தேடுதல்

Vatican News
பானமா இளம் கைதிகள் மையத்தில் திருத்தந்தை பானமா இளம் கைதிகள் மையத்தில் திருத்தந்தை  (AFP or licensors)

இளம் கைதிகளுக்கு திருத்தந்தை வழங்கிய மறையுரை

வாய்ப்புகளையும் மாற்றங்களையும் உருவாக்குவதற்குப் பதில், முணுமுணுப்பதிலும், பிறரைக் குறைசொல்வதிலும், ஒரு சமுதாயம், தன் சக்தியையெல்லாம் செலவிடுவது, வேதனை தருவதாக உள்ளது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

“இவர் பாவிகளை வரவேற்று அவர்களோடு உணவருந்துகிறாரே” (லூக். 15:2) என இயேசுவைக் குறித்து  பரிசேயரும், மறைநூல் அறிஞரும், முணுமுணுப்பதை, இன்றைய நற்செய்தி வாசகத்தின் துவக்கத்தில் கண்டோம். சமுகத்தின் விரோதத்திற்கு உள்ளான மக்களை நெருங்கிச் சென்று வரவேற்பதற்கு இயேசு அஞ்சியதில்லை. வரி தண்டுவோர், தங்கள் சொந்த மக்களையே சுரண்டி வாழ்ந்ததால், அவர்கள் வெறுக்கப்பட்டனர். ஆனால் இயேசு அவர்களை ஏற்றுக்கொண்டார். ஏனெனில், மனம் மாறத் தேவையில்லாத தொண்ணூற்றொன்பது நேர்மையாளர்களைக் குறித்து உண்டாகும் மகிழ்ச்சியை விட, மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்து விண்ணுலகில் மிகுதியான மகிழ்ச்சி உண்டாகும் (லூக். 15:7), என்பது இயேசுவுக்குத் தெரியும். ஆனால், பரிசேயரும் மறைநூல் அறிஞரும், முணுமுணுப்பதிலும், மன மாற்றங்களைத் தடுப்பதிலும் நிறைவைக் கண்டனர். ஒரு பக்கம் முணுமுணுப்பு, புறங்கூறுதல் எனும் பயனற்ற அணுகுமுறையையும், மறுபுறம், மனமாற்றங்களை வரவேற்கும் அணுகுமுறையையும் காண்கிறோம். இரண்டாவதே இறைவனின் அணுகுமுறை.

இயேசுவின் இந்த அணுகுமுறை பலருக்குப் பிடிக்கவில்லை. தங்களைத் தவிர ஏனையோர், மனந்திரும்பிவர ஒரு வாய்ப்புக் கொடுக்கப்படுவதை அவர்கள் விரும்பவில்லை. நல்லவர்கள், கெட்டவர்கள் என்றும், நீதிமான்கள், பாவிகள் என்றும் தனித்தனியாக அடையாளக் குறிப்புகள் ஒட்டப்பட்டு, பிரித்து வைக்கப்படுவதையே அவர்கள் விரும்புகின்றனர். இந்த அணுகுமுறை அனைத்தையும் கெடுக்கிறது. மற்றவர்களை பாவிகள் என்று ஒதுக்கி வைப்பதால், பிரச்னைகளுக்கு அது நல்லதொரு தீர்வாக அமையும் என இவர்கள் நம்புகின்றனர். இங்கு கண்ணுக்குத் தெரியாத சுவர் ஒன்று எழுப்பப்படுகிறது. இத்தகைய ஒரு போக்குத் தொடருமானால், பிரிவு, குற்றம்சாட்டல், கண்டனம் செய்தல் என்ற சுழலுக்குள் நாம் சிக்கிவிடுவோம். வறியோரை ஒதுக்கி வைக்கும் நிலை உருவாகி, அதிலிருந்து,  இயேசு காலத்து தலைமைக் குரு கயபாவைப்போல்,  “இனம் முழுவதும் அழிந்து போவதைவிட ஒரு மனிதன் மட்டும் மக்களுக்காக இறப்பது நல்லது என்பதை நீங்கள் உணரவில்லை” என்ற  பொறுப்பற்ற வார்த்தைகள் பிறக்கும் (யோவான் 11:50).

