தேடுதல்

Vatican News
மூவேளை செப உரையின் இறுதியில் ஏமன் நாட்டிற்காக செபிக்கும்படி விண்ணப்பிக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் மூவேளை செப உரையின் இறுதியில் ஏமன் நாட்டிற்காக செபிக்கும்படி விண்ணப்பிக்கும் திருத்தந்தை பிரான்சிஸ்  (Vatican Media)

ஏமன் நாட்டில் மனிதாபிமான உதவிகள் உடனே கிடைக்க...

ஏமன் நாட்டில் நிலவும் மனிதாபிமான கொடுமைகளை முடிவுக்குக் கொணர அனைத்து விசுவாசிகளையும் செபிக்கும்படி அழைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

போரின் கொடுமைகளால், ஏமன் நாட்டில், உணவின்றி தவிக்கும் குழந்தைகளுக்குத் தேவையான உதவிகள், மனிதாபிமான அடிப்படையில் உடனே கிடைக்கவேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அழைப்பு விடுத்தார்.

பிப்ரவரி 3, இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை, இவ்வுரையின் இறுதியில், ஏமன் நாட்டில் நிலவும் மனிதாபிமான கொடுமைகளை முடிவுக்குக் கொணர அனைத்து விசுவாசிகளையும் செபிக்கும்படி அழைத்தார்.

நீண்டதொரு போரின் விளைவுகளால், அடிப்படை தேவைகள் அனைத்தையும் இழந்து தவிக்கும் குழந்தைகள் மற்றும் அவர்களது பெற்றோர் எழுப்பும் அழுகுரல் இறைவனை நோக்கி எழுகிறது என்று, திருத்தந்தை, தன் உரையில் வேதனையுடன் கூறினார்.

தேவையில் இருப்போருக்கு உதவிகள் சென்றடையவேண்டும் என்று அழைப்பு விடுத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வளாகத்தில் கூடியிருந்த அனைவரோடும் இணைந்து, "அருள் நிறை மரியே" செபத்தை செபித்தார்.

ஏமன் நாட்டில் போர் நிறுத்த அறிக்கை ஒரு மாதத்திற்கு முன் வெளியிடப்பட்டாலும், அப்பகுதியில் துன்புறும் குழந்தைகளுக்கும், பிறருக்கும் உதவிகள் சென்றடைவதை, போரிடும் குழுக்கள் நிறுத்தி வைத்திருப்பது அநீதி என்று, ஐ.நா. அவை கூறியுள்ளது.

04 February 2019, 13:48