தேடுதல்

போசே குழுமத்தின் தலைவர், சகோதரர் என்சோ பியாங்கி, திருத்தந்தையுடன்... போசே குழுமத்தின் தலைவர், சகோதரர் என்சோ பியாங்கி, திருத்தந்தையுடன்... 

இன்றைய சவால்கள் மத்தியில், அன்பின் சாட்சிகளாக...

முதியோரை பராமரிக்க வேண்டிய இளைய சமுதாயத்தின் கடமைகளையும், இளையோரை வழிநடத்த வேண்டிய முதியோரின் கடமைகளையும் வலியுறுத்துவோம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

திருஅவை மற்றும், உலகில், பலன் தரும் இருப்பைக் கொண்டிருக்கும் போசே துறவு குழுமத்தின் 50ம் ஆண்டு கொண்டாட்டங்களில், தானும், ஆன்மீக முறையில் பங்குகொள்வதாக, அத்துறவு இல்ல நிறுவனரான, சகோதரர் என்சோ பியாங்கி (Enzo Bianchi) அவர்களுக்கு, வாழ்த்துச் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

துறவு பாரம்பரியத்தில் வாழும் நோக்கத்துடன், துறவு வாழ்வின் புதுப்பித்தலுக்காக ஒரு சிறிய தீப்பொறிபோல் துவக்கப்பட்ட போசே குழுமம், கிறிஸ்தவ சபைகளை ஒன்றிணைப்பதில் தன்னை அர்ப்பணிப்பதாகவும், செபத்தின் இடமாகவும், கிறிஸ்தவர்களிடையே உரையாடலின் இடமாகவும் மாறியுள்ளது குறித்து, தன் பாராட்டுக்களை, இச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை. 

ஆறுதல் தேடி வருவோருக்கும், தங்களுக்குரிய பங்கு குறித்து அறிய முயலும் இளையோருக்கும், மத நம்பிக்கையாளர், நம்பிக்கயற்றோர் என அனைவருக்கும் எவ்வித பாகுபாடுமின்றி தங்கள் இல்லத்தில் வரவேற்பளிக்கும் போசே குழுமத்திற்கு, நன்றியை வெளியிடுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இன்றைய நவீன உலகம் விடுக்கும் சவால்களின் மத்தியில், நற்செய்தி காட்டும் அன்பின் சாட்சிகளாக தொடர்ந்து செயல்படுமாறு அவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

இன்றைய முதியோர் சமுதாயம் இளையோருக்கு ஊக்கமளிப்பதாகவும், இளைய சமுதாயமோ முதியோர் மட்டில் அக்கறையுடன் செயல்படுவதாகவும் இருக்க உதவுவோமாக என, மேலும் தன் செய்தியில் அழைப்பு விடுத்துள்ளார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 November 2018, 15:46