தேடுதல்

Vatican News
புனித பேதுரு வளாகத்தின் மேல் மாடத்திலிருந்து திருத்தந்தை பிரான்சிஸ் வழங்கிய ‘ஊர்பி எத் ஓர்பி’ சிறப்பு ஆசீர் புனித பேதுரு வளாகத்தின் மேல் மாடத்திலிருந்து திருத்தந்தை பிரான்சிஸ் வழங்கிய ‘ஊர்பி எத் ஓர்பி’ சிறப்பு ஆசீர்  (Vatican Media)

திருத்தந்தையின் ‘ஊர்பி எத் ஓர்பி’ கிறிஸ்மஸ் செய்தி

இறைவனைத் தேடும் ஒவ்வொருவருக்கும் இறைமுகத்தை வெளிப்படுத்தவே இயேசு இவ்வுலகிற்கு வந்தார். இறைவனின் முகம் ஒரு மனித முகத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. – திருத்தந்தையின் கிறிஸ்மஸ் செய்தி

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

அன்புள்ளங்களே, ஆண்டிற்கு இருமுறை, அதாவது, கிறிஸ்து பிறப்பு பெருவிழாவன்றும், கிறிஸ்து உயிர்ப்பு பெருவிழாவன்றும், திருத்தந்தையர், ‘ஊர்பி எத் ஓர்பி’ எனப்படும், உரோம் நகருக்கும் உலகுக்கும் ஆன சிறப்புச் செய்தியை வழங்குவது மரபு.

24ம் தேதி இரவு, திருப்பலியை நிறைவேற்றி, கிறிஸ்து பிறப்பு குறித்த மறையுரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 25ம் தேதி நண்பகல், உரோம் நகரின் புனித பேதுரு பேராலய வளாகத்தின் மேல் மாடத்தில் தோன்றி, தன் ‘ஊர்பி எத் ஓர்பி’ செய்தியை வழங்கினார். இதோ, அதன் தமிழாக்கம்:

கிறிஸ்து பிறப்பு நல்வாழ்த்துக்கள்

அன்பு சகோதரர், சகோதரிகளே, கிறிஸ்து பிறப்பு நல்வாழ்த்துக்கள்.

உரோம் நகரின் விசுவாசிகள், திருப்பயணிகள், இந்த வாழ்த்துரை வழியே நம்மோடு தொடர்பிலிருக்கும் அனைவருக்கும், பெத்லகேமில் ஒலித்த மகிழ்ச்சி நிறை அறிவிப்பை புதுப்பிக்கிறேன்: “உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக! உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக!” (லூக்கா 2:14). மாட்டுத்தொழுவம் நோக்கி இடையர்கள் விரைந்து சென்றதுபோல், நாமும், ‘குழந்தையைத் துணிகளில் சுற்றித் தீவனத் தொட்டியில் கிடத்தியிருப்பதைக் காண்பீர்கள்’ (Lk 2:12) என்ற  உன்னத அடையாளத்தின் முன்னர் சிறிது நேரம் நிற்போம்.

நமக்காக கன்னி மரியாவிடம் பிறப்பெடுத்த இந்தக் குழந்தை நமக்குச் சொல்ல வருவதென்ன? கிறிஸ்து பிறப்பு உலகிற்கு வழங்கும் செய்தி என்ன? இறைவன் ஒரு நல்ல தந்தை, நாமனைவரும் சகோதரர் சகோதரிகள் என்பதே, கடவுள் வழங்கும் செய்தி. இந்த உண்மையே, மனித குலம் குறித்த கிறிஸ்தவ கண்ணோட்டத்தின் அடிப்படை. இயேசு கிறிஸ்து நம் மீது பொழிந்துள்ள உடன்பிறந்த உணர்வு இல்லையெனில், நீதியான ஓர் உலகை நோக்கிய நம் முயற்சிகள் எல்லாம், தோல்வியாகவும், நம் உயரிய திட்டங்கள் கூட ஆன்மா அற்றதாகவும், வெறுமையானதாகவும் இருக்கும். இதன் காரணமாக, என் கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள், உடன்பிறந்த உணர்வுடன் கூடிய வாழ்த்துக்களாக உள்ளன. ஒவ்வொரு நாட்டின், கலாச்சாரத்தின், தனிமனிதர்களிடையே உடன்பிறந்த உணர்வு நிலவ வாழ்த்துக்கள்.

மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டிருந்தாலும், ஒருவர் மற்றவரை மதித்து செவிமடுக்கும் உடன்பிறந்த உணர்வு கொண்ட நிலைகளுக்கு வாழ்த்துக்கள். பல்வேறு மதங்களின் அங்கத்தினர்களிடையே உடன்பிறந்த உணர்வு நிலவட்டும்.

மனித முகத்தில் வெளிப்படுத்தப்பட்ட இறைவனின் முகம்

இறைவனைத் தேடும் ஒவ்வொருவருக்கும் இறைமுகத்தை வெளிப்படுத்தவே இயேசு இவ்வுலகிற்கு வந்தார். இறைவனின் முகம் ஒரு மனித முகத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அது, ஒரு வானத்தூதரின் முகத்தில் அல்ல, மாறாக, ஒரு குறிப்பிட்ட இடத்தில், குறிப்பிட்ட நேரத்தில் பிறந்த ஒரு மனித முகத்தில் வெளிப்படுத்தப்பட்டது. இறைவன் மனுவுரு எடுத்ததால், அன்பு, ஏற்புடைமை, மற்றும், இந்த ஏழை மனித குலத்தின் மீது அவர் கொண்டுள்ள மதிப்பு  ஆகியவற்றின் வழியாக, மீட்பு வருகிறது என்பதை எடுத்துரைக்கிறார். இந்த  அன்பு, ஏற்புடைமை, மற்றும், இந்த ஏழை மனித குலத்தின் மீது கொண்டுள்ள மதிப்பு ஆகியவற்றை நாம், வெவ்வேறு இனங்களாக, மொழிகளாக, கலாச்சாரங்களாக பகிர்ந்துகொள்கிறோம். இருப்பினும் நாமனைவரும் மனிதகுலத்தில் சகோதரர், சகோதரிகளே.

நம்மிடையே காணப்படும் வேறுபாடுகள், நம்மைப் பிரிப்பதோ நமக்கு ஆபத்தை வருவிப்பதோ அல்ல. அவை, வளத்தின் ஆதாரமே. ஒரு ‘மொசைக்’ ஓவியத்தை உருவாக்கும்போது, ஒரு சில நிறங்கள் அல்ல, மாறாக, பல்வேறு நிறங்கள் கொண்ட சிறு கற்களை, அந்த ஓவியம் கொண்டிருப்பது அவசியம்.

சகோதரர், சகோதரிகளாகிய நாம் ஒவ்வொருவரும் வேறுபட்டவர்கள் என்பதை நம் குடும்ப அனுபவம் சொல்லித் தருகிறது. நாம், நம்மிடையே, சில வேளைகளில், புரிதல் இல்லாதவர்களாக இருந்தாலும், முறிக்கமுடியாத ஓர் இணைப்புச் சங்கிலி நம்மைப் பின்னிப் பிணைத்துள்ளது, மற்றும், நம் பெற்றோரின் அன்பு, நாம் ஒருவரையொருவர் அன்புகூர உதவுகிறது. இதுவே, பரந்துவிரிந்த மனித குல குடும்பத்திலும் உண்மையாகிறது. இங்கு, கடவுளே, நம் பெற்றோராகவும், நம் உடன்பிறந்த உணர்வின் அடித்தளமாகவும், பலமாகவும் உள்ளார். தனி மனிதர்களாகிய நம்மை ஒன்றிணைத்துக் கொண்டுவர உதவும் உடன்பிறந்த உணர்வு சங்கிலியை நாம் மீண்டும் கண்டுகொள்ள, இந்த கிறிஸ்து பிறப்பு விழா நமக்கு உதவட்டும்.

புனித பூமியில் அமைதி நிலவ...

