தேடுதல்

உரோம் புனித பவுல் பசிலிக்காவில் திருவழிபாடு உரோம் புனித பவுல் பசிலிக்காவில் திருவழிபாடு  

நாம் பெற்றுள்ள கொடைகள் அனைவரோடும் பகிர்வதற்காகவே

செல்வம் பகிர்ந்துகொள்ளப்படாவிட்டால், சமுதாயம் பிளவுபடும் என்ற மோசே சட்டத்தின் ஞானத்தை நாம் மறந்துள்ளோம் - திருத்தந்தை

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

கிறிஸ்தவர்களாகிய நாம் கடவுளிடமிருந்து பெற்றுள்ள கொடைகள், அனைவரோடும் பகிர்ந்துகொள்வதற்காகவே என்பதை ஏற்க வேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வெள்ளியன்று கேட்டுக்கொண்டார்.

கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரத்தின் முதல் நாளாகிய, சனவரி 18, இவ்வெள்ளி மாலை 5.30 மணிக்கு, உரோம் புனித பவுல் பசிலிக்காவில், திருப்புகழ்மாலை திருவழிபாட்டை தலைமையேற்று நடத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அவ்வழிபாட்டில் வாசிக்கப்பட்ட (இ.ச.16,9-20) இணைச்சட்ட நூலிலிருந்து மறையுரை சிந்தனைகளை வழங்கினார்.

இந்த இணைச்சட்ட நூல் பகுதி, எபிரேய சமுதாயம் ஒவ்வோர் ஆண்டும் கொண்டாடும் மூன்று முக்கிய விழாக்கள் (புளிப்பற்ற அப்ப விழா, வாரங்கள் விழா, கூடார விழா) பற்றி விளக்குகின்றது என்றும், இந்த ஒவ்வொரு விழாவும், இஸ்ரேல் மக்கள், கடவுளிடமிருந்து பெற்ற நன்மைகளுக்கு நன்றிகூருமாறு அழைப்பு விடுக்கின்றது என்றும், இந்தக் கொண்டாட்டத்திலிருந்து எவருமே விலக்கி வைக்கப்படக் கூடாது என்றும், திருத்தந்தை கூறினார்.

இந்த விழாக்களுக்கும், இஸ்ரேலில் நீதிபதிகளின் நியமனத்திற்கும் இடையேயுள்ள தொடர்ப பற்றி விளக்கிய திருத்தந்தை, மக்கள் நீதியைக் கடைப்பிடிக்க வேண்டுமென்று  இந்த விழாக்கள் அறிவுறுத்துகின்றன எனவும், அடிப்படையில், எல்லாரும் சமமானவர்கள்

மற்றும், எந்த விதிவிலக்கும் இல்லாமல், எல்லாருமே கடவுளின் இரக்கத்தைச் சார்ந்து இருக்கின்றவர்கள் எனவும், மறையுரையாற்றினார்.

சமத்துவமின்மை நல்லிணக்கத்தைப் பாதிக்கின்றது

இதுவே, இவ்வாண்டு கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரத்திற்கு தலைப்பைத் தேர்ந்தெடுத்த இந்தோனேசிய மக்களுக்குத் தூண்டுதலாய் அமைந்திருந்தது என்றும், தங்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சி, சமத்துவமின்மையை உருவாக்குகின்றது என்றும், இந்த சமத்துவமின்மையே பன்மைத்தன்மைகொண்ட இந்தோனேசிய சமுதாயத்தின் நல்லிணக்கத்தை இடருக்கு உள்ளாக்குகின்றது என்றும், அம்மக்கள் கவலைப்படுகின்றனர் என திருத்தந்தை கூறினார்.

எனினும், இந்த பிரச்சனை, இந்தோனேசியாவோடு மட்டும் நின்றுவிடாமல், உலகெங்கும் நிலவுகின்றது, செல்வம் பகிர்ந்துகொள்ளப்படாவிட்டால், சமுதாயம் பிளவுபடும் என்ற மோசே சட்டத்தின் ஞானத்தை நாம் மறந்துள்ளோம் என்றும், திருத்தந்தை கூறினார்.

பொறுப்புடன் பகிர்தல்

மன வலிமை கொண்டவர்களாகிய நாம், வலுவற்றவர்களின் குறைபாடுகளைத் தாங்கிக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறோம் (உரோ.15,1) என பவுலடிகளார், கிறிஸ்தவ சமுதாயத்திற்குக் கூறியது, இதே சிந்தனையிலேதான் என்றுரைத்த திருத்தந்தை, தோழமையுணர்வும், பொறுப்புடன் பகிர்தலும், கிறிஸ்தவ சமுதாயத்தை நிர்வாகம் செய்யும் சட்டங்களாக அமைய வேண்டும் என்றும் உரைத்தார்.

கிறிஸ்தவர்கள் மத்தியில் நிலவும் பிரிவினைகள் பற்றியும் மறையுரையில் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வலுவற்றவர்கள் மற்றும் தேவையில் இருப்பவர்கள் பற்றி மறக்கின்ற ஆபத்தில் இருக்கின்ற நாம் பெற்றுள்ள கொடைகள், நமக்குரியது  மட்டுமல்ல, அனைவரோடும் பகிர்ந்துகொள்ளப்பட வேண்டியவை என்பதை உணர வேண்டுமென்றும் உரையாற்றினார்.

“நீதியை, ஆம், நீதியை மட்டுமே நிலைநிறுத்து (இ.ச.16,20)” என்ற தலைப்பில், இவ்வெள்ளியன்று கிறிஸ்தவ ஒன்றிப்பு செப வாரம் துவங்கியுள்ளது. இவ்வாரத்திற்குரிய செபங்களை, இந்தோனேசிய கிறிஸ்தவர்கள் தயாரித்துள்ளனர்.

மேலும், கிறிஸ்தவ ஒன்றிப்பு செப வாரத்தை மையப்படுத்தி, டிசம்பர் 18, இவ்வெள்ளி மாலையில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்ட டுவிட்டரில், இன்று, கிறிஸ்தவ ஒன்றிப்பு செப வாரம் துவங்குகிறது, இந்த மாபெரும் கொடைக்காக, நாம் எல்லாரும் கடவுளிடம் மன்றாடுவோம் என்ற சொற்கள் பதிவாகியிருந்தன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 January 2019, 15:28