தேடுதல்

கிறிஸ்மஸ் இரவுத் திருப்பலியில் குழந்தை இயேசுவுக்கு தூபம் காட்டி வணக்கம் செய்யும் திருத்தந்தை பிரான்சிஸ் கிறிஸ்மஸ் இரவுத் திருப்பலியில் குழந்தை இயேசுவுக்கு தூபம் காட்டி வணக்கம் செய்யும் திருத்தந்தை பிரான்சிஸ் 

கிறிஸ்மஸ் இரவுத் திருப்பலியில் திருத்தந்தையின் மறையுரை

‘அப்பத்தின் இல்லம்’ என்று பொருள்படும் பெத்லகேமில், ஒரு தீவனத் தொட்டியில், இறைவன் பிறந்தார். "இதோ நான் உங்கள் உணவாக உள்ளேன்" என்று சொல்வதுபோல், அவர், அந்தத் தீவனத் தொட்டியில் பிறந்தார். – திருத்தந்தையின் மறையுரை

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

டிசம்பர் 24ம் தேதி, திங்கள் இரவு 9.30 மணிக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தில், கிறிஸ்து பிறப்புப் பெருவிழா இரவுத் திருப்பலியை தலைமையேற்று நடத்திய வேளையில், அவர் வழங்கிய மறையுரையின் சுருக்கம் இதோ:

"யூதேயாவிலுள்ள பெத்லகேம் என்ற தாவீதின் ஊருக்கு" (லூக்கா 2:4) சென்ற யோசேப்புடனும், மரியாவுடனும் இன்றிரவு நாமும் பெத்லகேம் செல்கிறோம், அங்கு, கிறிஸ்து பிறப்பு விழாவின் மறையுண்மையைக் கண்டுகொள்கிறோம்.

'பெத்லகேம்' என்ற பெயருக்கு, 'அப்பத்தின் இல்லம்' என்று பொருள். இந்த இல்லத்தில், இறைவன் மனித இனத்தைச் சந்திக்க விழைகிறார். மனிதர்கள் வாழ்வதற்கு உணவு தேவை என்பதையும், அதே வேளையில், உணவால் மட்டும் நம் உள்ளங்கள் நிறைவடைவதில்லை என்பதையும் இறைவன் அறிந்துள்ளார். முதல் பாவம், பழத்தை உண்டதால் இவ்வுலகில் நுழைந்தது. அதன் வழியே, பேராசையும் இவ்வுலகில் நுழைந்தது. இன்றும், இவ்வுலகில், ஒரு சிலர், அளவுக்கதிகமாக உண்டு மகிழும்போது, அளவற்ற மனிதர்கள் உண்பதற்கு ஏதுமின்றி உள்ளனர்.

அப்பத்தின் இல்லமான பெத்லகேமில், ஒரு தீவனத் தொட்டியில், இறைவன் பிறந்தார். "இதோ நான் உங்கள் உணவாக உள்ளேன்" என்று சொல்வதுபோல் அவர் அந்தத் தீவனத் தொட்டியில் பிறந்தார். "இதைப் பெற்று உண்ணுங்கள்; இது எனது உடல்" (மத்தேயு 26:26) என்று தன் பிறப்பு முதல் சொன்னவர் இயேசு. மேலும், மேலும் விழுங்குவதிலும், சேர்த்து வைப்பதிலும் வாழ்வு அடங்குவதில்லை, மாறாக, பகிர்வதிலும், தருவதிலுமே அது அடங்கியுள்ளது என்பதை, பெத்லகேமில் பிறந்த குழந்தையின் சிறு உடல் நம்மிடம் சொல்கிறது.

இறைவனின் வாழ்வு, நம் உள்ளங்களில் நுழைந்து, அங்கு தங்க முடியும் என்பதை, பெத்லகேமில் நாம் கண்டுகொள்கிறோம். இன்றிரவு, பெத்லகேமுக்கு நாம் செல்லும்போது, நம்மிடம் நாம் கேள்விகள் எழுப்புவோம்: என் வாழ்வின் அப்பம் எது? ஆண்டவரா, அல்லது வேறு ஏதாவது ஒரு பொருளா? மாட்டுத் தொழுவத்தின் தீவனத் தொட்டியிலிருந்து வெளியேறும் வறுமை மணத்தை உணரும்போது, நம் வாழ்வைச் சூழ்ந்திருக்கும் அலங்காரங்கள் இன்றி, நம்மால் வாழமுடியுமா என்ற கேள்வியை எழுப்புவோம்.

