தேடுதல்

பானமாவில் திருத்தந்தை பிரான்சிஸ் பானமாவில் திருத்தந்தை பிரான்சிஸ் 

வரலாற்றின் பக்கங்களிலிருந்து பாடம் கற்க வேண்டும்

சிறந்த ஓர் உலகை கட்டியெழுப்புவதற்கும், அமைதியின் கருவிகளாகச் செயல்படுவதற்கும், நீதியை நிலைநிறுத்தவும், நல்லிணக்கத்தை அதிகரிக்கவும், நம் முயற்சிகளை, தளராது தொடர்ந்து ஆற்ற வேண்டும்

மேரி தெரேசா - வத்திக்கான்

அகில உலக தகன நினைவு நாளை இன்று (சனவரி 27) நினைவுகூர்கின்றோம். கடந்தகால நினைவுகளை, கடந்தகால பெருந்துயரங்களை நாம் நினைவில் வைக்க வேண்டும். நினைவில் வைத்து, இத்தகைய தவறுகள் மீண்டும் இடம்பெறாமல் இருப்பதற்காக, வரலாற்றின் பக்கங்களிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. உலகை மேலும் சிறப்பானதாக அமைப்பதற்கும், அமைதியின் கருவிகளாகச் செயல்படுவதற்கும், நீதியை நிலைநிறுத்தவும், நல்லிணக்கத்தை அதிகரிக்கவும், ஒருங்கிணைப்பை பேணிக்காக்கவும் நம் முயற்சிகளை தளராது தொடர்ந்து ஆற்ற வேண்டும். இவ்வாறு, மூவேளை செப உரையின் இறுதியில் உரைத்த திருத்தந்தை, இந்நாள்களில் உலகில் பல நாடுகளில் இடம்பெற்ற கோரச் சம்பவங்கள் பற்றியும் குறிப்பிட்டார். இரண்டாம் உலகப் போரின் போது, போலந்தில் அமைக்கப்பட்டிருந்த, நாத்சி ஆஷ்விஷ் மரண முகாம் மற்றும் வதை முகாம்களை சோவியத் படைகள் விடுதலை செய்த சனவரி 27ம் நாள் ஒவ்வோர் ஆண்டும், அகில உலக தகன நினைவு நாளாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

பிரேசில் நாட்டின் Minas Gerais மாநிலத்தில் அணை உடைந்தது மற்றும், மெக்சிகோ நாட்டின் Hidalgo மாநிலத்தில் எரிபொருள் திருட்டு நிகழ்வில் இறந்தவர்கள், காயமடைந்தவர்கள், அவர்களின் குடும்பத்தினர் மற்றும் நாட்டினர் அனைவரோடும் ஆன்மீக முறையில் தான் ஒன்றித்திருப்பதாகத் தெரிவித்தார், திருத்தந்தை பிரான்சிஸ். பிரேசிலின் தென் பகுதியில் உள்ள புருமாடின்கோ நகரில் அணை ஒன்று, கடந்த வெள்ளிக்கிழமை உடைந்து நீர் வெளியேறியதில் சுரங்கத்தில் வேலை செய்துகொண்டிருந்த தொழிலாளர்கள் அடித்துச் செல்லப்பட்டனர். இதில் இதுவரை 50க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளனர். மேலும் காணாமல்போயுள்ள 250 பேரின் நிலைமை குறித்து இதுவரை எந்தத் தகவலும் வரவில்லை. மெக்சிகோவில் எரிபொருள் குழாய் வெடித்ததில் 114 பேர் இறந்துள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 January 2019, 16:10