தேடுதல்

திருத்தந்தையுடன் கான்ஸ்தாந்திநோபிள் கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும்தந்தை, முதலாம் பர்த்தலோமேயு திருத்தந்தையுடன் கான்ஸ்தாந்திநோபிள் கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும்தந்தை, முதலாம் பர்த்தலோமேயு 

கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும்தந்தைக்கு திருத்தந்தை வாழ்த்து

கிறிஸ்தவ சபைகளுக்கு இடையே முழு ஒன்றிப்பை மீண்டும் உருவாக்குவது, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அழைப்புக்குப் பதிலளிப்பதாய் அமையும்

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

நவம்பர் 30, இவ்வெள்ளியன்று, கான்ஸ்தாந்திநோபிள் கீழைவழிபாட்டுமுறை கிறிஸ்தவ சபை தன் பாதுகாவலரான திருத்தூதர் அந்திரேயா திருவிழாவைச் சிறப்பித்ததையொட்டி, கான்ஸ்தாந்திநோபிள் கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும்தந்தை, முதலாம் பர்த்தலோமேயு அவர்களுக்கு, வாழ்த்து செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

கத்தோலிக்கத் திருஅவையும், கான்ஸ்தாந்திநோபிள் கிறிஸ்தவ சபையும், உலகினர் அனைவருக்கும் நற்செய்தி அறிவிக்கவேண்டிய அவசரத் தேவையை உணரும்வேளை, மக்கள் மத்தியில் அமைதிக்குரிய வழிகளைத் தேடுவதற்கும், ஒவ்வொரு மனிதரின் மாண்பை மதித்தல், அனைத்துவிதமான அடிமைத்தனங்களை அகற்றுதல், படைப்பைப் பாதுகாத்தல் ஆகியவற்றுக்கும், ஒன்றிணைந்து செயல்பட முடியும் என்று திருத்தந்தையின் செய்தி கூறுகின்றது.

இவ்விரு கிறிஸ்தவ சபைகளுக்கு இடையே முழு ஒன்றிப்பை மீண்டும் உருவாக்குவது, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அழைப்புக்குப் பதிலளிப்பதாய் அமையும் எனவும், சபைகள் ஒன்றிணைந்து செயல்படும்போது, இக்கால மனிதரின் தேவைகளுக்கும், குறிப்பாக, வறுமை, பசி, நோய், போர் ஆகியவற்றால் துன்புறும் மக்களுக்கும், நன்கு உதவ முடியும் எனவும், திருத்தந்தை குறிப்பிட்டுள்ளார்.

போர்களால் காயமடைந்துள்ள உலகில், கிறிஸ்தவர்கள் மத்தியில் நிலவும் ஒன்றிப்பு, மிகவும் காணக்கூடிய வகையில், நம்பிக்கையின் அடையாளமாக விளங்க முடியும் என்றுரைத்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிறிஸ்தவர்கள் எல்லாரும் ஒரே மனதாய், ஒருவர், ஒருவர் மீது கனிவு மற்றும் அன்புள்ளவர்களாய் வாழ, அமைதி மற்றும் ஒப்புரவின் ஊற்றாம் கடவுளிடம் செபிப்பதாகத் தெரிவித்துள்ளார்.   

ஒவ்வோர் ஆண்டும், ஜூன் 29ம் தேதி வத்திக்கானில் சிறப்பிக்கப்படும் திருத்தூதர்கள் பேதுரு, பவுல் பெருவிழாவுக்கு, கான்ஸ்தாந்திநோபிள் கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும்தந்தையின் பிரதிநிதிகள் குழு ஒன்று, வத்திக்கான் வருவதும், திருத்தூதர் அந்திரேயா திருவிழாவுக்கு, திருப்பீட பிரதிநிதிகள் குழு ஒன்று, இஸ்தான்புல் செல்வதும் வழக்கத்தில் உள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 November 2018, 15:16