தேடுதல்

Vatican News
அபு தாபி சென்ற திருத்தந்தை பிரான்சிஸ் அபு தாபி சென்ற திருத்தந்தை பிரான்சிஸ்  (Vatican Media)

அபு தாபிக்குச் செல்லும் விமானப் பயணத்தில் திருத்தந்தை

ஐக்கிய அரபு அமீரகத்திற்குப் புறப்படும் இவ்வேளையில், ஒன்றிணைந்து உரையாடலின் பக்கத்தை எழுதுவதற்கும், அமைதியின் பாதையில் ஒன்றிணைந்து பயணம் செய்யவும், ஒரு சகோதரராக அந்நாட்டிற்குச் செல்கிறேன்

மேரி தெரேசா – வத்திக்கான்

கத்தோலிக்கத் திருஅவையின் தலைவர் ஒருவர் அரேபிய தீபகற்பத்திற்கு மேற்கொள்ளும் வரலாற்று சிறப்புமிக்க முதல் திருத்தூதுப் பயணத்தை, பிப்ரவரி 03, இஞ்ஞாயிறன்று துவங்கினார், திருத்தந்தை பிரான்சிஸ். ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் அபு தாபிக்குப் புறப்பட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், விமானத்தில் ஏறுவதற்கு முன்னர், உரோம் விமான நிலையத்தில், வீடற்றவர்க்கென அமைக்கப்பட்டுள்ள இடத்தைப் பார்வையிட்டார். உரோம் விமான நிலையம், இத்தாலிய காரித்தாஸ், விமான நிலையப் பங்குத்தளம் ஆகிய மூன்றும் இணைந்து, வீடற்றவர்க்கென இந்த இடத்தை உருவாக்கி, அதில் வீடற்ற புலம்பெயர்ந்தவர்களைப் பராமரித்து வருகின்றன. ஆல் இத்தாலியா, போயிங் 777 விமானத்தில், பகல் ஒரு மணிக்கு, அபு தாபிக்குப் புறப்பட்டத் திருத்தந்தை, தன்னோடு பயணம் செய்த பன்னாட்டுச் செய்தியாளர்களை முதலில் வாழ்த்தினார். அமீரகத்தில், இஞ்ஞாயிறு காலை மழை பெய்வதாக அறிந்தேன். இந்நாட்டில் மழை அரிதாகவே பெய்கின்றது. இஞ்ஞாயிறு மழைபெய்வது, ஒரு நல்ல அடையாளமாக நோக்கப்படுகிறது. எல்லாம் நன்றாக நடக்கும் என நம்புவோம் என்று கூறியத் திருத்தந்தை, இளையோருக்கும் வயது முதிர்ந்தோருக்கும் இடையே, உரையாடலை வெளிப்படுத்தும் ஒரு படத்தை எல்லா செய்தியாளர்களுக்கும் கொடுத்தார். போசே துறவுக் குழுமத்தில், ஓர் இளைய துறவி, வயதான ஒரு துறவியை தனது தோளில் சுமப்பது போன்று வரையப்பட்டுள்ள இந்தப் படம், ஒரு சவாலை நமக்கு முன் வைக்கின்றது என்றும் திருத்தந்தை கூறினார்.

“ஐக்கிய அரபு அமீரகத்திற்குப் புறப்படும் இவ்வேளையில், ஒன்றிணைந்து உரையாடலின் பக்கத்தை எழுதுவதற்கும், அமைதியின் பாதையில் ஒன்றிணைந்து பயணம் செய்யவும், ஒரு சகோதரராக அந்நாட்டிற்குச் செல்கிறேன், எனக்காகச் செபியுங்கள்!” என்ற சொற்களைத் தனது டுவிட்டரில் வெளியிட்டு, இப்பயணத்தை ஆரம்பித்தார், திருத்தந்தை பிரான்சிஸ். அபு தாபியின் வாரிசு இளவரசர் Sheikh Mohamed Bin Zayed Al Nahyan அவர்களும், "திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களே, நாங்கள் உம்மை இனிதே வரவேற்கின்றோம்" என்ற வார்த்தைகளை, தனது டுவிட்டரில் வெளியிட்டிருந்தார். 1961ம் ஆண்டில் பிறந்த, Sheikh Mohamed Bin Zayed அவர்கள், ஐக்கிய அரபு அமீரகத்தின் முதல் அரசுத்தலைவரும், அமீரகத்தின் தந்தை என அழைக்கப்படுபவருமான, Sheikh Zayed Bin Sultan Al Nahyan அவர்களின் மகனும், ஐக்கிய அரபு அமீரகத்தின் தற்போதைய அரசுத்தலைவரான Khalifa bin Zayed Al Nahyan அவர்களின் சகோதரருமாவார்.

04 February 2019, 15:43