ஏறத்தாழ 35 நிமிடங்கள் நீடித்த இச்சந்திப்பில், கிறிஸ்தவ இஸ்லாமிய உரையாடல், திருஅவையில் அருள் சகோதரிகள் பாலியல் வழியில் துன்புறுத்தப்படுதல், வெனிசுவேலா அரசுத்தலைவர் திருத்தந்தைக்கு எழுதிய மடல் ஆகியவை சில முக்கியமான கேள்விகளாக எழுப்பப்பட்டன.

கிறிஸ்தவ இஸ்லாமிய உரையாடல்

கிறிஸ்தவ இஸ்லாமிய உரையாடல் பற்றிய கேள்வியில், ஒரு சில இஸ்லாமிய மத குருக்கள் திருத்தந்தையை தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றுகின்றனர் என்பதை கிறிஸ்தவர்கள் ஒரு குறையாக சுட்டிக்காட்டுவதுபற்றி செய்தியாளர் ஒருவர் கேட்டார்.

அதற்குப் பதிலளித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அத்தகையக் குறைபாட்டை எதிர்கொள்ள தான் தயாராக இருப்பதாகவும், அதற்கு மாறாக, இஸ்லாமியரோடு உரையாடலை மேற்கொள்ளாமல் போவது, அதைவிட பெரும் ஆபத்து என்றும் எடுத்துரைத்தார்.

அபு தாபியில், இஸ்லாமிய அல் அசார் மத குருவும் தானும் கையொப்பமிட்ட ஒப்பந்தம், ஓராண்டளவாக உருவாக்கப்பட்டு வந்தது என்றும், பல்வேறு இறையியல் அறிஞர்களின் பார்வைக்கு உட்படுத்தப்பட்ட அந்த ஒப்பந்தம், இரண்டாவது வத்திக்கான் பொதுச் சங்கத்தின் ஒரு தொடர்ச்சியே என்றும் திருத்தந்தை சுட்டிக்காட்டினார்.

வெனிசுவேலா அரசுத் தலைவரின் மடல்

வெனிசுவேலா அரசுத்தலைவர், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு, மடல் ஒன்றை அனுப்பியுள்ளார் என்ற செய்தியின் அடிப்படையில் கேள்வி எழுந்தபோது, தனக்கு மடல் ஒன்று வந்து சேர்ந்துள்ளது என்று ஒப்புக்கொண்ட திருத்தந்தை, தான் அதை இன்னும் வாசிக்கவில்லை என்றும், வாசித்தபின் அடுத்தக் கட்ட நடவடிக்கை பற்றி சிந்திக்கவிருப்பதாகவும் கூறினார்.

மேலும், வெனிசுவேலா நாட்டில், ஆளும் கட்சியும், எதிர் கட்சிகளும் இணைந்து வந்து தீர்வுகளுக்காக விண்ணப்பம் செய்யவேண்டும் என்பதை வலியுறுத்திக் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருமண உறவில் உண்டாகும் பிரச்சனைகளைத் தீர்க்க கணவன், மனைவி இருவருமே முன்வரவேண்டும் என்பதை ஓர் எடுத்துக்காட்டாகச் சுட்டிக்காட்டினார்.

அருள் சகோதரிகள் அடையும் கொடுமைகள்

வத்திக்கான் நாளிதழ் L’Osservatore Romanoவின் ஒரு பகுதியாக வெளியான பெண்கள் குறித்த கட்டுரைகளில், திருஅவையில் அருள் சகோதரிகள் அடையும் கொடுமைகள் கூறப்பட்டுள்ளதை, செய்தியாளர் ஒருவர், திருத்தந்தையின் கவனத்திற்குக் கொணர்ந்தார்.

இதற்குப் பதில் அளித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அருள்பணியாளர்கள், ஆயர்கள் ஆகியோரால், அருள் சகோதரிகள், பாலியல் வழியிலும், வேறு வழிகளிலும், கொடுமைகளை அனுபவிப்பது உண்மை என்பதை ஏற்றுக்கொண்டதோடு, இந்தப் பிரச்சனைக்கு, முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் மேற்கொண்ட முயற்சிகளைக் குறித்துப் பேசினார்.

ஏமன் நாட்டில் நிலவும் போரை முடிவுக்குக் கொணரும் வகையில் ஐக்கிய அரபு அமீரகத் தலைவர்களோடு தான் உரையாடியதாகக் கூறிய திருத்தந்தை, அந்நாட்டில் அமைதி திரும்புவதற்குத் தேவையான நல்ல எண்ணம் அமீரகத் தலைவர்களிடம் தான் கண்டதாகவும் கூறினார்.

06 February 2019, 15:08