பெத்லகேமில், குழந்தை இயேசுவுக்கருகே இருக்கும் மரியா, யோசேப்பு, இடையர்கள் அனைவரும், பயணங்கள் மேற்கொண்டவர்கள் என்பதைக் காண்கிறோம். இயேசு, அவர்களது பயணத்தில் உணவாக விளங்குகிறார். நீண்ட, ஆடம்பரமான விருந்துகளை அவர் விரும்புவதில்லை. நம் விருந்திலிருந்து விரைவில் எழுந்து, பிறருக்குப் பரிமாறும்படி இயேசு அழைக்கிறார். கிறிஸ்து பிறப்பு விழாவில், ஒன்றுமில்லாதவர்களுடன் நான் அப்பத்தைப் பகிர்ந்துகொள்கிறேனா?

பெத்லகேம் சென்ற இடையர்கள், ஆண்டவரை எவ்வாறு சந்திப்பது என்பதை நமக்குச் சொல்லித்தருகின்றனர். அவர்கள் இரவெல்லாம் காத்துக்கொண்டிருந்தனர் என்று கூறப்பட்டுள்ளது. நாமும் எப்போதும் விழிப்பாய் இருக்கவேண்டும் என்று கிறிஸ்து நமக்குச் சொல்லியிருக்கிறார். (காண்க. மத். 25:13; மாற். 13:35; லூக். 21:36) அவர்கள் காத்திருந்த வேளையில், "ஆண்டவரின் மாட்சி அவர்களைச் சுற்றி ஒளிர்ந்தது" (லூக்கா 2:9). நம் வாழ்விலும், நாம் விழிப்புடன் காத்திருக்கும்போது, இறைவனின் ஒளி நம்மைச் சூழும்.

இறைவன் வழங்கிய ஒளியினால் சூழப்பெற்ற இடையர்கள், பெத்லகேமுக்கு 'விரைந்து சென்றனர்' (லூக்கா 2:16) என்று நற்செய்தியில் கூறப்பட்டுள்ளது. குழந்தையைக் கண்டவர்கள், அங்கேயே நின்றுவிடவில்லை. அவரது பிறப்பை அவர்கள் பலருக்கும் பறைசாற்றினர். "அதைக் கேட்ட யாவரும், இடையர்கள் தங்களுக்குச் சொன்னவற்றைக் குறித்து வியப்படைந்தனர்" (லூக்கா 2:18).

விழிப்புடன் காத்திருப்பது, விரைந்து செல்வது, தாங்கள் கண்டதை மற்றவர்களிடம் பறைசாற்றுவது ஆகிய அனைத்தும், அன்புச் செயல்கள். நாமும் இடையர்களுடன் பெத்லகேம் செல்வோம். இன்றைய உலகில், பெத்லகேம் செல்லும் பாதை, மலை மீது ஏறும் பாதையைப் போல் அமைந்துள்ளது. நமது சுயநலம், உலகு சார்ந்த போக்கு, நுகர்வுக் கலாச்சாரம் என்ற மலைகளை நாம் கடந்து செல்லவேண்டும்.

ஆண்டவரே, நான் பெத்லகேம் வர விழைகிறேன். தீவனத் தொட்டியில் படுத்திருக்கும் நீரே என் வாழ்வின் அப்பம் என்ற உண்மையைப் புரிந்துகொள்ள விழைகிறேன். உமது அன்பெனும் நறுமணத்தால் நிறைக்கப்பெற்ற நான், என்னையே மற்றவர்களுக்கு அப்பமாகப் பகிர்ந்தளிக்க முடியும். என்னை உமது தோள்களில் சுமந்து செல்லும், நல்ல ஆயனே. இதனால், நான் என் சகோதரர், சகோதரிகளை அன்பு கூர்ந்து, அவர்களை உம்மிடம் அழைத்து வர இயலும். புனித பேதுருவைப் போல் நானும், "ஆண்டவரே, உமக்கு எல்லாம் தெரியுமே! எனக்கு உம்மீது அன்பு உண்டு என்பது உமக்குத் தெரியுமே" (யோவான் 21:17) என்று கூறும்போது, அது எனக்கு கிறிஸ்து பிறப்பு விழாவாக மாறும்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 December 2018, 10:46