தேடுதல்

Vatican News
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் Taize குழுமத்தின் உலகத்தலைவர் அருள்சகோதரர் அலாய் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் Taize குழுமத்தின் உலகத்தலைவர் அருள்சகோதரர் அலாய் 

ஐரோப்பிய இளையோர் மாநாட்டிற்கு திருத்தந்தையின் செய்தி

மத்ரித் நகரில் Taize குழுமம் ஏற்பாடு செய்துள்ள 41வது ஐரோப்பிய இளையோர் மாநாட்டிற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செய்தியொன்றை அனுப்பியுள்ளார்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

டிசம்பர் 28, இவ்வெள்ளி முதல், சனவரி 1, புத்தாண்டு நாள் முடிய, ஸ்பெயின் நாட்டின் மத்ரித் நகரில் Taize குழுமம் ஏற்பாடு செய்துள்ள ஐரோப்பிய இளையோர் மாநாட்டிற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செய்தியொன்றை அனுப்பியுள்ளார்.

பல்வேறு கலாச்சாரங்களும், மத நம்பிக்கைகளும் கொண்ட இளையோர், ஒருவரை ஒருவர் சந்திப்பதற்கும், நட்பை வளர்ப்பதற்கும், இணைந்து கனவுகள் காண்பதற்கும் இத்தகைய கூட்டங்கள் பெரிதும் உதவியாக உள்ளன என்று, திருத்தந்தை தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

"விருந்தோம்பலை மறவாதிருப்போமாக" என்ற மையக்கருத்துடன் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறித்து தன் மகிழ்வை வெளியிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வேறுபட்ட கருத்துகளையும், கண்ணோட்டங்களையும் கொண்டோரை, இளையோர், திறந்த மனதுடன் வரவேற்கும் பக்குவம் பெற்றுள்ளனர் என்பதை தான் நம்புவதாகக் கூறினார்.

மத்ரித் நகரில் நடைபெறும் 41வது ஐரோப்பிய இளையோர் கூட்டம், இதைத் தொடர்ந்து, Taize குழுமம் திட்டமிட்டு வரும் அனைத்துலக இளையோர் கூட்டத்திற்கு தகுந்த தயாரிப்பாக அமையும் என்றும், திருத்தந்தை தன் செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார்.

கத்தோலிக்கர், ஆர்த்தடாக்ஸ் சபையினர், ஏனைய கிறிஸ்தவ சபையினர் என்று பல வழிகளைப் பின்பற்றும் இளையோர் அனைவரையும், தூய ஆவியார் வழிநடத்த வேண்டுமென்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

திருத்தந்தையின் பெயரால் இச்செய்தியை, திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், Taize குழுமத்தின் தலைவரான அருள்சகோதரர் அலாய் (Alois) அவர்களுக்கு அனுப்பியுள்ளார்.

மேலும், கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும் தந்தை, பார்த்தலோமேயு, உலக கிறிஸ்தவ சபைகள் அவையின் தலைமைச் செயலர், Olav Fykse-Tveit, லூத்தரன் உலக அவையின் தலைமைச் செயலர் Martin Junge, ஐ.நா. அவையின் பொதுச்செயலர் அந்தோனியோ கூட்டேரஸ் ஆகியோர் உட்பட பல்வேறு தலைவர்கள், இந்த 41வது ஐரோப்பிய இளையோர் கூட்டத்திற்கு தங்கள் வாழ்த்துக்களை அனுப்பியுள்ளனர்.

27 December 2018, 14:21