தேடுதல்

புதன் மறைக்கல்வி உரையில் சிறியோரை அணைத்து ஆறுதல் கூறும் திருத்தந்தை பிரான்சிஸ் புதன் மறைக்கல்வி உரையில் சிறியோரை அணைத்து ஆறுதல் கூறும் திருத்தந்தை பிரான்சிஸ் 

இது மனமாற்றத்தின் நேரமாக அமையட்டும் - திருத்தந்தை

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பத்துக்கட்டளைகள் குறித்து வழங்கிய புதன் மறைக்கல்வி உரைகள், "பத்து சொற்கள்: கட்டளைகளைப் பற்றிய மறைக்கல்விகள்" என்ற தலைப்பில், ஒரு நூலாக வெளியாகின்றன

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

"திருஅவையில் சிறியோரின் பாதுகாப்பு" என்ற மையக்கருத்துடன், பிப்ரவரி 21, இவ்வியாழன் முதல், 24 வருகிற ஞாயிறு முடிய, வத்திக்கானில் நடைபெறவிருக்கும் ஒரு முக்கியமான கூட்டத்தைப்பற்றி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்புதனன்று வெளியிட்ட டுவிட்டர் செய்தி அமைந்திருந்தது.

"நாளை முதல் ஒரு சில நாள்கள், நாம் உரையாடல், ஒருங்கிணைப்பு, செவிமடுத்தல், தேர்ந்து தெளிதல் என்பனவற்றில் வாழவிருக்கிறோம். இது மனமாற்றத்தின் நேரமாக அமையட்டும். நாம், நம்மைப் பறைசாற்றாமல், நமக்காக உயிர் துறந்தவரை பறைசாற்றுகிறோம்" என்ற சொற்களை, திருத்தந்தை தன் டுவிட்டர் செய்தியில் பதிவு செய்திருந்தார்.

மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பத்துக்கட்டளைகள் குறித்து வழங்கிய புதன் மறைக்கல்வி உரைகள், "பத்து சொற்கள்: கட்டளைகளைப் பற்றிய மறைக்கல்விகள்" என்ற தலைப்பில், ஒரு நூலாக வெளியாகின்றன.

128 பக்கங்கள் கொண்ட இந்நூலை, பிப்ரவரி 22, இவ்வெள்ளியன்று கொண்டாடப்படும் திருத்தூதரான புனித பேதுருவின் தலைமைப்பீடம் திருநாளன்று, புனித பவுல் பதிப்பகம் வெளியிடுகிறது.

பத்துக் கட்டளைகளை, நம் வாழ்வைச் சிறைப்படுத்தும் தடைகளாக இல்லாமல், நம் வாழ்வை விரிவாக்கும் அழைப்பாக திருத்தந்தை வழங்கியுள்ளார் என்று, இந்நூலுக்கு அணிந்துரை எழுதியுள்ள அருள்பணி பாபியோ ரொசீனி (Fabio Rosini) அவர்கள் கூறியுள்ளார்.

2018ம் ஆண்டு ஜூன் 13ம் தேதி, புதனன்று, கொண்டாடப்பட்ட பதுவை நகர் புனித அந்தோனியாரின் திருநாளன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பத்துக்கட்டளைகளை மையப்படுத்தி துவக்கிய புதன் மறைக்கல்வி உரைகள், அதே ஆண்டு, நவம்பர் 28, புதனன்று நிறைவடைந்தன.

அதைத் தொடர்ந்து, டிசம்பர் 5, புதனன்று, 'வானகத்திலுள்ள எம் தந்தையே' என்ற செபத்தில் தன் புதன் மறைக்கல்வி உரைகளை திருத்தந்தை தற்போது வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 February 2019, 15:42