தன் அன்பின் முகத்தை வெளிப்படுத்த இறைவன் தேர்ந்துகொண்ட மண்ணில் கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக இடம்பெற்றுவரும் மோதல்களை முடிவுக்குக் கொணரும் நோக்கத்தில், பேச்சுவார்த்தைகளை மீண்டும் துவக்கி, அமைதியின் பாதையில் நடைபோட, இஸ்ராயேலர்களுக்கும், பாலஸ்தீனியர்களுக்கும், இந்த கிறிஸ்மஸ் தூண்டுதலாக இருக்கட்டும்.

சிரியா, மற்றும் ஏமன் நாட்டு மக்களுக்காக...

தாக்குதலின் கீழ் உள்ள அன்பு நிறைந்த சிரியா நாட்டில், பல ஆண்டுகளாக நடைபெறும் போருக்குப்பின் தற்போது, உடன்பிறந்த உணர்வை, அந்நாட்டவர், மீண்டும் கண்டுகொள்ள, குழந்தை இயேசு அனுமதிப்பாராக. சிரியா நாட்டு மக்கள், குறிப்பாக, தங்கள் சொந்த நாட்டை விட்டு வெளியேறி, வேறு நாடுகளில் அடைக்கலம் புகுந்திருக்கும் மக்கள், சொந்த இடங்களுக்கு திரும்பிச் சென்று, அமைதியில் வாழ உதவும் வகையில், அனைத்துலக சமுதாயம், பிரிவு எண்ணங்களையும், சுய நலத்தையும் ஒதுக்கி வைத்து, உறுதியான ஓர் அரசியல் தீர்வு காண உழைக்கட்டும்.

என் எண்ணங்கள் தற்போது ஏமன் நாட்டை நோக்கித் திரும்புகின்றன. அனைத்துலக சமுதாயத்தின் உதவியுடன் அங்கு கொணரப்பட்டுள்ள போர் நிறுத்தம், அந்நாட்டில் போராலும், பஞ்சத்தாலும் துன்புறும் குழந்தைகள், மற்றும், மக்களுக்கு, துயர்துடைப்பைக் கொணர்வதாக.

ஆப்ரிக்க கண்டத்தின் அமைதிக்காக...

உணவு பாதுகாப்பு, மற்றும், மனிதாபிமான உதவிகள் தேவைப்படும் இலட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோர், மற்றும், குடிபெயர்ந்தோர், வாழும் ஆப்ரிக்கா கண்டத்தைக் குறித்தும் எண்ணிப் பார்க்கின்றேன்.

ஆப்ரிக்காவின் அரசியல் மற்றும் சமூக வாழ்வில் ஒப்புரவின் பாதையை ஊக்குவிக்க உழைக்கும் அனைத்து மனிதர்களின் முயற்சியை ஆசீர்வதித்து, அக்கண்டம் முழுவதும் உடன்பிறந்த உணர்வின் புது விடியல் மலரும் நோக்கத்தில், அமைதியின் அரசராம் இத்திருக்குழந்தை ஆயுத மோதல்களை அமைதிப்படுத்துவாராக.

கொரிய தீபகற்பம், மற்றும் வெனிசுவேலா

கொரிய தீபகற்பத்தின் உடன்பிறந்த உணர்வுப் பிணைப்புகளை ஊக்கமூட்டி, அண்மையில் எடுக்கப்பட்டுள்ள ஒன்றிணைப்பின் பாதையும், ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள தீர்வுகளும், அனைவரின் நலவாழ்வையும், முன்னேற்றத்தையும், மனதில் கொண்டதாக செயல்பட, இந்த கிறிஸ்மஸ் உதவுவதாக.

வெனிசுவேலா நாட்டில், மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவவும், நாட்டின் வளர்ச்சிக்கு பங்காற்றவும், தேவையான இணக்க வாழ்வைக் கண்டுகொண்டு, உடன்பிறந்த உணர்வுடன் அந்நாட்டு மக்கள் அனைவரும் உழைத்திட, இந்த ஆசீர்வதிக்கப்பட்ட காலம் அனுமதிப்பதாக.

உக்ரைன் மற்றும் நிக்கராகுவா மக்களுக்காக...

