தேடுதல்

அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்கள் பிரதிநிதிகளுடன் திருத்தந்தை அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்கள் பிரதிநிதிகளுடன் திருத்தந்தை  

அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்களுக்கு திருத்தந்தை கடிதம்

நம்பகத்தன்மை, நம்பிக்கையில் பிறக்கின்றது. நம்பிக்கை, நேர்மை, தாழ்ச்சி, மற்றும் அனைவருக்கும் மனத்தாராளத்துடன் பணியாற்றுவதில் பிறக்கின்றது

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

கத்தோலிக்கத் திருஅவையின் நம்பகத்தன்மை மற்றும், விசுவாசிகள் மத்தியில் நம்பிக்கையை உறுதிபெறச் செய்வதற்கு, ஆயர்களின் மனநிலையில் மாற்றம் அவசியம் என்று, அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்களுக்கு எழுதியுள்ள கடிதம் ஒன்றில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கூறியுள்ளார்.

சனவரி 02, இப்புதனன்று, சிக்காகோ நகருக்கருகே அமைந்துள்ள குருத்துவ பயிற்சி இல்லமொன்றில் தங்கள் ஆண்டு தியானத்தைத் துவங்கியுள்ள, அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உடன்பிறப்பு உணர்வுகொண்ட தோழமை மற்றும் மனமாற்றத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

அமெரிக்க ஐக்கிய நாட்டு தலத்திருஅவையில், அருள்பணியாளர்கள் மற்றும் ஆயர்கள் சிலரால் இழைக்கப்பட்ட பாலியல் கொடுமைகளுக்கு எதிராகவும், திருஅவையின் நம்பகத்தன்மையை மீண்டும் உருவாக்கும் வகையிலும், செபச்சூழலில் எடுக்கப்படும் நடவடிக்கைகளை ஊக்குவித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

திருஅவையின் நம்பகத்தன்மை

மிகுந்த குழப்பம் மற்றும் நிச்சயமற்றதன்மை ஏற்படும் நேரங்களில், நம் ஆண்டவர் நமக்குக் கொடுத்துள்ள பணியில், அவர் நம்மிடம் கேட்பதற்குச் செவிமடுக்கும்பொருட்டு, மிகுந்த கவனமுடன், தெளிந்துதேர்வு செய்ய வேண்டியது அவசியம் என்று, திருத்தந்தை கூறியுள்ளார். அதேநேரம், நாம் எடுக்கின்ற பல செயல்பாடுகள், உதவியாகவும், நன்மையாகவும், அவசியமானவையாகவும் இருக்கலாம், ஆனால், அவை, நற்செய்தியின் நறுமணத்தைக் கொண்டிருக்காது என்றும் திருத்தந்தை எச்சரித்துள்ளார்.

அதாவது, குணமாக்குதல், நோயைவிட, மோசமானதாக மாறிவிடக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ள, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அதிகாரம் மற்றும் மனசாட்சியின் குரலை மீறுவதாலும், பாலியல் கொடுமைகளாலும், திருஅவையின் நம்பகத்தன்மை கடுமையாய்ப் பாதிப்புக்குள்ளாகியுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

உறுதியான புதிய அணுகுமுறை

பாவங்களையும், குற்றங்களையும் மறைப்பதற்கும், மறுப்பதற்கும் எடுக்கப்பட்ட முயற்சிகள், திருஅவையின் நம்பகத்தன்மைக்கு, மேலும் அதிகப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்நிலையை அகற்றுவதற்கு, புதுப்பிக்கப்பட்ட மற்றும் உறுதியான புதிய அணுகுமுறை அவசியம் என்பதை வலியுறுத்தியுள்ளார்.  

நம்பகத்தன்மை, நம்பிக்கையில் பிறக்கின்றது எனவும், நேர்மை, தாழ்ச்சி, மற்றும் அனைவருக்கும் குறிப்பாக, ஆண்டவரின் இதயத்திற்கு மிக அன்புடையவர்களுக்கு, மனத்தாராளத்துடன் பணியாற்றுவதில், நம்பிக்கை பிறக்கின்றது எனவும், திருத்தந்தை கூறியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 January 2019, 14:44