தேடுதல்

ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவையின் புலம்பெயர்ந்தோர்-குடிபெயர்ந்தோர் துறை, இரு நூல்களை வெளியிட்டது ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவையின் புலம்பெயர்ந்தோர்-குடிபெயர்ந்தோர் துறை, இரு நூல்களை வெளியிட்டது 

"நம்பிக்கையின் பாதைகளில் ஒளிச் சுடர்கள்"

புலம்பெயர்ந்தோர் மற்றும் மனித வர்த்தகம் குறித்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஆற்றியுள்ள உரைகள் மற்றும் வழங்கியுள்ள செய்திகளின் தொகுப்பாக, "நம்பிக்கையின் பாதைகளில் ஒளிச் சுடர்கள்" என்ற நூல் வெளியானது

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

கடவுளின் வாக்குறுதியை நம்பி, வயதான காலத்தில், தன் சொந்த ஊரை விட்டுப் புறப்பட்ட ஆபிரகாமும், சாராவும், எண்ணிலடங்கா கோடான கோடி மக்களுக்கு ஓர் உந்து சக்தியாக விளங்குகின்றனர் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வியாழன்ன்று வெளியான ஒரு புதிய நூலின் அணிந்துரையில் கூறியுள்ளார்.

மனித வர்த்தகத்தின் கொடுமைகளை விளக்கும் வகையிலும், அக்கொடுமைகளைக் களைவதற்கு உரிய வழிகளைக் குறித்தும் இரு நூல்களை, ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவையைச் சேர்ந்த புலம்பெயர்ந்தோர்-குடிபெயர்ந்தோர் துறை, இவ்வியாழனன்று வெளியிட்டது.

குடிபெயர்ந்தோர், புலம்பெயர்ந்தோர் மற்றும் மனித வர்த்தகம் குறித்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஆற்றியுள்ள உரைகள் மற்றும் செய்திகளின் தொகுப்பாக, "நம்பிக்கையின் பாதைகளில் ஒளிச் சுடர்கள்" என்ற தலைப்பில் ஒரு நூல் வெளியானது.

2013ம் ஆண்டு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் தலைமைப்பணியைத் துவக்கிய வேளையில், உயிர்ப்பு திருநாளன்று, அவர் வழங்கிய 'Urbi et Orbi' செய்தியில் துவங்கி, 2017ம் ஆண்டு, பங்களாதேஷ், டாக்கா நகரில் திருத்தந்தை மேற்கொண்ட திருத்தூதுப் பயணத்தின்போது, அருள்பணியாளர், துறவியர் ஆகியோருக்கு வழங்கிய உரை முடிய, இப்பிரச்சனையைக் குறித்து, திருத்தந்தை வழங்கியுள்ள கருத்துக்கள், மேற்கோள்களாக இந்நூலில் இடம்பெற்றுள்ளன.

485 பக்கங்கள் கொண்ட இந்நூலில், “இறைவா உமக்கே புகழ்” என்ற திருமடல், ஏனைய திருமடல்கள், மற்றும் திருத்தூது அறிவுரை மடல்களில், மனித வர்த்தக்த்தைக் குறித்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கியுள்ள கருத்துக்களும் இடம்பெற்றுள்ளன.

"மனித வர்த்தகத்தைக் குறித்து மேய்ப்புப்பணி கண்ணோட்டங்கள்" என்ற தலைப்பில், வெளியான மற்றொரு சிறு நூல், "கொடுமைத் தளைகளை அவிழ்ப்பதும், நுகத்தின் பிணையல்களை அறுப்பதும் ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்புவதும், எவ்வகை நுகத்தையும் உடைப்பதும் அன்றோ நான் தேர்ந்துகொள்ளும் நோன்பு!" (எசாயா 58) என்று இறைவாக்கினர் எசாயா நூலில் கூறப்பட்டுள்ள சொற்களுடன் ஆரம்பமாகிறது.

37 பக்கங்கள் கொண்ட இச்சிறு நூல், மனித வர்த்தகத்தில் துன்புறுவோரின் பாதுகாவலராக கருதப்படும் புனித ஜோசபின் பக்கித்தா அவர்கள் வழியே இறைவனுக்கு எழுப்பப்படும் செபத்துடன் நிறைவு பெறுகிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 January 2019, 15:08