தேடுதல்

"திருஅவையில் சிறியோரின் பாதுகாப்பு" கூட்டத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் "திருஅவையில் சிறியோரின் பாதுகாப்பு" கூட்டத்தில் திருத்தந்தை பிரான்சிஸ்  

திருத்தந்தை - பெண், அன்னையாம் திருஅவையின் சாயல்

திருஅவையில் பெண்களுக்கு மிகுந்த பங்கு கொடுக்கப்பட வேண்டியது முக்கியமாக இருந்தாலும், நம் சிந்தனையில், திருஅவையின் உருவத்தை, பெண்ணோடு இணைத்துப் பார்ப்பதும் முக்கியமாகும்

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

திருஅவையின் காயங்கள் பற்றிப் பேசுவதற்கு ஒரு பெண்ணை அழைப்பது, திருஅவை, தான் கொண்டிருக்கின்ற காயங்கள் பற்றியும், தன்னைப் பற்றியும் பேச அழைப்பதாகும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், "திருஅவையில் சிறியோரின் பாதுகாப்பு" என்ற கூட்டத்தில் கூறினார்.

பிப்ரவரி 21, இவ்வியாழன் காலையில், வத்திக்கானில் துவங்கிய, "திருஅவையில் சிறியோரின் பாதுகாப்பு" என்ற கூட்டத்தில் துவக்க உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அதற்குப் பின்னர் முதன்முறையாக, பிப்ரவரி 22, இவ்வெள்ளி மாலையில், அந்த நேரத்தில் எழுந்த எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டார்.

சிறியோரின் பாதுகாப்பு குறித்து, திருஅவையில் நடைபெற்றுவரும் இந்த முக்கியமான   கூட்டத்தில், முதன்முறையாக, ஒரு பெண், முனைவர் Linda Ghisoni அவர்கள் வழங்கிய உரையைக் கேட்ட பின்னர் பேசிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருஅவை தன்னைப் பற்றியே பேசுவதைக் கேட்டேன் என்று கூறினார்.

இந்த உரை, ஏதோ உரை வழங்கும் முறை அல்ல, மாறாக, பெண்மைக்குரிய தனிஇயல்பு, பெண்ணாம் திருஅவையில் பிரதிபலித்துள்ளதாக உணர்கிறேன் என்றுரைத்த திருத்தந்தை, இது வெறுமனே, திருஅவையில் பெண்களுக்கு மிகுந்த பங்கு கொடுக்கப்பட வேண்டும் என்பதாக அல்ல, இவ்வாறு கொடுக்கப்பட வேண்டியது முக்கியமாக இருந்தாலும், நம் சிந்தனையில், திருஅவையின் உருவத்தை, பெண்ணோடு இணைத்துப் பார்க்க வேண்டுமென்பதாகும் என்று கூறினார்.

முனைவர் Linda Ghisoni அவர்கள், "இணைந்து செயலாற்றுதல்" என்ற தலைப்பில், பிப்ரவரி 22, இவ்வெள்ளி மாலை நான்கு மணிக்குத் துவங்கிய பொது அமர்வில் உரையாற்றினார்.

இக்கூட்டத்தில் பங்குபெறுவோர்

உலகெங்கிலும் உள்ள 114 ஆயர் பேரவைகளின் தலைவர்களில், 18 பேர் ஆசியாவிலிருந்தும், 36 பேர் ஆப்ரிக்காவிலிருந்தும் 32 பேர் ஐரோப்பாவிலிருந்தும், 24 பேர் வட, மற்றும், தென் அமெரிக்காவிலிருந்தும் 4 பேர் ஓசியானாவிலிருந்தும் இக்கூட்டத்தில் கலந்துகொள்கின்றனர். மேலும், இவர்கள் அல்லாமல், ஆண் துறவு சபைகளின் 12 உலகத் தலைவர்கள், பெண் துறவு சபைகளின் 10 உலகத் தலைவர்கள், திருப்பீடத்தின் உயர் அதிகாரிகள் 14 பேர், மற்றும் திருத்தந்தையால் சிறப்பான அழைப்பு பெற்றோர் என, 190 பேர் இக்கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர்

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 February 2019, 15:07