தேடுதல்

Vatican News
இளையோருக்கெனப் பணியாற்றும் 'Rondine-அமைதியின் அரண்' என்ற குழுவுடன் திருத்தந்தை இளையோருக்கெனப் பணியாற்றும் 'Rondine-அமைதியின் அரண்' என்ற குழுவுடன் திருத்தந்தை  (Vatican Media)

இளையோருக்குப் பணியாற்றும் Rondine அமைப்பை பாராட்டிய திருத்தந்தை

'Rondine-அமைதியின் அரண்' என்ற பெயரில், இளையோருக்கெனப் பணியாற்றும் ஒரு குழு துவக்கப்பட்டதன் 20ம் ஆண்டு கொண்டாட்டங்களையொட்டி திருத்தந்தையின் பாராட்டு

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

முந்தையத் தலைமுறைகளின் தோல்விச் சுமைகளைத் தாங்கி, சவால்களுடன் வாழ்ந்துவரும் இன்றையத் தலைமுறையினரை, அனைத்துவிதமான வளர்ச்சித் திட்டங்களிலும் பங்கெடுக்கவைக்கவேண்டியது அவசியம் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வலியுறுத்தினார்.

'Rondine-அமைதியின் அரண்' என்ற பெயரில், இளையோருக்கெனப் பணியாற்றும் ஒரு குழு துவக்கப்பட்டதன் 20ம் ஆண்டு கொண்டாட்டங்களையொட்டி, அக்குழுவின் 350க்கும் அதிகமான உறுப்பினர்களை, இத்திங்களன்று காலை, திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை, இவ்வாறு கூறினார்.

துன்பங்கள், வெறுப்புணர்வுகள் ஆகிய நஞ்சுகளால் பாதிக்கப்பட்டுள்ள கலாச்சாரச் சூழலில் வாழ்ந்துவரும் இளையோரை வரவேற்று, இப்பிரச்சனைகளைப் புரிந்துகொள்ளும் சவாலை ஏற்க அவர்களுக்கு உதவும், Rondine குழுவினரின் பணிகளை திருத்தந்தை பாராட்டினார்.

மோதல்கள் இடம்பெறும் பகுதிகளில் வாழும் இளையோருக்கு, Rondine குழுவினர் வழங்கிவரும் ஆன்மீக, மற்றும் நன்னெறி சார்ந்த கலாச்சார வளர்ச்சிப்பணிகளையும் குறிப்பிட்டு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் பாராட்டுக்களை வெளியிட்டார்.

இளையோரிடையே அமைதிப்பணி ஆற்றிவரும் 'Rondine-அமைதியின் அரண்' என்ற இவ்வமைப்பு, டிசம்பர் 10ம் தேதி, மனித உரிமைகள் உலக நாளன்று, அமைதியின் சார்பாக, ஐக்கிய நாடுகள் நிறுவனத்தில் விண்ணப்பம் ஒன்றை சமர்ப்பிக்க உள்ளதையும் திருத்தந்தை தன் உரையில் சிறப்பாகக் குறிப்பிட்டுப் பேசினார்.

03 December 2018, 16:10