தேடுதல்

Vatican News
அமீரக நிறுவனர் நினைவிடத்தில் நடைபெற்ற பல்சமயக் கூட்டத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அமீரக நிறுவனர் நினைவிடத்தில் நடைபெற்ற பல்சமயக் கூட்டத்தில் திருத்தந்தை பிரான்சிஸ்  (Vatican Media)

அமீரக நிறுவனர் நினைவிடத்தில் பல்சமயக் கூட்டம்

ஐக்கிய அரபு அமீரகத்தை நிறுவிய Sheikh Zayed Bin Sultan Al Nahyan அவர்களின் நினைவிடத்தில் நடைபெற்ற பன்னாட்டு பல்சமய கருத்தரங்கில் கலந்துகொண்டார் திருத்தந்தை.

மேரி தெரேசா – வத்திக்கான்

பிப்ரவரி 04, இத்திங்கள் உள்ளூர்  நேரம் மாலை ஐந்து மணிக்கு, இந்திய நேரம் மாலை 6.30 மணிக்கு, அபு தாபி நகரின் பெரிய சையத் மசூதிக்குச் சென்றார், திருத்தந்தை பிரான்சிஸ். ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள பெரிய மசூதியான இங்கு, ஒவ்வொரு நாளும் வழிபாடு நடைபெறும். நோன்பு கால செபங்களின்போது, 41,000த்திற்கும் மேற்பட்ட மக்கள், இங்கு சென்று, செபிப்பார்கள். 1996ம் ஆண்டுக்கும், 2007ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், சிரியா நாட்டு கட்டடக் கலைஞர், Yousef Abdelky என்பவரால் இந்த மசூதி கட்டப்பட்டது. 12 ஹெக்டேர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இம்மசூதியில், Sheikh Zayed அவர்களின் சமாதியும் உள்ளது. இம்மசூதிக்குள் Qibla, அதாவது, மெக்காவை நோக்கியுள்ள சுவரில், கடவுளின் 99 பெயர்கள் எழுதப்பட்டுள்ளன. பல்வேறு மொழிகளில், பல்வேறு தலைப்புகளில், எழுதப்பட்ட நூல்கள் அடங்கிய நூலகம் ஒன்றும் இங்கு உள்ளது. இந்த மசூதிக்குச் சென்ற திருத்தந்தையை, மசூதியின் தலைமைக் குரு, மற்றும், அந்நாட்டின் சகிப்புத்தன்மை கலாச்சார அமைச்சர் ஆகியோர் வரவேற்று, உள்ளே அழைத்துச் சென்றனர். Sheikh Zayed அவர்களின் சமாதியையும் திருத்தந்தை பார்வையிட்டார். சிறிய காரில் அவ்விடத்தைப் பார்வையிட்ட பின்னர், அங்கிருந்து 18.8 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள, அமீரக நிறுவனரின் நினைவிடத்திற்குச் சென்றார், திருத்தந்தை பிரான்சிஸ். தேசிய நினைவுச் சின்னமாக அமைந்துள்ள இவ்விடம், ஐக்கிய அரபு அமீரகத்தை நிறுவியவரும், முதல் அரசுத்தலைவருமான Sheikh Zayed Bin Sultan Al Nahyan அவர்களின் வாழ்வு, அவரின் விழுமியங்கள் போன்றவற்றின் நினைவாக அமைக்கப்பட்டுள்ளது. Sheikh Zayed Bin Sultan அவர்கள், 2004ம் ஆண்டில் காலமானார்.

அந்த நினைவிடத்தில் நடைபெற்ற பன்னாட்டு பல்சமய கருத்தரங்கில் கலந்துகொண்டார் திருத்தந்தை. முதலில் வாரிசு இளவரசரும், பெரிய தலைமைக் குருவும், திருத்தந்தையை வரவேற்றுப் பேசினர். அதற்குப் பின்னர், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், தன் உரையை வழங்கினார்.

இந்நிகழ்வில் காணொளி எடுப்பது தடைசெய்யப்பட்டிருந்தது. இத்திருத்தூதுப் பயணத்தின் முக்கிய நோக்கமாக அமைந்த இந்நிகழ்வை நிறைவு செய்து, Al Mushrif மாளிகைக்குச் சென்றார், திருத்தந்தை பிரான்சிஸ். இத்துடன், இத்திங்கள் பயண நிகழ்வுகள் முற்றுப்பெற்றன. பிப்ரவரி 05, இச்செவ்வாயன்று, அமீரகத்தில் வாழ்கின்ற கத்தோலிக்கருக்கு, திருப்பலி நிறைவேற்றுவார், திருத்தந்தை பிரான்சிஸ்.

முஸ்லிம் உலகத்துடன் உடன்பிறந்த நிலையில் உறவுகளை மேலும் உறுதிப்படுத்தப்படவும், அமீரகத்தில் வாழ்கின்ற கிறிஸ்தவ சமுதாயத்தை விசுவாசத்தில் ஆழப்படுத்தவுமென, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அபு தாபிக்கு மேற்கொண்டுள்ள இப்பயணம், தன் நோக்கத்தை நிறைவேற்ற, தொடர்ந்து செபிப்போம்.

04 February 2019, 16:06