தாமதமாக வந்து கொண்டிருக்கும் நீடித்த அமைதிக்காக ஏங்கிக் கொண்டிருக்கும் உக்ரைன் நாட்டிற்கு, புதிதாக பிறந்துள்ள நமதாண்டவர், துயர் துடைப்பைக் கொணர்வாராக. துன்பங்களிலிருந்து மீண்டுவரவும், மாண்புடன் கூடிய வாழ்க்கை நிலைகளை தன் குடிமக்களுக்கு வழங்கவும் ஆவல் கொண்டுள்ள நாடுகள்,  அனைவரின் உரிமைகளையும் மதிக்கும் அமைதியை தங்கள் அடிப்படையாகக் கொண்டிருக்கட்டும். உக்ரைனின் கிறிஸ்தவ சமூகத்தோடு நான் மிக நெருக்கமாக உள்ளேன். சமுதாயத்தில்  அவர்கள், உடன்பிறப்பு உணர்வையும், நட்புணர்வையும் வளர்த்திட ஆவல் கொள்கின்றேன்.

குழந்தை இயேசுவின் முன், நிக்கராகுவா மக்கள் அனைவரும் தங்களை உடன்பிறந்தோராய் கண்டுகொள்ளட்டும். பிரிவினைகளையும் முரண்பாடுகளையும் களைந்து,  ஒப்புரவை ஊக்குவித்து, நாட்டின் வருங்காலத்தை, அவர்கள், ஒன்றிணைந்து கட்டியெழுப்பட்டும்.

சிறுபான்மையினராக துன்புறும் கிறிஸ்தவர்கள்

கருத்தியல் கொள்கைகள், கலாச்சார மற்றும் பொருளியல் அடிமை முறைகளுக்கு உள்ளாக்கப்பட்டு, தங்கள் சுதந்திரமும் தனித்துவமும் பறிபோகும் நிலைகளால் துன்புறும் மக்களைக் குறித்தும், பசியாலும், கல்வின்மையாலும், மருத்துவ வசதிகள் இன்மையாலும் துன்புறும் மக்களைக் குறித்தும்  இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

கிறிஸ்து பிறப்பு விழாவைச் சிறப்பிப்பதில் சிரமங்களைச் சந்திக்கும், குறிப்பாக, சிறுபான்மையினராக சில நாடுகளில் வாழும் கிறிஸ்தவர்கள் நோக்கி, தனிப்பட்ட முறையில், என் எண்ணங்கள், செல்கின்றன. இவர்களும், மத சிறுபான்மையினரும், அமைதியில் வாழவும், தங்கள் உரிமைகள் அங்கீகரிக்கப்படுவதை, குறிப்பாக, இவர்களின் மத உரிமைகள் மதிக்கப்படுவதை காணவும், இறைவன் உதவுவாராக.

இந்தப் புல்லணையில், இரவின் குளிரில் படுத்திருக்கும் இந்தச் சிறு குழந்தை, உலகின் அனைத்துக் குழந்தைகளையும், கைவிடப்பட்ட மனிதர்களையும் கண்ணோக்குவாராக. மீட்பரின் பிறப்பில், அமைதியையும், ஆறுதலையும், நாம் கண்டுகொள்வோமாக. நாம் அனைவரும் நம் ஒரே வானகத் தந்தையால் அன்புகூரப்படுகிறோம் என்பதை உணர்ந்து, நாம் அனைவரும் சகோதரர், சகோதரிகள் என்பதை கண்டுகொண்டு, அதே உணர்வுடன் வாழ்வோமாக.

இவ்வாறு, தன் ‘ஊர்பி எத் ஓர்பி’ எனும் ஊருக்கும் உலகுக்குமான கிறிஸ்மஸ் சிறப்புச் செய்தியை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவருக்கும் தன் கிறிஸ்மஸ் வாழ்த்துக்களையும் வழங்கினார். 

இறுதியில் அனைவருக்கும் ‘ஊர்பி எத் ஓர்பி’ சிறப்பு ஆசீரையும் அளித்தார்.

25 December 2018, 13:21