தேடுதல்

பழங்குடி மக்களின் பன்னாட்டு கூட்டத்தில் திருத்தந்தையின் உரை பழங்குடி மக்களின் பன்னாட்டு கூட்டத்தில் திருத்தந்தையின் உரை 

பழங்குடி மக்களின் பன்னாட்டு கருத்தரங்கில் திருத்தந்தை

மனிதர்கள் படைப்பின் உரிமையாளர்கள் அல்ல, மாறாக, படைப்பைப் பேணும் காவலர்கள் என்பதை உலகிற்கு உணர்த்தும் பழங்குடியினர் - திருத்தந்தை

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

இயற்கைப் பேரிடர்களும், மனிதர்களால் உருவாக்கப்படும் அழிவுகளும் படைப்பின் மீது உருவாக்கி வரும் காயங்களைக் குறித்து நாம் அக்கறையின்றி இருக்கமுடியாது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பழங்குடி மக்களின் பன்னாட்டு கருத்தரங்கு ஒன்றில் கூறினார்.

இயற்கையின் மீது பழங்குடியினரின் அக்கறை

IFAD என்றழைக்கப்படும் 'வேளாண்மை முன்னேற்றத்திற்கு பன்னாட்டு நிதி' என்ற நிறுவனம் உரோம் நகரில் ஏற்பாடு செய்திருந்த பழங்குடி மக்களின் நான்காவது பன்னாட்டு கருத்தரங்கில் உரையாற்றிய திருத்தந்தை, பழங்குடியின மக்கள் இவ்வாறு கூடி வந்திருப்பது, இயற்கையின் மீது அவர்கள் கொண்டிருக்கும் அக்கறையை உலகறிய செய்கிறது என்று எடுத்துரைத்தார்.

"சுற்றுச்சூழல் மாற்றங்களையும், நீடிக்கத்தக்க முன்னேற்றங்களையும் மனதில் கொண்டு பழங்குடி மக்கள் வளர்க்கக்கூடிய அறிவும், புதிய முயற்சிகளும்" என்ற மையக்கருத்துடன் இந்த பன்னாட்டு கூட்டம் நடைபெறுவதை தன் உரையின் துவக்கத்தில் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இம்மக்கள் உணர்த்த விரும்பும் அறிவுக்கு, உலகம் செவிமடுப்பது அவசியம் என்று கூறினார்.

படைப்பைப் பேணும் காவலர்கள்

இவ்வுலகம், அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ள கொடை என்பதையும், மனிதர்கள், படைப்பின் உரிமையாளர்கள் அல்ல, மாறாக, படைப்பைப் பேணும் காவலர்கள் என்பதையும், உலகிற்கு உணர்த்த, பழங்குடியினர் மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு, உலக சமுதாயம் தகுந்த பதிலிறுப்பை வழங்கவேண்டும் என்று திருத்தந்தை தன் உரையில் வலியுறுத்தினார்.

பழங்குடியனரிடமிருந்து எழும் நம்பிக்கை

இதுவரை மனிதர்கள் எடுத்த முடிவுகள் நமது 'பொதுவான இல்லமான' பூமிக்கோளத்தை அழிவை நோக்கி இட்டுச் சென்றிருந்தாலும், இந்நிலையிலிருந்து மாறி, நாம் நம்பிக்கையுடன் இந்நிலையை சீராக்கமுடியும் என்ற நம்பிக்கை குரல்கள் பழங்குடியனரிடமிருந்து எழுகிறது என்று, திருத்தந்தை, தன் உரையில் சுட்டிக்காட்டினார்.

பூமிக்கோளத்தைக் கட்டியெழுப்பும் மனப்பான்மையுடன், நாம், பொறுமையுடன் உரையாடல் முயற்சிகளை மேற்கொண்டால், சுற்றுச்சூழலுக்கு விளைந்துள்ள ஆபத்துக்களை நீக்க முடியும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம்பிக்கை தெரிவித்தார்.

பல நாடுகளிலிருந்து பழங்குடியினர் இணைந்து வந்து குரல் எழுப்பும் இம்முயற்சிக்கு தன் பாராட்டுக்களையும், ஆசீரையும் வழங்கி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் உரையை நிறைவு செய்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 February 2019, 15:02