தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ் 

போலந்து புற்றுநோயாளர் சிறாருடன் திருத்தந்தை

நம் ஆண்டவர் எல்லாருக்கும் ஒரு காவல்தூதரைக் கொடுத்துள்ளார், அவர், நம் சிறுவயது முதல், வயது முதிர்ந்த காலம் வரை, நம்மோடு இருக்கின்றார்

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

வாழ்வில் வெல்லமுடியாத துன்பம் என்று எதுவுமில்லை, ஆயினும், ஒவ்வொரு மனிதரும் தனக்கேயுரிய பாணியில் அத்துன்பத்தை எதிர்கொண்டு அதனை வெல்கிறார் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புற்றுநோயால் தாக்கப்பட்டுள்ள சிறாரிடம் கூறினார்.

போலந்து நாட்டின் Wrocław புற்றுநோய் சிகிச்சை மையத்திலிருந்து இவ்வெள்ளியன்று வத்திக்கான் வந்திருந்த ஏறத்தாழ 62 சிறாரிடம் இவ்வாறு ஆறுதல் கூறியத் திருத்தந்தை, வாழ்வில் வெற்றிகாணும் குறிக்கோளோடு எப்போதும் முன்னோக்கிச் செல்ல வேண்டும் எனவும், சோர்வடைய வேண்டாம் எனவும், சிறாரிடம் கேட்டுக்கொண்டார்.

அன்புச் சிறாரே, உங்களின் வாழ்வுப் பயணம் கொஞ்சம் கடினமானது, ஏனெனில் நீங்கள் இந்த நோயோடு வாழ்ந்து, அதற்குச் சிகிச்சை பெற்று, அதிலிருந்து குணம் பெற வேண்டும் வேண்டும், ஆயினும் இந்தப் பயணம் எளிதானதல்ல என்றும் திருத்தந்தை கூறினார்.

இந்தத் துன்பப் பயணத்தில், உங்களுக்கு, பல நண்பர்கள் மற்றும் பெற்றோர் உதவி செய்கின்றனர் என்றுரைத்த திருத்தந்தை, சிறாரே, உங்கள் ஒவ்வொருவருக்கும் நம் ஆண்டவர் ஒரு காவல்தூதரைக் கொடுத்துள்ளார், இவர், நம் சிறுவயது முதல், வயது முதிர்ந்த காலம் வரை, நம்மோடு இருக்கின்றார் என்றும், இத்தூதர் எப்போதும் வாழ்வில் வெற்றியடைய உதவுவார் என்றும் கூறினார்.

பின்னர் அச்சிறாருடன் சேர்ந்து, அருள்நிறைந்த மரியே என்ற செபத்தைச் சொல்லி, அவர்களை ஆசிர்வதித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 November 2018, 15:33