தேடுதல்

கிழக்கின் அசீரிய சபையின் முதுபெரும்தந்தை, திருத்தந்தை மூன்றாம் மார் ஜெவார்ஜிஸுடன்  திருத்தந்தை பிரான்சிஸ் கிழக்கின் அசீரிய சபையின் முதுபெரும்தந்தை, திருத்தந்தை மூன்றாம் மார் ஜெவார்ஜிஸுடன் திருத்தந்தை பிரான்சிஸ் 

திருத்தந்தையுடன் முதுபெரும்தந்தை 3ம் மார் ஜெவார்ஜிஸ் சந்திப்பு

சிரிய-கீழை வழிபாட்டு முறை பாரம்பரியத்தின் கருவூலங்களை, முழுமையான கிறிஸ்தவ உலகமும் பேணிக் காக்கவேண்டும் - திருத்தந்தை

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

மத்தியக் கிழக்குப் பகுதி நாடுகளில் நிலவும் கொடுமைகள் குறித்து, கத்தோலிக்கத் திருஅவையும், கீழை வழிபாட்டு முறை அசீரிய சபையும் மிகுந்த அக்கறை கொண்டுள்ளது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன்னைச் சந்திக்க வந்திருந்த அசீரிய முதுபெரும் தந்தையிடம் கூறினார்.

கிழக்கின் அசீரிய சபையின் முதுபெரும்தந்தையான, திருத்தந்தை, மூன்றாம் மார் ஜெவார்ஜிஸ் (Mar Gewargis III) அவர்களையும், அவருடன் வருகை தந்த அசீரிய சபையின் உயர் அதிகாரிகளையும், நவம்பர் 9, இவ்வெள்ளியன்று, திருப்பீடத்தில் சந்தித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மத்தியக் கிழக்குப் பகுதியில் அமைதி நிலவவேண்டி, ஜூலை 7ம் தேதி இத்தாலியின் பாரி நகரில் நடைபெற்ற கிறிஸ்தவ ஒன்றிப்பு வழிபாட்டிற்கு, முதுபெரும் தந்தை, மூன்றாம் மார் ஜெவார்ஜிஸ் அவர்கள் வருகை தந்திருந்ததை, தன் வாழ்த்துரையில் சிறப்பாகக் குறிப்பிட்ட திருத்தந்தை, மத்தியக் கிழக்குப் பகுதி கிறிஸ்தவர்களுக்கு ஆற்றவேண்டிய பணிகள் இன்னும் பல உள்ளன என்று எடுத்துரைத்தார்.

இவ்வாண்டு, கிழக்கின் அசீரிய சபையும், கல்தேய சபையும் இணைந்து, Abdisho bar Berika அவர்கள் மரணமடைந்ததன் 700ம் ஆண்டைச் சிறப்பிக்கின்றன என்பதை தன் உரையில் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், Berika அவர்கள் வழங்கிய பல கருத்துக்கள், கத்தோலிக்கத் திருஅவையின் சட்டங்களில் இடம்பெற்றுள்ளன என்பதை சிறப்பாகக் குறிப்பிட்டார்.

சிரிய-கீழை வழிபாட்டு முறை பாரம்பரியத்தின் கருவூலங்களை, முழுமையான கிறிஸ்தவ உலகமும் பேணிக் காக்கவேண்டும் என்ற அழைப்புடன், திருத்தந்தை தன் வாழ்த்துரையை நிறைவு செய்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 November 2018, 14:47