தேடுதல்

ஆஸ்திரியாவுக்கும், ஜெர்மனிக்கும் இடைப்பட்ட பகுதியில் நடந்து செல்லும் குடிபெயர்ந்தோர் ஆஸ்திரியாவுக்கும், ஜெர்மனிக்கும் இடைப்பட்ட பகுதியில் நடந்து செல்லும் குடிபெயர்ந்தோர் 

புலம்பெயர்ந்தோரை வரவேற்குமாறு அழைப்பு

இயேசுவுக்கு பெத்லகேம் வீடுகள் மூடப்பட்டிருந்தது போன்று, நம் இதயங்கள் மூடப்படாதிருக்கட்டும்

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

“வரவேற்கப்படாமல் இருப்பதன் வலியை இயேசு நன்றாகவே அறிந்திருந்தார் என்றும், இயேசுவுக்கு பெத்லகேம் வீடுகள் மூடப்பட்டிருந்தது போன்று, நம் இதயங்கள் மூடப்படாதிருக்கட்டும்” என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்செவ்வாயன்று தன் டுவிட்டர் செய்தியில் கேட்டுக்கொண்டுள்ளார்.

டிசம்பர் 18, இச்செவ்வாயன்று கடைப்பிடிக்கப்பட்ட புலம்பெயர்ந்தோர் உலக நாளை மையப்படுத்தி டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ள திருத்தந்தை, புலம்பெயர்ந்தோரை நாம் வரவேற்குமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

மேலும், புலம்பெயர்ந்தோருடன் ஒருமைப்பாட்டுணர்வை வெளிப்படுத்தி அவர்களுக்கு நற்பணியாற்றிவரும், உலகளாவிய காரித்தாஸ் அமைப்பு, பயணத்தைப் பகிர்வோம் எனப்படும் அதன் உலகளாவிய நடவடிக்கையில், புலம்பெயர்ந்தோர் மற்றும் குடிபெயர்ந்தோருக்கு, வருங்கால நம்பிக்கையை ஊட்டுவதற்கு முயற்சித்து வருகின்றது.

புலம்பெயர்ந்தோர் மற்றும் குடிபெயர்ந்தோருடன், பத்து இலட்சம் கிலோ மீட்டர் உலகளாவிய திருப்பயணம் என்ற நடவடிக்கையை, கடந்த அக்டோபரில் தொடங்கிவைத்த உலகளாவிய காரித்தாஸ் அமைப்பின் தலைவர், கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே அவர்கள், உரோம் நகரின் தெருக்கள் வழியாக நடந்து, தூய பேதுரு பசிலிக்காவில் அதனை நிறைவு செய்தார்.

கடந்த அக்டோபரிலிருந்து, சொமாலியா, சிலே, கிரேக்கம், ஈராக், சிரியா, ஹொண்டூராஸ், நியுசிலாந்து, ஜோர்டன், சுவீடன், தாய்லாந்து, கானடா, அமெரிக்க ஐக்கிய நாடு, இத்தாலி, பிரிட்டன் உட்பட பல்வேறு நாடுகளில், காரித்தாஸ் அமைப்பின் உலகளாவிய திருப்பயணம் நடைபெற்றுள்ளது. (Zenit)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 December 2018, 15:51