தேடுதல்

புனித ஆறாம் பவுல் அரங்கில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறைக்கல்வி உரை - 051218 புனித ஆறாம் பவுல் அரங்கில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறைக்கல்வி உரை - 051218  

மறைக்கல்வியுரை : செபம் என்பது, இதயங்களில் இயல்பாகவே எழுவது

ஓய்வற்ற பணிவாழ்விலிருந்து சிறிது நேரத்தையாவது ஒதுக்கி, அமைதியில் செபிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார் இயேசு

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

வழக்கமாக டிசம்பர் மாதத்தின் முதல் வாரம் உரோம் நகருக்கு மிகவும் குளிர் நிறைந்ததாகவே இருக்கும். இருப்பினும் இவ்வாரம், மிதமான குளிருடனும் வெப்பத்துடனும் இருந்தபோதிலும், ஏற்கனவே திட்டமிட்டபடி, திருத்தந்தை புனித ஆறாம் பவுல் அரங்கிலேயே திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறைக்கல்வி உரை இடம்பெற்றது.

அரங்கம் முழுவதும் திருப்பயணிகளால் நிரம்பி வழிய, முதலில் புனித லூக்கா நற்செய்தியின் 11ம் பிரிவின் முதல் திருச்சொற்களான 'இயேசு ஓரிடத்தில் இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தார். அது முடிந்ததும் அவருடைய சீடர்களுள் ஒருவர் அவரை நோக்கி, “ஆண்டவரே, யோவான் தம் சீடருக்கு இறைவனிடம் வேண்டக் கற்றுக்கொடுத்ததுபோல் எங்களுக்கும் கற்றுக்கொடும்”என்றார்' என்பது வாசிக்கப்பட்டது. பின் இயேசு கற்பித்த செபம் குறித்து தன் மறையுரையை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அன்பு சகோதரர் சகோதரிகளே, இவ்வாரத்தில் நாம், இறைவன் கற்பித்த செபத்திற்கென அர்ப்பணித்து நம் மறைக்கல்வி உரையைத் துவக்குகிறோம். 'வானகத்திலுள்ள எம் தந்தாய்' என்ற செபம், இயேசுவின் சொந்த செப வாழ்வில் தன் அடிப்படையைக் கொண்டுள்ளது. தன் பொது வாழ்வை துவக்கிய முதல் நாளிலிருந்து, அவர் இறப்பதற்கும் முந்தைய இரவு வரை, இயேசு, தன் ஓய்வற்ற பணிவாழ்விலிருந்து சிறிது நேரத்தையாவது ஒதுக்கி, அமைதியில் செபிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். தன் மக்களின் பொது வழிபாட்டுச் செபங்களில் அவர் பங்குபெற்றதோடு, தனியாகவும் செபித்தார். இந்த செப வாழ்வின் உள்ளார்ந்த ஆர்வத்தால் கவரப்பட்ட அவரின் சீடர்கள், அவரை நோக்கி, தங்களுக்கும் செபிக்கக் கற்றுத்தருமாறுக் கேட்கின்றனர் (லூக்.11:1). இந்த விண்ணப்பத்திற்கு பதிலளிக்கும் விதமாக, இயேசு அவர்களுக்கும், நமக்கும், 'வானகத்திலுள்ள எம் தந்தாய்' என்ற செபத்தைத் தருகிறார். இந்த செபத்தை நமக்கு கற்பிப்பதன் வழியாக, தந்தையாம் இறைவனுடன் ஆன அவரின் நெருங்கிய உறவில் நம்மையும் கொணர்கிறார். மனித இதயங்களில் செபம் என்பது, இயல்பாகவே எழுகின்றபோதிலும், செபத்தை பலனுள்ள முறையில் எழுப்பும் வழிகள் குறித்து நாம் கற்றுக்கொள்ள முடியும்.   

பரிசேயரும் வரிதண்டுபவரும் குறித்த இயேசுவின் உவமை எடுத்துரைப்பதுபோல், கடவுளுக்கு ஏற்புடையதாக இருக்கும் செபம் என்பது, தாழ்ச்சியும் அன்பும் நிறைந்த இதயத்திலிருந்து எழுவதாகும். இயேசு கற்பித்த செபம் குறித்து ஆழமாகச் சிந்திக்க உள்ள வரும் வாரங்களில், இயேசுவின் சீடர்களைப்போல் நாமும், இறைமகனை நோக்கி, உறுதியான விசுவாசத்துடன், 'இறைவா எனக்கு செபிக்கக் கற்றுத்தாரும்’ என வேண்டுவோம்.

இவ்வாறு தன் புதன் மறைக்கல்வி உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வார இறுதியில், அதாவது டிசம்பர் 8, வருகிற சனிக்கிழமையன்று, புனித கன்னி மரியின் அமல உற்பவம் திருவிழாவைச் சிறப்பிக்க உள்ளதைக் குறித்து எடுத்துரைத்து, குழந்தை இயேசுவை நம் இதயங்களில் வரவேற்க நம்மைத் தயாரிக்க உதவுமாறு, விசுவாசம் மற்றும் இறைவனுக்கு கீழ்ப்படிதலில் நமக்கு சிறந்ததொரு எடுத்துக்காட்டாக இருக்கும் அன்னை மரியிடம் நம்மை ஒப்படைப்போம், என கேட்டுக்கொண்டார். இப்புதன் மறைக்கல்வி உரையின் இறுதியில், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 December 2018, 12:21