தேடுதல்

Vatican News
வில்நியூசில் இளையோரைச் சந்திக்கச் செல்லும் திருத்தந்தை வில்நியூசில் இளையோரைச் சந்திக்கச் செல்லும் திருத்தந்தை  (AFP or licensors)

வில்நியூசில் இளையோர் சந்திப்பு

எச்சூழலிலும் இயேசுவில் நம்பிக்கை வைப்பதற்கு அஞ்ச வேண்டாம், இரக்கம் என்ற இயேசுவின் பரட்சிப் பாதையின் ஓர் அங்கமாக இருங்கள் - திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

செப்டம்பர் 22, இச்சனிக்கிழமை மாலை உள்ளூர் நேரம் 5.30 மணிக்கு, அதாவது இந்திய-இலங்கை நேரம் இரவு எட்டு மணிக்கு, வில்நியூஸ் நகரின் பேராலய வளாகத்தில், இளையோரைச் சந்தித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். வில்நியூஸ் நகர் வரலாற்றின் மையமாக அமைந்துள்ள இந்த வளாகம், 19ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது. புனிதர்கள் ஸ்தனிஸ்லாஸ், லடிஸ்லாஸ் பேராலயத்திற்கு முன் அமைந்துள்ள இந்த வளாகத்திலுள்ள வைக்கப்பட்டுள்ள ஒரு கல், புதுமையின் கல் என அழைக்கப்படுகின்றது. இதை மூன்று முறை சுற்றி வருகின்றவர்களுக்கு, நினைத்தவை நடக்கும் என்ற நம்பிக்கையும் நிலவுகிறது. திருத்தந்தை இந்த வளாகத்தில் திறந்த காரில் வலம்வந்தவேளையில், அவ்விடத்தில் குழுமியிருந்த ஆயிரக்கணக்கான இளையோரின் உற்சாக ஆடல்பாடல்கள் எங்கும் எதிரொலித்தன. இந்த இளையோர் சந்திப்பில் முதலில், மோனிக்கா, ஜோனாஸ் ஆகிய இரு இளையோர் தங்களின் சாட்சிய வாழ்வை திருத்தந்தையிடம் பகிர்ந்துகொண்டனர். இந்த இளையோரின் பகிர்தலுக்குப் பின்னர் இளையோரின் நடனமும் இடம்பெற்றது.

மோனிக்கா கூறியதற்குப் பதில் சொன்ன திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உங்களோடு ஒரு நாடக அரங்கத்திற்குச் சென்று, பின்னர், ஓர் உணவகத்தில் அமர்ந்து பேசியதைப் போல் உணர்ந்தேன். உங்கள் வாழ்க்கை நாடகம் அல்ல, அதில் நடப்பவை அனைத்தும் நிஜமானவை என்று கூறி தன் உரையைத் தொடர்ந்தார். இலக்கு ஏதுமின்றி, நம்பிக்கையின்றி சுற்றி வருவதற்கு இளையோருக்கு பெரும் சோதனைகள் உள்ளன. உங்கள் நம்பிக்கையை இயேசுவின் மீது வைத்து, முன்னேறிச் செல்லுங்கள். உங்கள் வாழ்வு, அவ்வப்போது தீப்பிடித்து எரிந்தாலும், அதை மீண்டும் கட்டியெழுப்பும் வேளையில், இயேசுவும் உங்களோடு இணைந்து உங்கள் வாழ்வை கட்டியெழுப்புவார் என்று, இளையோரை ஊக்கப்படுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இளையோர் சந்திப்பை நிறைவுசெய்து, திருத்தந்தை அந்த வளாகத்தைவிட்டுச் சென்றுகொண்டிருந்தவேளையில், இளையோரின் ஆடல்பாடல்கள் ஓங்கி ஒலித்துக்கொண்டே இருந்தன

23 September 2018, 16:04