தேடுதல்

பெரு நாட்டு பூர்வீக இனத்தவர் பெரு நாட்டு பூர்வீக இனத்தவர் 

பூர்வீக இன இளையோர் மாநாட்டுக்கு திருத்தந்தை செய்தி

பானமாவில் உங்களைச் சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் என, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உலகளாவிய பூர்வீக இன இளையோரிடம் கூறியுள்ளார்

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

தலைமுறை தலைமுறைகளாக, வளமையான பூர்வீக இனக் கலாச்சாரங்களில் காக்கப்பட்டு வந்த, இயேசு கிறிஸ்து மீதுள்ள விசுவாசம் பற்றிச் சிந்திக்கவும், அதைக் கொண்டாடவும் வேண்டுமென, பூர்வீக இன இளையோரிடம் கேட்டுக்கொண்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

பானமாவில் நடைபெறவிருக்கும் உலக இளையோர் நாள் நிகழ்வுகளுக்கு முன்தயாரிப்பாக, அந்நாட்டின் டேவிட் மறைமாவட்டத்தில் நடைபெற்றுவரும், பூர்வீக இன இளையோர் மாநாட்டுக்கு, இவ்வெள்ளியன்று அனுப்பியுள்ள காணொளிச் செய்தியில் இவ்வாறு கேட்டுக்கொண்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

பானமா மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளின் பூர்வீக இன இளையோர்க்கென முதன்முறையாக இத்தகைய மாநாடு ஒன்று நடைபெறுகின்றது எனப் பாராட்டுத் தெரிவித்துள்ள திருத்தந்தை, இலத்தீன் அமெரிக்க ஆயர் பேரவையின் ஆதரவுடன், இதனை நடத்தும் பானமா ஆயர் பேரவையின் பூர்வீக இனப் பணிக்குழுவுக்கு தனது நன்றியைக் கூறியுள்ளார்.

பூர்வீக இன இளையோர், தங்கள் இன மக்களின் வரலாற்றிற்கு நன்றியுடன் இருக்கவும், தங்களைச் சூழ்ந்துள்ள சவால்களைத் துணிச்சலுடன் எதிர்கொண்டு, முழு நம்பிக்கையுடன் வருங்காலத்தை நோக்கிச் செல்லவும் வலியுறுத்தியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

பூர்வீக கலாச்சாரங்களைப் பேணி பாதுகாத்தல்

பூர்வீகங்களைக் கவனமுடன் காப்பது, வாழ்வில் வளர்ந்து, மிகுந்த கனிதர உதவும் என்றும், இதன் வழியாக, நம் பொதுவான இல்லமாகிய பூமியைப் பாதுகாப்பதில், பூர்வீக இனத்தவரின் பங்களிப்பு வெளிப்படும் என்றும், திருத்தந்தை, காணொளிச் செய்தியில் கூறியுள்ளார்.  

ஒரு மரம் விருட்சமாவது, அதற்கு அடியில் உள்ளதை வைத்தே அமையும் என்ற ஒரு கவிஞரின் கூற்றைக் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, வேர்கள் வருங்காலத்தைக் கொணரும், அது வருங்காலத்தை நோக்கி இருக்கும் என்றுரைத்து, பூர்வீக இளையோர் தங்களின் மூலங்களைக் கண்காணித்து, அவற்றிலிருந்து வளர்ந்து கனிதர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.   

சனவரி 17, இவ்வியாழனன்று தொடங்கியுள்ள, பூர்வீக இன இளையோர் மாநாடு, சனவரி 21, வருகிற திங்களன்று நிறைவடையும்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 January 2019, 14:54