தேடுதல்

Vatican News
மூவேளை செப உரை வழங்கும் திருத்தந்தை பிரான்சிஸ் மூவேளை செப உரை வழங்கும் திருத்தந்தை பிரான்சிஸ் 

இறுதி நாள் குறித்து திருத்தந்தையின் மூவேளை செப உரை

இறுதி நாள் குறித்து நாம் எப்போதும் விழிப்பாயிருக்கும் வகையில், நிகழ்காலத்தை, செம்மையான முறையில் வாழவேண்டும் என்பதே இயேசுவின் அழைப்பு

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

இறுதி நாளில் மானிட மகன் மகிமையில் வருவது குறித்தும், அந்த இறுதி நாள், தந்தையாம் இறைவனைத் தவிர, வேறு எவருக்கும் தெரியாது எனவும் இயேசு கூறுவது, உலக முடிவைக் குறித்த எச்சரிக்கையாக மட்டுமல்லாமல், நிகழ்கால வாழ்வை நன்முறையில் வாழ, தேவையான அழைப்பாகவும் உள்ளது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

நவம்பர் 18, இஞ்ஞாயிறன்று, வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு நண்பகல் மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை, இன்றைய நற்செய்தி வாசகத்தை மையப்படுத்தி, தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

இறுதி நாள் குறித்து நாம் எப்போதும் விழிப்பாயிருக்கும் வகையில், நிகழ்காலத்தை, செம்மையான முறையில் வாழவேண்டும் என்பதையே, இயேசுவின் அழைப்பு நமக்கு உணர்த்துகிறது என்று, திருத்தந்தை எடுத்துரைத்தார்.

தனி மனிதர்கள், மற்றும், மனித சமுதாயத்தின் இறுதி இலக்கு, இறைவனை நேருக்கு நேர் சந்திப்பது என்பதை, தன் மூவேளை செப உரையில் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்த இறுதி நேரத்திலிருந்து யாரும் தப்பிக்க முடியாது என்பதையும் வலியுறுத்திக் கூறினார்.

நம்மை நல்லவர்களாக சித்திரிக்க முனையும் நம் விவேகமும், அனைத்தையும் வாங்க உதவும் நம் செல்வங்களும் இறுதி நேரத்தில் எவ்வகையிலும் பயன்படப் போவதில்லை என்பதை, விளக்கிக் கூறியத் திருத்தந்தை, இறைவார்த்தையில் நம்பிக்கை கொண்டு, நம் வாழ்வின் வழியே, பிறருக்கு வழங்கியுள்ளவைகளே, இறுதி நேரத்தில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்று, தன் மூவேளை செப உரையில் மேலும் கூறினார்

18 November 2018, 14:00