தேடுதல்

Vatican News
துறவு வாழ்வு குறித்து திருத்தந்தையின் உரையாடல் அடங்கிய புதிய நூல் துறவு வாழ்வு குறித்து திருத்தந்தையின் உரையாடல் அடங்கிய புதிய நூல் 

அர்ப்பணிக்கப்பட்ட துறவியர் பற்றிய திருத்தந்தையின் புதிய நூல்

திருத்தந்தையின் புதிய நூல் - கடந்த காலத்தை நன்றியுடன் நோக்குவது, நிகழ்காலத்தை பேரார்வமுடன் வாழ்வது, வருங்காலத்தை நம்பிக்கையுடன் நோக்குவது

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

அர்ப்பணிக்கப்பட்ட துறவு வாழ்வு பற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் புதிய நூல், டிசம்பர் 3, வருகிற திங்களன்று, சைனம் உட்பட, பத்து மொழிகளில் வெளியிடப்படவிருக்கின்றது என்று, லொசர்வாத்தோரே ரொமானோ திருப்பீட தினத்தாள் அறிவித்துள்ளது.  

வத்திக்கானில் திருத்தந்தை தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்தில், அர்ப்பணிக்கப்பட்ட துறவியரின் பணி பற்றி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன், கடந்த ஆகஸ்ட் 9ம் தேதி, கிளேரிசியன் துறவு சபையின் அருள்பணியாளர் Fernando Prado Ayuso அவர்கள், நான்கு மணி நேரத்திற்கு மேலாக மேற்கொண்ட கலந்துரையாடல், 120 பக்கங்கள் கொண்ட நூலாக வெளிவரவிருக்கின்றது.

கடந்த காலத்தை நன்றியுடன் நோக்குவது, நிகழ்காலத்தை பேரார்வமுடன் வாழ்வது, வருங்காலத்தை நம்பிக்கையுடன் நோக்குவது போன்ற தலைப்புகளில் வெளிவரவிருக்கும் இந்நூலில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அருள்பணியாளர் மற்றும் துறவற வாழ்வு அழைத்தல்களில் எதிர்கொள்ளப்படும் சவால்கள் பற்றியும் விளக்கியுள்ளார்.

இறையழைத்தல் எனும் கொடைகள் பற்றியும் பேசியுள்ள திருத்தந்தை, ஓரினச்சேர்க்கை பற்றிய விவகாரம், அருள்பணியாளர் மற்றும் துறவற வாழ்வைத் தேர்ந்து கொள்வோரின் ஆரம்ப பயிற்சி காலங்களிலேயே, தெளிந்து தேர்வு செய்யப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.  

சபைகளைத் தோற்றுவித்தவர்களின் தனிவரத்திற்கு பிரமாணிக்கத்துடன் வாழ்தல், பொதுநிலையினருடன் மறைப்பணிகளைப் பகிர்தல் உட்பட, வத்திக்கான் பொதுச் சங்கத்திற்குப்பின், திருஅவையில் இடம்பெற்ற புதுப்பித்தல்களைத் தொடர்ந்து, துறவு வாழ்வில் எதிர்கொள்ளப்படும் சவால்கள் பற்றியும், திருத்தந்தை கருத்து தெரிவித்துள்ளார். இயேசு சபை துறவியாகிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனது சொந்த வாழ்வு அனுபவங்களிலிருந்தும், கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டுள்ளார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருஅவையில் பெண்களின் மாண்பு மதிக்கப்பட்டு, அவர்கள் அதிகளவில் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும், திருத்தந்தை கேட்டுக்கொண்டுள்ளார்.

01 December 2018, 15:12