தேடுதல்

ஃபின்லாந்து லூத்தரன் கிறிஸ்தவ ஒன்றிப்பு குழுவுடன் திருத்தந்தை ஃபின்லாந்து லூத்தரன் கிறிஸ்தவ ஒன்றிப்பு குழுவுடன் திருத்தந்தை 

கிறிஸ்தவ ஒன்றிப்பு பயணம் அவரவரது விருப்பமல்ல

போர்களும், காழ்ப்புணர்வுகளும், தேசியவாதமும் நிறைந்துள்ள இன்றைய உலகில், கிறிஸ்தவ சபைகள், பிரிந்து நின்று நீதிக்காக உழைக்க முடியாது

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

கிறிஸ்தவ ஒன்றிப்பு என்பது, ஒரு பயணம் மற்றும், இதற்குள்ள நம் அர்ப்பணிப்பு, நாம் அறிக்கையிடும் பொதுவான விசுவாசத்திற்கு, இன்றியமையாத தேவையாக உள்ளது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்சனிக்கிழமையன்று கூறினார்.

சனவரி 19, இச்சனிக்கிழமையன்று சிறப்பிக்கப்பட்ட புனித ஹென்ரிக் அவர்களின் விழாவை முன்னிட்டு, திருப்பீடத்தில் தன்னைச் சந்தித்த ஃபின்லாந்து நாட்டு லூத்தரன் கிறிஸ்தவ ஒன்றிப்பு பிரதிநிதிகள் குழுவிடம் இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிறிஸ்துவைப் பின்செல்பவர்கள் என்ற தனித்துவத்திலிருந்து கிறிஸ்தவ ஒன்றிப்பு பயணம் பிறக்கின்றது என்று கூறினார்.

கிறிஸ்தவ ஒன்றிப்பு பயணம்

கிறிஸ்தவ ஒன்றிப்புப் பயணத்தை மேற்கொள்ளும்போது, நம் ஒற்றுமை வளர்கின்றது என்றுரைத்த திருத்தந்தை, இந்தப் பொதுவான நம் பயணம், அவரவர் விருப்பப்படி நடைபெற வேண்டியது அல்ல, மாறாக, அது கட்டாயமாக ஆற்றப்பட வேண்டியதாகும் எனவும் தெரிவித்தார். 

நாம் பொதுவில் செபிக்கும்போதும், நற்செய்தியை அறிவிக்க இணையும்போதும், ஏழைகள் மற்றும் தேவையில் இருப்போருக்கு உதவும் போதும், காணக்கூடிய ஒன்றிப்பு இலக்குக்கு இட்டுச்செல்லும் பாதையில், ஒன்றுசேர்ந்து நடக்கின்றோம் என்றும் திருத்தந்தை கூறினார்.

அதேநேரம், நூற்றாண்டுகளாக நம் உறவுகளைக் கறைப்படுத்தியுள்ள புரிந்துகொள்ளாமை, உரசல்கள், முற்சார்பு எண்ணங்கள் போன்றவற்றிற்குப் பிறரன்பில் தீர்வுகண்டு, சந்திப்புக்களை ஊக்குவிப்பதற்கு நாம் அழைக்கப்பட்டுள்ளோம் என்றும் திருத்தந்தை கூறினார்.

நீதிக்குப் பணி

“நீதியை, ஆம், நீதியை மட்டுமே நிலைநிறுத்து (இ.ச.16,20)” என்ற இவ்வாண்டின் கிறிஸ்தவ ஒன்றிப்பு செப வாரத்தின் தலைப்பு பற்றியும் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நாம் ஒருவரைவிட்டு ஒருவர் விலகி இருந்து, நீதிக்காக உழைக்க இயலாது என்றும் குறிப்பிட்டார்.

போர்கள், காழ்ப்புணர்வுகள், தேசியவாதம் மற்றும் பிரிவினையின் பல வடிவங்கள் போன்றவற்றால், கடுமையாய்ப் பாதிக்கப்பட்டுள்ள இன்றைய உலகில், நீதியை நிலைபெறச் செய்வதற்குரிய நம் பொதுவான செபமும், அர்ப்பணமும், காலம்தாழ்த்தப்படாமல் இடம்பெற வேண்டுமெனவும், திருத்தந்தை கேட்டுக்கொண்டார். 

ஃபின்லாந்து கத்தோலிக்க-லூத்தரன் உரையாடல் குழு, திருஅவை, திருநற்கருணை, பொதுவான மறைப்பணி மற்றும் வளர்ச்சி குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், உரையாடலின் முக்கியத்துவம் சுட்டிக்காட்டப்பட்டிருப்பதையும் குறிப்பிட்டுப் பேசினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், “தாழ்மையான இதயத்திலிருந்து எழுப்பப்படுகின்ற செபம், கடவுளால் கேட்கப்படுகின்றது” என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டரில் சனவரி 19, இச்சனிக்கிழமையன்று வெளியாயின.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 January 2019, 15:22