தேடுதல்

ரொஸ்மினியர்கள் என அழைக்கப்படும் பிறரன்புத் துறவு சபையின் உலகப் பொது அவை பிரதிநிதிகளுக்கு உரை வழங்கும் திருத்தந்தை பிரான்சிஸ்  ரொஸ்மினியர்கள் என அழைக்கப்படும் பிறரன்புத் துறவு சபையின் உலகப் பொது அவை பிரதிநிதிகளுக்கு உரை வழங்கும் திருத்தந்தை பிரான்சிஸ்  

சாவு வரை வாழ்வை மற்றவர்களுக்கு அர்ப்பணிக்க...

புனித்துவமும் நற்செயல் முயற்சிகளும் ஒரு சிலருக்கு மட்டும் உரியதல்ல, மாறாக, அனைவராலும் வாழ்வு முழுவதும் கடைபிடிக்கப்பட வேண்டியது – திருத்தந்தை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

புனிதத்துவத்திற்கும், பிறரன்பின் பாதையில் இணைந்து நடைபோடுவதற்கும், விடுக்கப்படும் அழைப்பை, ஒவ்வொரு கிறிஸ்தவரும் உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி செயலாற்றிவரும் ரொஸ்மினியன் துறவு சபையை பாராட்டுவதாகத் தெரிவித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

அருளாளர் Antonio Rosmini என்பவரால் துவக்கப்பட்டு, ரொஸ்மினியர்கள் என அழைக்கப்படும் பிறரன்புத் துறவு சபையின் உலகப் பொது அவைக் கூட்டத்தில் கலந்து கொண்டோரை, இத்திங்கள் காலை, திருப்பீடத்தில் சந்தித்து உரையாடிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருத்தந்தையின் திருப்பீடத்திற்கு எல்லயற்ற மதிப்பையும், அதனோடு நெருங்கிய தொடர்பையும், பாசத்தையும் ஒவ்வொரு கிறிஸ்தவரும் தங்களுக்குள் வளர்த்துக் கொள்ளவேண்டும் என்ற அச்சபை நிறுவனரின் வார்த்தைகளை மீண்டும் நினைவூட்டினார்.

புனிதத்துவமும், நற்செயல்களை செயல்படுத்துவதும் ஒரு சிலருக்கோ, ஒரு சில நேரங்களுக்கோ மட்டும் உரியதல்ல, மாறாக, எல்லா வேளைகளிலும், எல்லாராலும் கடைப்பிடிக்கப்பட வேண்டிய கடமை அது, என்பதையும் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சாவு வரை நம் வாழ்வை மற்றவர்களுக்காக அர்ப்பணம் செய்ய வேண்டும், என்பது இச்சபையின் நிறுவனர், ரொஸ்மினி அவர்களின் நோக்கமாக இருந்தது என்றார்.

அனைத்திற்கும் மேலாக, பிறரன்பு விளங்கவேண்டும் என்று கூறிய புனித பவுலின் வாரத்தைகளுக்கு ஏற்ப, தன் சபைக்கு பெயர் வைத்துள்ள அருளாளர் ரொஸ்மினி அவர்கள், பிறரன்புடன் உள் மன அமைதியும் ஒத்திணங்கிச் செல்லவேண்டும் எனபதையும் சுட்டிக்காட்டிச் சென்றுள்ளார் என்றார் திருத்தந்தை.

ரொஸ்மினியன் துறவு சபையின் கல்விப்பணியையும் பாராட்டியத் திருத்தந்தை, அவர்கள் இந்தியா, டான்சானியா, கென்யா, அமெரிக்க ஐக்கிய நாடு மற்றும் ஐரோப்பாவில் பரவி பணியாற்றி வருவது குறித்து, தன் மகிழ்ச்சியை வெளியிட்டார்.

ரொஸ்மினியன் துறவு சபையினர், தாங்கள் பெற்றுள்ள தனி வரத்தின் துணை கொண்டு, நற்செய்தி அறிவிப்புப் பணியை தொடர்ந்து செயல்படுத்த ஊக்கமளித்து, அவர்களுக்கு தன் ஆசீரையும் அளித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 October 2018, 16:20