தேடுதல்

நல்ல சமாரியர் எய்ட்ஸ் நோயாளர் காப்பகத்தில் திருத்தந்தை நல்ல சமாரியர் எய்ட்ஸ் நோயாளர் காப்பகத்தில் திருத்தந்தை  

நல்ல சமாரியர் எய்ட்ஸ் நோயாளர் காப்பகத்தில் திருத்தந்தை

ஓர் இல்லத்தை உருவாக்குவது என்பது, ஒரு குடும்பத்தை உருவாக்குவதாகும்

மேரி தெரேசா - வத்திக்கான்

சனவரி 27, இஞ்ஞாயிறன்று பானமா நகரில், உலக இளையோர் நாள் நிறைவு திருப்பலியை நிறைவுசெய்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த இளையோர் நாளுக்கு உதவிய நாற்பது நன்கொடையாளர்களையும் சந்தித்து நன்றி செலுத்தினார். பின்னர், புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் மைதானத்திலிருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்திலுள்ள Casa Hogar El Buen Samaritano என்ற பிறரன்பு மையத்திற்குச் சென்றார் திருத்தந்தை. இந்த இல்லத்திலுள்ள 18 பேரும் எய்ட்ஸ் நோயாளர்கள். 16 வயது முதல் 60 வயதுக்குட்பட்ட இவர்கள் எல்லாருமே, தங்கள் குடும்பங்களால் புறக்கணிக்கப்பட்டவர்கள். இங்கு வருவோர் எவரும் இறப்பதற்காக வருவதில்லை, மாறாக, குணமாகி தங்கள் வாழ்வை முழுமையாய் வாழ்வதற்கு வருகின்றனர் என்ற பொருளில், அந்த பராமரிப்பு இல்லம் அமைக்கப்பட்டுள்ளது. பானமாவில் ஏறத்தாழ முப்பதாயிரம் பேர் எய்டஸ் நோய்க் கிருமிகளால் தாக்கப்பட்டுள்ளனர். அந்நாட்டில் கத்தோலிக்கத் திருஅவை நடத்தும், இத்தகைய நான்கு இல்லங்களிலிருந்தும், இந்த நல்ல சமாரியர் இல்லத்திற்கு, திருத்தந்தையைக் காண வந்திருந்தனர். மொத்தம் அறுபது பேர் கலந்துகொண்ட இந்நிகழ்வில், அவர்களின் சொந்தக் கதைகளையும், அவர்கள் தங்கள் கைகளால் செய்த நினைவுப் பரிசுகளையும் பெற்றுக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருஅவையின் தாய்மை முகம், எவ்வாறு ஓர் இல்லத்தை, ஒரு சமுதாயத்தை உருவாக்குகின்றது என்று கூறினார். ஓர் இல்லத்தை உருவாக்குவது என்பது, ஒரு குடும்பத்தை உருவாக்குவதாகும், ஓர் இல்லத்தில் ஒவ்வொருவரும் ஒன்றிணைந்து வேலை செய்ய வேண்டும். அச்சூழல், பொறுமை மற்றும், ஒருவரை ஒருவர் மன்னிப்பதை கற்றுக்கொடுக்கின்றது. இவ்வாறு அங்கே அற்புதம் நிகழ்கிறது, இங்கு நாம் மீண்டும் மறுபிறவி எடுத்துள்ளதாக உணர்கின்றோம், காரணம், மனிதாபிமானம் மேலும் அதிகமாகவுள்ள ஓர் உலகை கனவு காண்பதற்கு, நம்மை இயன்றவர்களாக்கும் கடவுளின் பராமரிப்பை உணர்கின்றோம் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ். பானமா நகரின் புறநகரிலுள்ள இந்த நல்ல சமாரியர் இல்லத்தில் சந்திப்பை முடித்து, இத்தகைய மேலும் இரு புதிய இல்லங்களுக்கு அடிக்கல்களை மந்திரித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். அங்கேயே ஞாயிறு மூவேளை செப உரையும் ஆற்றினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 January 2019, 16:06