தேடுதல்

மூவேளை செப உரையின்போது திருத்தந்தை - 211018 மூவேளை செப உரையின்போது திருத்தந்தை - 211018 

மறைபரப்புப்பணி ஞாயிறு - திருத்தந்தையின் மூவேளை செப உரை

இவ்வுலகம், மகுடங்களைத் தேடிக்கொண்டிருக்கும் வேளையில், சிலுவையை மகுடமாகவும், தன் உயிரை பிறருக்கு வழங்குவதை வாழ்வின் நோக்கமாகவும் இயேசு முன்வைத்தார்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

பிற இளையோர் வழியே, தங்கள் வாழ்வின் மகிழ்வையும், பொருளையும் இயேசுவில் கண்டுகொண்ட இளையோரைக் குறித்து, அக்டோபர் 21, சிறப்பிக்கப்பட்ட மறைபரப்புப்பணி ஞாயிறன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் மூவேளை செப உரையை வழங்கினார்.

இஞ்ஞாயிறன்று சிறப்பிக்கப்பட்ட மறைபரப்புப்பணி ஞாயிறு, பானமாவில் வருகிற சனவரி சிறப்பிக்கப்படவிருக்கும் உலக இளையோர் நாள் நிகழ்வுகள், தற்போது வத்திக்கானில் இளையோரை மையப்படுத்தி நடைபெற்றுவரும் உலக ஆயர்கள் மாமன்றம் ஆகியவை, இளையோர் துணையுடன், நற்செய்தி அறிவிக்கப்படுவதைக் குறித்து எடுத்துரைக்கின்றன என்று, திருத்தந்தை தன் உரையில் கூறினார்.

நற்செய்தி அறிவிக்கும் பணிக்கென தங்கள் சொந்த நாடுகளைவிட்டு, வெளிநாடுகளில் வாழும் மறைபரப்புப்பணியாளர்களை நன்றியோடு எண்ணிப்பார்த்து, அவர்களுக்காக 'அருள் நிறை மரியே' என்ற செபத்தை செபிக்குமாறு, திருத்தந்தை தன் உரையில் அழைப்பு விடுத்தார்.

இயேசுவின் சீடர்களான யாக்கோபும், யோவானும் இயேசுவுக்கு அருகே இருபுறமும் அமர்வதற்கு இடம் கேட்ட நிகழ்வு, இஞ்ஞாயிறு நற்செய்தியில் இடம்பெற்றுள்ளதைச் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, இவ்வுலகம், மகுடங்களைத் தேடிக்கொண்டிருக்கும் வேளையில், சிலுவையை மகுடமாகவும், தன் உயிரை பிறருக்கு வழங்குவதை வாழ்வின் நோக்கமாகவும் இயேசு முன்வைத்தார் என்று கூறினார்.

இயேசுவின் சீடராக வாழ விரும்புவோர், மனம் திரும்புவதற்கு நற்செய்தி விடுக்கும் அழைப்பை ஏற்று, எளியோருள் எளியோராக மாறி, பணிபுரிய வேண்டும் என்ற அழைப்பையும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் மூவேளை செப உரையில் முன்வைத்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 October 2018, 13:10