தேடுதல்

கவுனாஸ் சாந்தகோஸ் பூங்காவில் அன்னை மரியாவிடம் செபிக்கும் திருத்தந்தை கவுனாஸ் சாந்தகோஸ் பூங்காவில் அன்னை மரியாவிடம் செபிக்கும் திருத்தந்தை 

சேவை, அக்கறை எனும் சிலுவைகளை ஊன்றுவோம்

அடக்கியாள்வதற்கான மன சோதனைகளை வெற்றிகொள்ளவேண்டுமெனில், நாம் ஒவ்வொருவரும் கடை ஊழியராக மாறவேண்டும்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

அன்பு சகோதர சகோதரிகளே,

சாலமோனின் நூலிலிருந்து இன்று வாசிக்கப்பட்ட முதல் வாசகம், நீதிமான்கள் துன்புறுத்தப்படுவது, இறைப்பற்றில்லாதவர்களுக்கு இவர்களின் இருப்பு தொந்தரவாக இருப்பது ஆகியவை பற்றி எடுத்துரைக்கிறது. இறைப்பற்றில்லாதவர்கள், ஏழைகளை ஒடுக்குபவர்களாகவும்,  கைம்பெண்கள் மீது கருணை காட்டாதவர்களாகவும், பெரியோரை மதிக்காதவர்களாகவும் உள்ளனர். இறைப்பற்றில்லாதவர்கள், நீதியின் அளவுகோல் அதிகாரமே என நம்புவதாகத் தெரிகின்றது. இறைப்பற்றில்லாதவர்கள் தங்கள் கொள்கைகளை மற்றவர்கள்மீது திணித்து அவர்களை அடக்கியாள முயல்கின்றனர். தங்கள் நேர்மை, வெளிப்படை நிலை, கடின உழைப்பு, தினசரி வாழ்வில் மற்றவர்களுடன் இணைந்து வாழ்தல் ஆகியவை வழியே, இன்னொரு சிறந்த உலகை காட்ட முயலும்போது, இந்த இறைப்பற்றில்லாதவரகள், அவர்களை வன்முறை வழியாக அடிமைப்படுத்தி அடக்கியாள முயல்கின்றனர். இறைப்பற்றில்லாதவர்களில் குடியிருக்கும் தீயோன், நல்லவற்றை அழிக்கவே ஆவல் கொள்கின்றான்.

மற்றவர்களை அடக்கியாளும் சோதனை

75 ஆண்டுகளுக்கு முன்னர், ஆயிரக்கணக்கான யூத மக்கள் வில்னியூசில் கொல்லப்பட்டனர். சாலமோனின் ஞானம் நூலில் கூறப்பட்டுள்ளதுபோல்,  யூத மக்கள் மிக்கொடுமையான தண்டனைகளை அனுபவித்தனர். இத்தகைய சோக நிகழ்வுகள் இடம்பெறுவதை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சிந்திக்க இறையருளை வேண்டுவோம்.

ஒவ்வொரு இதயத்திலும் குடியிருக்கும் சோதனைகளை, அதாவது, முதன்மை இடத்தை பிடிப்பதற்கும், மற்றவர்களை அடக்கியாள்வதற்கும், எழுகின்ற சோதனைகள் குறித்து இயேசு கூறுகிறார். இவ்வாறு, அடக்கியாள்வதற்கான சோதனைகளை வெற்றிகொள்ள வேண்டுமெனில், நாம் ஒவ்வொருவரும் ஊழியருள் கடை ஊழியராக மாறவேண்டும். மற்றவர்களுக்கு பணியாற்றி, அந்த ஏழைகளின், ஒதுக்கப்பட்டோரின் நிலைகளை புரிந்து கொள்ளவேண்டும்.

லித்துவேனிய சிலுவைக்குன்றைப் பற்றி...

இயேசுவின் நற்செய்தி, நம் ஆழ்மனதைத் தொட நாம் அனுமதிக்கும்போது, ஒருமைப்பாடு, உலகெங்கும் உண்மையில் நிலையாகும். கிறிஸ்தவர்களாகிய நாம், மற்றவர்களை மதித்தல், காயங்களை குணப்படுத்தல், பாலங்களைக் கட்டியெழுப்புதல், உறவுகளைப் பலப்படுத்துதல், மற்றவர்களின் சுமைகளை தாங்குதல் போன்றவற்றில் உறுதியாக இருக்கவேண்டும். இங்கு, லித்வேனியாவில் உங்கள் மத்தியில் உள்ள சிலுவைகளின் குன்றில், கடந்த நூற்றாண்டுகளில் எண்ணற்ற மக்கள் சிலுவைகளை ஊன்றிச் சென்றுள்ளனர்.

இவ்வேளையில் அன்னைமரியை நோக்கி வேண்டுவோம். ஏழைகளும், ஒதுக்கப்பட்டோரும், சிறுபான்மையினரும் வாழும், வாழ்வு மலைகளில், நம் சேவை, அக்கறை எனும் சிலுவைகளை ஊன்ற, அவர் உதவியைக் கேட்போம். நமக்குப் பிடிக்காதவர்களை அடக்கி, அழிக்க நினைக்கும் மனநிலைகளிலிருந்தும், அத்தகைய கலாச்சாரத்திலிருந்தும் விலகி நிற்போம். அன்னை மரியாவைப்போல் நாமும் தாரளமனதுடன் 'ஆம்' என்று சொல்லும் வரத்தை வேண்டுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 September 2018, 15:06