தேடுதல்

இந்தோனேசியாவில் சுனாமியை உருவாக்கிய Anak Krakatau எரிமலை வெடிப்பு இந்தோனேசியாவில் சுனாமியை உருவாக்கிய Anak Krakatau எரிமலை வெடிப்பு  

இந்தோனேசிய மக்களுக்காக திருத்தந்தையின் செபம்

விண்ணகத் தந்தை எவரையும் கைவிடுவதில்லை. உண்மை குடும்பச் சூழலை, திருஅவையில், கிறிஸ்தவர்கள் கண்டுகொள்ளலாம்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

இயற்கைப் பேரழிவுகளால் பாதிக்கப்பட்டுள்ள இந்தோனேசிய மக்களை நோக்கி தன் எண்ணங்கள் செல்வதாகவும், அனைத்துலக சமுதாயத்தின் ஆதரவை அவர்களுக்காக வேண்டுவதாகவும் அழைப்பு விடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

தன் ஞாயிறு மூவேளை செப உரையின் இறுதியில், இந்தோனேசிய சுனாமி அழிவு குறித்து தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  இதில் உயிரிழந்தவர்களுக்காகவும், அவர்களின் உறவினர்கள், மற்றும், நண்பர்களுக்காகவும் தான் செபிப்பதாகவும், இந்த துயர் நிகழ்வால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இறைவனின் ஆறுதலை வேண்டுவதாகவும் கூறினார்.

இந்தோனேசியாவின் ஜாவா மற்றும் சுமத்ரா தீவுகளுக்கிடையே அமைந்துள்ள Anak Krakatau எரிமலை, சனிக்கிழமை இரவு கடலுக்கடியில்  திடீரென வெடித்ததால் ஏற்பட்ட நிலச்சரிவு உருவாக்கிய சுனாமியால், இதுவரை 281 பேர் வரை இறந்துள்ளதாகவும், 1016 பேர் காயமடைந்துள்ளதாகவும், 57 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

600க்கும் மேற்பட்ட வீடுகளும், 400க்கும் அதிகமான படகுகளும் சேதமாகியுள்ள நிலையில், 11,687 பேர் இடம் பெயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த கிறிஸ்து பிறப்புக் காலத்தில், தங்கள் குடும்பங்களையும் சொந்த நாட்டையும் விட்டு தூரத்தில் வாழும் மக்களுக்கு தனிப்பட்ட முறையில் தன் கிறிஸ்மஸ் வாழ்த்துக்களை வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், விண்ணகத் தந்தை எவரையும் கைவிடுவதில்லை என்றும், உண்மையான குடும்பச் சூழலை திருஅவையில் கிறிஸ்தவர்கள் கண்டுகொள்ளலாம், கிறிஸ்தவ சமூகத்தின் கதவுகள் எப்போதும் திறந்தே உள்ளன எனவும் மேலும் கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 December 2018, 13:02