தேடுதல்

திருத்தந்தையின் திருத்தூதுப்பயணம் திருத்தந்தையின் திருத்தூதுப்பயணம் 

அபுதாபி திருத்தூதுப்பயணம் பற்றி ஆயர் ஹின்டர்

திருத்தந்தையின் ஐக்கிய அரபு அமீரகத்திற்கான திருத்தூதுப்பயணம், பல்வேறு இனங்களைச் சார்ந்த கத்தோலிக்கச் சமுதாயத்திற்கு வரலாற்றுச் சிறப்புமிக்கது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

முஸ்லிம்கள் மத்தியில் வாழ்கின்ற கிறிஸ்தவர்கள் அல்லது, கிறிஸ்தவர்கள் மத்தியில் வாழ்கின்ற முஸ்லிம்கள் யாராய் இருந்தாலும், ஒருவர் ஒருவருடன் நல்லிணக்கத்துடன் வாழ்வதற்குக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று, தென் அராபிய பகுதியின் அப்போஸ்தலிக்க நிர்வாகி ஆயர் பால் ஹின்டர் (Paul Hinder) அவர்கள் கூறினார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வருகிற பிப்ரவரி 3ம் தேதி முதல் 5ம் தேதி வரை, ஐக்கிய அரபு அமீரகத்திற்கு திருத்தூதுப்பயணம் மேற்கொள்வதை முன்னிட்டு Zenit செய்திகளுக்குப் பேட்டியளித்த, ஆயர் பால் ஹின்டர் அவர்கள், திருத்தந்தையின் இத்திருத்தூதுப்பயண அறிவிப்பு அனைவருக்கும் வியப்பைத் தந்தது என்று கூறினார்  

பொதுவாக கத்தோலிக்கர் சிறுபான்மையினராக வாழ்கின்ற அராபிய தீபகற்பத்தில், ஐக்கிய அரபு அமீரகம், சிறிய நாடு என்றும், இந்தப் பகுதியிலுள்ள ஏறத்தாழ பத்து இலட்சம் கத்தோலிக்கர் எல்லாருமே வெளிநாட்டவர் என்றும், இவர்கள் பெரும்பாலும், பிலிப்பைன்ஸ், இந்தியா மற்றும் ஏனைய ஆசிய நாடுகளைச் சார்ந்தவர்கள் என்றும், ஆயர் ஹின்டர் அவர்கள் தெரிவித்தார்.

திருத்தந்தையின் ஐக்கிய அரபு அமீரகத்திற்கான திருத்தூதுப்பயணம், பல்வேறு இனங்களைச் சார்ந்த கத்தோலிக்கச் சமுதாயத்திற்கு வரலாற்றுச் சிறப்புமிக்கது எனவும், இஸ்லாமிய நாடுகளில் கிறிஸ்தவ விசுவாசத்தை வாழ்வது சவால் நிறைந்தது எனவும், ஆயர் பால் ஹின்டர் அவர்கள் கூறினார்.  

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், துருக்கி, போஸ்னியா, அஜர்பைஜான், எகிப்து, பங்களாதேஷ் ஆகிய முஸ்லிம் நாடுகளுக்கு, ஏற்கனவே திருத்தூதுப்பயணம் மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. (Zenit)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 January 2019, 15:08