தேடுதல்

Pope Francis in Estonia Pope Francis in Estonia 

எஸ்டோனியாவில் திருத்தந்தை பிரான்சிஸ்

எஸ்டோனிய அரசுத்தலைவர் Kersti Kaljulaid, அரசின் முக்கிய பிரதிநிதிகள், தலத்திருஅவை பிரதிநிதிகள் ஆகியோர் தாலின் விமான நிலையத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை வரவேற்றனர்

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

வட ஐரோப்பாவில், பால்டிக் கடற்கரையில், டென்மார்க், எஸ்டோனியா, லாத்வியா, ஃபின்லாந்து, ஜெர்மனி, லித்துவேனியா, போலந்து, இரஷ்யா, சுவீடன் ஆகிய நாடுகள் அமைந்திருந்தாலும், லித்துவேனியா, லாத்வியா, எஸ்டோனியா ஆகிய மூன்றுமே,  பால்டிக் நாடுகள் என அழைக்கப்படுகின்றன. இம்மூன்று பால்டிக் நாடுகளுக்கும், கடந்த  சனிக்கிழமையன்று நான்கு நாள் திருத்தூதுப் பயணம் மேற்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், லித்துவேனியா, லாத்வியா ஆகிய இரு நாடுகளிலும் பயண நிகழ்வுகளை நிறைவுசெய்து, செப்டம்பர் 25, இச்செவ்வாயன்று எஸ்டோனியா நாட்டில் பயண நிகழ்வுகளை மேற்கொண்டார்.

இத்திருத்தூதுப் பயணத்தின் முதல் மூன்று நாள்களிலும் தான் தங்கியிருந்த வில்நியூஸ் திருப்பீட தூதரகத்திற்கு, லித்துவேனிய நாட்டு  மரத்தாலான இயேசு கிறிஸ்துவின் திருவுருவம் ஒன்றைப் பரிசாக அளித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். இச்செவ்வாய் காலை 7.30 மணிக்கு, வில்நியூஸ் திருப்பீட தூதரகத்தில் பணியாற்றும் அனைவருக்கும் நன்றி சொல்லி, அந்நகர் பன்னாட்டு விமான நிலையம் சென்றார் திருத்தந்தை. விமான நிலையத்தில், லித்துவேனிய அரசுத்தலைவர் உட்பட பல முக்கிய அரசு அதிகாரிகளும், தலத்திருஅவை தலைவர்களும் கூடியிருந்து, திருத்தந்தைக்கு நன்றி சொல்லி எஸ்டோனியா நாட்டிற்கு வழியனுப்பி வைத்தனர். இரு தன்னார்வலர்கள், திருத்தந்தைக்கு நினைவுப் பரிசுகளையும் வழங்கினர்.

வில்நியூஸ் நகரிலிருந்து, 528 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள, எஸ்டோனியத் தலைநகர் தாலின்னுக்கு (Tallinn) ஒரு மணி இருபது நிமிடங்கள் பயணம் செய்து, அந்நகரை திருத்தந்தை அடைந்தபோது உள்ளூர் நேரம் இச்செவ்வாய் காலை 9 மணி 50 நிமிடமாக இருந்தது. ஃபின்லாந்து வளைகுடாவிலுள்ள இந்நகரம், 1219ம் ஆண்டில், டென்மார்க் அரசர் 2ம் வால்தெமாரோ என்பவரால் தோற்றுவிக்கப்பட்டது.  

மரபு உடைகளில் இருந்த நான்கு சிறார் திருத்தந்தைக்கு மலர்கள் கொடுத்தனர். விமான நிலைய முக்கிய அதிகாரிகளின் வரவேற்பறைக்கு அரசுத்தலைவரும், திருத்தந்தையும் சிவப்பு கம்பளத்தில் நடந்து சென்றவேளையில், சிறார் பாடகர் குழு ஒன்று பாடிக்கொண்டிருந்தது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 September 2018, 16:12