தேடுதல்

Vatican News
தூய பேதுரு வளாகத்தில்  மறைக்கல்வியுரையின்போது 171018 தூய பேதுரு வளாகத்தில் மறைக்கல்வியுரையின்போது 171018  (AFP or licensors)

மறைக்கல்வியுரை : கொலைசெய்யாதே என்பது, அன்பிற்கான அழைப்பு

கோபம், அவமானப்படுத்தல், வெறுப்பு காட்டுதல், பாராமுகம் போன்றவை வழியாக, உள்ளுணர்வுகளைக் கொல்லுதல் இடம்பெறுகின்றன

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

காலையில், உரோம் நகரம், மழைத்துளிகளால் சிறிதளவு நனைந்து, வானம் இருட்டிக் கொண்டிருந்தாலும், மழை பெய்யாது என்ற நம்பிக்கையுடன், திருத்தந்தையின் மறைக்கல்வி உரைக்கான ஏற்பாடுகள், புனித பேதுரு பசிலிக்காப் பேராலய வளாகத்திலேயே செய்யப்பட்டிருந்தன. அந்த நம்பிக்கையை வானமும் பொய்யாக்கவில்லை என்பதால், திருத்தந்தையின் மறைக்கல்வி உரை, திட்டமிட்டபடி இனிதே முடிந்தது. பத்துக் கட்டளைகள் குறித்த தன் மறைக்கல்வி உரைகளின் தொடர்ச்சியாக இப்புதனன்று, “கொலை செய்யாதிருப்பாயாக” என்ற கட்டளைக் குறித்து தன் சிந்தனைகளைப் பகிர்ந்து கொண்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

அன்பு சகோதர சகோதரிகளே, பத்துக் கட்டளைகள் குறித்த நம் தொடர் மறைக்கல்வி உரையில், இன்று ஐந்தாவது கட்டளையாகிய “கொலை செய்யாதிருப்பாயாக” என்பது குறித்து சிந்திப்போம். இறைவனின் முடிவற்ற அன்பினால், அவர் சாயலாகவே படைக்கப்பட்ட நாம், இறைவனின் கண்களில் எவ்வளவு விலைமதிப்பற்றவர்கள் என்பதை இக்கட்டளை வெளிப்படுத்துவதாக‌ உள்ளது. ஒரு மனிதனை நேரடியாக கொல்வதைத் தவிர, வேறு வழிகளும் உள்ளன. அதாவது, கோபம், அவமானப்படுத்தல், வெறுப்பு காட்டுதல், பாராமுகம் போன்றவை வழியாகவும், உயிர் பறித்தல் இடம்பெறுகின்றது என்பதை நாம் அறிந்துள்ளோம்.  இவை ஒருவரின் உடலைக் கொல்லாமல் இருக்கலாம், ஆனால், நமக்கு நேரடியாகத் தெரியாமல், உள்ளுக்குள் மறைந்திருக்கும் உணர்வுகளைக் கொல்கின்றன.  ‘கொலை செய்தல்’ என்ற கருத்துக்கு எதிர்ப்பதமாக ‘கொலை செய்யாதிருத்தல்’ என்ற கருத்து நமக்குத் தோன்றினாலும், இது அன்பு கூர்வதற்கான முதல் படியேயாகும். ஆபேலுக்கு, காயீன் ஆற்றிய செயலுக்கு, எதிரானதை நாம் ஆற்றவேண்டும். ஆம், நாம் நம் ஒவ்வொருவரின் காப்பளர், பாதுகாவலர், பொறுப்பாளர். இதற்கு, இறை இரக்கமும், அவரின் அன்பும் நமக்குத் தேவை. “கொலை செய்யாதிருப்பாயாக” என்ற கட்டளை, அனபிற்கும், இரக்கத்திற்கும், விடப்படும் அழைப்பாகும். வாழ்வுக்கு உயிர்த்தெழுந்து,  நமக்கு வாழ்வை வழங்கிய இயேசுவின் வாழ்வைப் பின்பற்ற நமக்கு விடப்படும் அழைப்பாகும் இது. இயேசுவால் வழங்கப்பட்டுள்ள இந்த புது வாழ்வு, இறைவன் நமக்கு வழங்கும் கொடையாகும்.

இவ்வாறு, தன் புதன் மறைக்கல்வி உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்புதனன்று திருஅவையில் சிறப்பிக்கப்பட்ட அந்தியோக்கியாவின் புனித இஞ்ஞாசியார் குறித்து மக்களுக்கு நினைவூட்டினார். ஆயரும் மறைசாட்சியுமான இந்த புனிதரிடமிருந்து சாட்சிய வாழ்வு குறித்துக் கற்றுக் கொள்வோம் என  எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

17 October 2018, 12:22