ஒரு சமுதாயம், தன் சக்தியையெல்லாம், வாய்ப்புகளையும் மாற்றங்களையும் உருவாக்குவதற்கு செலவழிப்பதை விடுத்து, முணுமுணுப்பதிலும், பிறரைக் குறைசொல்வதிலும், புறங்கூறலிலும்  செலவிடுவது எவ்வளவு வேதனை தருவதாக உள்ளது. நற்செய்தியோ, இதற்கு நேர்மாறான அணுகுமுறையைக் கொண்டுள்ளது. அதுவே இறைவனின் இதயம். தன் குழந்தைகள் திரும்பிவரும்போது, அதனைக் கொண்டாட விரும்புகின்றார் இறைவன் (லூக் 15:11-31). 

வானகத்தந்தையின் இந்த கருணை நிறை அன்பிற்கு சாட்சியாக, இயேசு, தன் இறுதி மூச்சுவரை செயல்பட்டார். இந்த அணுகுமுறை, மன்னிப்பையும், குணப்படுத்தலையும், மனமாற்றத்தையும் ஒன்றிணைத்த மீட்பின் பாதையாகும். பாவிகளோடு உணவருந்தியதன் வழியாக, இயேசு, நல்லவர் தீயவர் என பிரித்து வைக்கும் போக்கைத் தகர்த்தெறிகிறார்.

வரி தண்டுபவர், வரி தண்டுபவராகவே மரணமடைய வேண்டும் என்ற, பரிசேயர்களின் எண்ணம் தவறானது. குற்றஞ்சாட்டலின் கரம் மோலோங்கியிருப்பதுபோல் பலவேளைகளில் தோன்றலாம். ஆனால், அது உண்மையல்ல. நம் வாழ்க்கையில் மாற்றத்தைத் தேடி முன்னேறும்போது, பிறர் உதவியை நாடவேண்டும் என இயேசுவின் அணுகுமுறை நமக்கு அழைப்பு விடுக்கிறது. உங்களை தூக்கிவிடும் குரலுக்கே எப்போதும் செவிமடுங்கள். கடவுள் எப்போதும் நம் அருகிலேயே உள்ளார். அவர் நம்மை கைவிடுவதில்லை. அவர் நம்முடன் இணைந்து வருவது மட்டுமல்ல, நம்முடன் நடக்க நமக்கு நல்லவர்களையும் தருகிறார்.

சகோதர சகோதரிகளே, மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள உங்களிடமும் நிறைய உள்ளன. வாழ்வை எவ்விதம் நன்முறையில் வாழ்வது என்பது குறித்து, எங்களுக்குச் சொல்லித் தாருங்கள். தன் குழந்தைகளில் காணப்படும் நல்ல மாற்றங்களைக் கொண்டாடாத சமூகம், நோயுற்றதாக மாறிவிடும். எதிர்மறைப் போக்குடன், இதயமற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும்போதும், ஒரு சமூகம், நோயுற்றதாகவே மாறுகின்றது. அனைவரையும் ஏற்று, சமூகத்திற்குள் அவர்களை ஒன்றிணைக்கும்போது, வருங்காலத்திற்கான வாய்ப்புக்களை இளையோருக்கு உருவாக்கும்போது, ஒரு சமூகம் பலனுள்ளதாக மாறுகின்றது. நல் வழிகளைக் கற்றுக்கொள்வதற்கு நாம் ஒருவருக்கொருவர் உதவவேண்டும். மாற்றத்திற்கும் ஒருங்கிணைப்பிற்குமான பாதைகளை நோக்கி நடைபோடுங்கள். கடவுள் உங்களை ஆசீர்வதித்து உங்களோடு நடைபோட்டு உறுதிப்படுத்துவார்.

26 January 2019, 14:12