தேடுதல்

Principality of Monaco  தேசிய அவையின்  பிரதிநிதிகள் Principality of Monaco தேசிய அவையின் பிரதிநிதிகள் 

பொது நலனுக்கு தொடர்ந்து பணியாற்றுங்கள்

நம் பொதுவான இல்லமாகிய பூமியைப் பாதுகாப்பதற்கு, மனிதர் தம்மோடும், பிறரோடும், படைப்போடும் நல்லுறவில், அமைதியின் பாதையைத் தேட வேண்டும்

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

ஒவ்வொரு குடிமகனின் வருங்காலத்தை மேம்படுத்தும் முயற்சியில், மனிதரின் மாண்பு மற்றும் வாழ்வின் அடிப்படை விழுமியங்கள் மதிக்கப்படுவதில் கவனம் செலுத்துவதன் வழியாக, மனித சமுதாயத்தின் பொது நலனுக்கு ஆற்றும் பணிகள் தொடர்ந்து செயல்படுத்தப்படுமாறு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இச்சனிக்கிழமையன்று அழைப்பு விடுத்தார்.

Principality of Monaco நாட்டு தேசிய அவையின் ஏறத்தாழ நாற்பது பிரதிநிதிகளை, பிப்ரவரி 02 இச்சனிக்கிழமையன்று, திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, இந்த நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு ஆற்றிவரும் பணிகளை ஊக்கப்படுத்தினார்.

Monaco நாடு, சுற்றுச்சூழலுக்கு, சிறப்பாக, அந்நாட்டின் 2ம் ஆல்பெர்ட் அறக்கட்டளை வழியாக, கத்தோலிக்கத் திருஅவை, பிற கிறிஸ்தவ சபைகள் மற்றும் அரசு-சாரா அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றி வருவதைப் பாராட்டியத் திருத்தந்தை, உலகளாவிய காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ள மிக ஏழை நாடுகளின் குடும்பங்கள், கல்வி, நலவாழ்வு மற்றும் சமூக-பொருளாதாரத் துறைகளில் பல்வேறு திட்டங்களால் உதவி வருவதைக் குறிப்பிட்டார்.

நம்பிக்கையின்மையும், தன்னலமும், சிலவேளைகளில் புறக்கணிப்பும் வளர்ந்துவரும் இக்காலத்தில், தனிநபர்களுக்கு இடையேயும், நாடுகளுக்கு இடையேயும் உறவுகளை வளர்க்க வேண்டியதன் அவசியத்தையும் குறிப்பிட்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

Monaco குடிமக்கள், நற்செய்தி மற்றும் அதன் அன்புச் செய்தியின் விழுமியங்களில் நல்தூண்டுதல் பெற்று செயல்படுவதையும் குறிப்பிட்ட திருத்தந்தை, உலகில் அமைதியைக் கட்டியெழுப்புவதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.  

மேற்கு ஐரோப்பாவில், French Riviera வில் அமைந்துள்ள Principality of Monaco, உலகில் வத்திக்கானுக்கு அடுத்த சிறிய நாடு ஆகும்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 February 2019, 15:39