தேடுதல்

Vatican News
இளையோர் நாள் நிகழ்வுகளின் திருவிழிப்பு சடங்கு - திருத்தந்தை வழங்கிய நற்கருணை ஆசீர் இளையோர் நாள் நிகழ்வுகளின் திருவிழிப்பு சடங்கு - திருத்தந்தை வழங்கிய நற்கருணை ஆசீர்   (ANSA)

சனிக்கிழமை பயணத்திட்டங்களின் நிறைவு

கல்வி நிலையங்களுக்கு தற்போது விடுமுறை இல்லையென்றாலும், ஏறத்தாழ 6 இலட்சம் இளையோர் குழுமியிருந்தது, அவர்கள் ஆர்வத்தின் வெளிப்பாடு

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

தன்னை சந்திக்க வந்த இயேசு சபையினருடன் உரையாடிய பின்னர், உள்ளூர் நேரம் மாலை 5.45 மணிக்கு 24.5 கிலோமீட்டர் தூரத்திலுள்ள புனித திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் வளாகம் நோக்கி காரில் பயணம் செய்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், முதலில், அங்கு குழுமியிருந்த இளையோரிடையே, திறந்த காரில் வலம் வந்தார். இளையோரும், தங்கள் ஆரவாரக் குரலுடன், மகிழ்ச்சியை வெளியிட்டனர்.

ஏறத்தாழ 6 இலட்சம் இளையோர் குழுமியிருந்த அந்த வளாகத்தில் இளையோரின் பாடலுடன் திருவிழிப்பு வழிபாடு துவங்கியது. முதலில் ஒரு குடும்பமும், பின்னர், ஒரு காலத்தில் போதைப்பொருளுக்கு அடிமையாக இருந்து, தற்போது திருந்தியுள்ள இளையோர் ஒருவரும், பின்னர், பாலஸ்தீனப் பெண் ஒருவரும், தங்கள் அனுபவங்களை, மேடையேறி பகிர்ந்துகொண்டனர். தான் கிறிஸ்தவராக பிறந்தாலும், மதத்தில் அவ்வளவாக அக்கறையின்றி வாழ்ந்ததாகவும், 2006ம் ஆண்டு போலந்தில் இடம்பெற்ற இளையோர் தின கொண்டாட்டத்தில் கலந்துகொண்டபின், மதத்தின்மீது அதிக ஆர்வம் கொண்டு செயல்பட்டு வருவதாகவும் பாலஸ்தீன இளம்பெண் கூறினார். இந்த சாட்சியங்களைத் தொடர்ந்து, திருவிழிப்பு வழிபாட்டில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்  மறையுரையை வழங்கினார்.

இந்த திருவிழிப்பு சடங்கு ஏறத்தாழ ஒன்றரை மணிநேரம் இடம்பெற்றது. அதனை முடித்து, உள்ளூர் நேரம் இரவு எட்டு மணிக்கு பானமா நகர் திருப்பீடத் தூதரகம் நோக்கி காரில் பயணம் செய்தார் திருத்தந்தை. அரை மணி நேர பயணத்திற்குப்பின்  திருத்தூதர் இல்லம் சென்றடைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அங்கேயே உணவருந்தி உறங்கச் சென்றார். இத்துடன் அவரது சனிக்கிழமை பயணத்திட்டங்கள் நிறைவுக்கு வந்தன.

வழக்கமாக, உலக இளையோர் நாள் நிகழ்வுகள், கோடை விடுமுறையில் இடம்பெறுவதற்கு மாறாக, 34வது இளையோர் நாள் நிகழ்வுகள், சனவரி மாதம் இடம்பெறுவதால் இளையோரின் பங்கேற்பு குறைவாகவே இருக்கும் என சில செய்தி நிறுவனங்கள் கருத்து வெளியிட்டிருந்தபோதிலும், தற்போது, இளையோர் பெருமெண்ணிக்கையில், அதுவும், 6 இலட்சம் பேர் கலந்து கொண்டது, அவர்களின் ஆர்வத்தின் வெளிப்பாடாக இருந்தது.

27 January 2019, 15:57