தேடுதல்

திருத்தந்தைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட Lamborghini வாகனம் திருத்தந்தைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட Lamborghini வாகனம் 

நினிவே பகுதி மக்களுக்கு திருத்தந்தை நிதியுதவி

2014ம் ஆண்டிலிருந்து இதுவரை, ஈராக் கிறிஸ்தவர்களின் நல்வாழ்வுக்கென, நான்கு கோடி யூரோக்களை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கியுள்ளார்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

“உண்மையான சமய வாழ்வு என்பது, ஒருவர் தனது முழு இதயத்தோடு கடவுளை அன்புகூர்வது மற்றும், தன்னைப்போல் அயலவரை அன்புகூர்வதாகும்” என்ற சொற்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டரில், பிப்ரவரி 26, இச்செவ்வாயன்று இடம்பெற்றிருந்தன.

மேலும், தனக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட Lamborghini வாகனத்தை ஏலத்திற்கு விட்டதில் கிடைத்த, இரண்டு இலட்சம் யூரோக்களை, ஈராக் நாட்டின் நினிவே பகுதியிலுள்ள கிறிஸ்தவர்கள் மற்றும் ஏனைய மக்களுக்கென வழங்கியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஐ.எஸ். இஸ்லாமிய அரசு நினிவே பகுதியில் தோல்வியுற்றதையடுத்து, அப்பகுதிக்குத் திரும்பியுள்ள கிறிஸ்தவக் குடும்பங்களுக்கும், பயங்கரவாதிகளால் அழிக்கப்பட்ட இரண்டு சீரோ-கத்தோலிக்க ஆலயங்களைச் சீரமைப்பதற்கும், மொசூல் நகருக்கு அருகிலுள்ள பாலர் பள்ளி கட்டடங்களைப் பழுது பார்ப்பதற்கும், அழிக்கப்பட்டுள்ள கிராமத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்குமென, திருத்தந்தை வழங்கியுள்ள இந்த நிதியுதவி செலவழிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Aid to the Church in Need பிறரன்பு அமைப்பின் வழியாக, இந்த நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.

2016ம் ஆண்டில், எர்பில் நகரிலுள்ள புனித யோசேப் பிறரன்பு மருத்துவமனைக்கு ஒரு இலட்சம் யூரோக்களையும், 2014ம் ஆண்டிலிருந்து இதுவரை, ஈராக் கிறிஸ்தவர்களின் நல்வாழ்வுக்கென, நான்கு கோடி யூரோக்களையும், திருத்தந்தை வழங்கியுள்ளார் என, Aid to the Church in Need பிறரன்பு அமைப்பு கூறியுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 February 2019, 15:14