தேடுதல்

Vatican News
புனிதர் பட்ட சிறப்புத் திருப்பலியில் திருத்தந்தை மறையுரை வழங்கினார் புனிதர் பட்ட சிறப்புத் திருப்பலியில் திருத்தந்தை மறையுரை வழங்கினார்  (Vatican Media)

புனித பட்ட சிறப்புத் திருப்பலியில் திருத்தந்தையின் மறையுரை

அனைத்தையும் இழக்கத் துணிவு கொண்டு, இயேசுவை மட்டுமே பின்பற்ற விழைந்த புனிதர்கள், பாரம் ஏதுமின்றி, சுதந்திரமாக, மகிழ்வாக வாழ்ந்தவர்கள் - திருத்தந்தை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

இயேசுவைத் தேடி ஓடிவந்த அந்த மனிதருக்கு (மாற்கு 10:17) நற்செய்தியில் பெயர் தரப்படாததால், அந்த மனிதரில் நம்மையே நாம் அடையாளப்படுத்திக்கொள்ளலாம் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அக்டோபர் 14, இஞ்ஞாயிறன்று வழங்கிய மறையுரையில் கூறினார்.

திருத்தந்தை 6ம் பவுல், சான் சால்வதோர் பேராயர் ஆஸ்கர் ரொமேரோ உட்பட, ஏழு அருளாளர்களுக்கு புனித பட்டம் வழங்கும் சிறப்புத் திருப்பலியை, வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தில், தலைமையேற்று நடத்தியத் திருத்தந்தை, இயேசுவைத் தேடிச் சென்றவர், நிலை வாழ்வடைய விரும்பியதைப் போலவே நாம் ஒவ்வொருவரும் விரும்புகிறோம் என்பதை தன் மறையுரையின் துவக்கத்தில் குறிப்பிட்டார்.

கட்டளைகளைக் கடைபிடித்தால் நிலை வாழ்வடையலாம் என்று கூறிய இயேசு, அதற்கு அடுத்ததாக, முழுமையான, சுதந்திரமான அன்பு வழிக்கு அந்த மனிதரை அழைத்தார் என்பதைச் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, சுதந்திரமான அன்புக்குத் தடையாக இருப்பது, இவ்வுலக செல்வங்கள் மீது நாம் கொள்ளும் பற்று என்று எடுத்துரைத்தார்.

நம் உள்ளங்கள் காந்தம் போன்றவை

அன்பை நோக்கி கவர்ந்திழுக்கப்படும் நம் உள்ளங்கள் காந்தங்கள் போன்றவை என்று கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அன்புக்குப் பதிலாக, இவ்வுலக செல்வங்களால் ஈர்க்கப்படும் உள்ளங்கள், அங்கேயே தங்கிவிடும் ஆபத்து உள்ளது என்று கூறினார்.

அனைத்தையும் தியாகம் செய்ய மனமின்றி, செல்வங்களிலேயே சிறைப்படும் நாமும், நம் திருஅவையும், நம்மை மையமாக்கி, அங்கேயே நிறைவு காணும் ஆபத்து உள்ளது என்றும், அத்தகைய வாழ்வு, இயந்திர கதியில், ஒரே விதமாகச் செல்லும் வாழ்வாக மாறிவிடுகிறது என்றும் திருத்தந்தை தன் மறையுரையில் எச்சரிக்கை விடுத்தார்.

அனைத்தையும் இழக்கத் துணிந்த புனிதர்கள்

அனைத்தையும் இழக்கத் துணிவு கொண்டு, இயேசுவை மட்டுமே பின்பற்ற விழைந்த புனிதர்கள், பாரம் ஏதுமின்றி, சுதந்திரமாக, மகிழ்வாக வாழ்ந்தவர்கள் என்று கூறியத் திருத்தந்தை, ஒவ்வொரு புனிதரையும் தனிப்பட்ட வகையில் குறிப்பிட்டு, அவர்களைப்பற்றிய. சில எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டார்.

திருத்தந்தை 6ம் பவுல், பேராயர் ரொமேரோ

திருத்தூதர் பவுலின் பெயரைத் தாங்கிய புனிதத் திருத்தந்தை 6ம் பவுல், அந்தத் திருத்தூதரைப் போலவே, புதிய பகுதிகளை தன் நற்செய்தியால் வென்றவர் என்றும், புனிதம் என்ற நிலைக்கு நாம் அனைவரும் அழைக்கப்பட்டுள்ளோம் என்பதை தன் உரைகளிலும், எழுத்துக்களிலும் உரைத்தவர் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் குறிப்பிட்டார்.

பேராயர் ரொமேரோ அவர்கள், தன்னுடைய பதவி வழங்கிய பாதுகாப்பைத் துறந்து, தன் உயிருக்கு வந்த ஆபத்தையும் பொருட்படுத்தாமல், வறியோருடன் தன்னையே அடையாளப்படுத்திக் கொண்டதால், நற்செய்தியை தன் வாழ்வாக மாற்றியவர் என்று திருத்தந்தை குறிப்பிட்டார்.

ஏனைய ஐந்து புனிதர்கள்

அதேவண்ணம், அருள்பணியாளர்களான பிரான்செஸ்க்கோ ஸ்பிநெல்லி, மற்றும், வின்சென்சோ ரொமானோ, அருள் சகோதரிகளான மரிய கத்தரீனா காஸ்பெர், நசாரியா இஞ்ஞாசியா, நேபிள்ஸ் பகுதியிலிருந்து வந்த இளையவர், நுன்சியோ சுல்பிரிசியோ ஆகிய ஐவரும், இறைவனுக்காகவும், அயலவருக்காகவும் தங்களிடமிருந்த அனைத்தையும் தியாகம் செய்தனர் என்பதை, தன் மறையுரையின் இறுதியில் கூறி முடித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

15 October 2018, 16:24