தேடுதல்

வெனெசுவேலாவில் திருச்சிலுவை வெனெசுவேலாவில் திருச்சிலுவை 

திருச்சிலுவை பற்றி தியானிப்பதற்கு அழைப்பு

தீமையை, அன்பால் மட்டுமே வெல்ல முடியும் – திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

நம் ஆண்டவரின் திருச்சிலுவை பற்றி தியானிப்பதற்கு இன்று திருஅவை நமக்கு அழைப்பு விடுக்கின்றது, கிறிஸ்தவர்களாகிய நாம், திருச்சிலுவை பற்றி தியானிக்கும்வேளையில், அச்சிலுவையை, தோல்வியின் அடையாளமாகவும், வெற்றியின் அடையாளமாகவும் தியானிக்கிறோம் என்ற சொற்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டரில் வெளியாயின.

திருச்சிலுவையின் மகிமை விழாவாகிய செப்டம்பர் 14, இவ்வெள்ளியன்று, தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றியத் திருப்பலியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறிய இச்சொற்கள், அவரின் டுவிட்டரில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மேலும், திருஅவையின் காயங்கள் ஏற்படுத்தும் துன்பங்களில், நாம் கிறிஸ்துவின் சிலுவையை அணைத்துக்கொள்கிறோம், ஏனெனில், தீமையை, அன்பால் மட்டுமே  வெல்ல முடியும் என்ற சொற்களும், திருத்தந்தையின் டுவிட்டரில், இவ்வெள்ளியன்று பதிவாகியுள்ளன.   

திருச்சிலுவை வரலாறு

நான்காம் நூற்றாண்டின் தொடக்கத்தில், உரோமைப் பேரரசர் கான்ஸ்டன்டைன் அவர்களின் அன்னை புனித ஹெலெனா அவர்கள், கிறிஸ்துவின் வாழ்வோடு தொடர்புடைய புனித இடங்களைத் தேடி புனித பூமிக்குத் திருப்பயணம் மேற்கொண்டார். அச்சமயம், எருசலேமில் மேர்கொண்ட அகழ்வராய்ச்சியில், ஓரிடத்தில் மூன்று சிலுவைகள் கண்டுபிடிக்கப்பட்டன. அம்மூன்று சிலுவைகளில் இயேசு அறையப்பட்ட சிலுவை எது என்பதைக் கண்டுபிடிக்க, மரணப் படுக்கையில் போராடிக் கொண்டிருந்த ஒரு பெண் அவ்விடத்திற்குக் கொண்டுவரப்பட்டார். அப்பெண், முதல் இரு சிலுவைகளைத் தொட்டபோது, அவரிடம் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. மாறாக மூன்றாவது சிலுவையை அவர் தொட்டதும் குணமடைந்தார். எனவே, அச்சிலுவையே இயேசு அறையப்பட்ட சிலுவை என புனித ஹெலெனா அறிந்துகொண்டார். அச்சிலுவையைக் கண்டுபிடித்த இடத்தில், 335ம் ஆண்டு புனித கல்லறைக் கோவில் கட்டிமுடிக்கப்பட்டு செப்டம்பர் 13, 14 ஆகிய தேதிகளில் அர்ச்சிக்கப்பட்டது. இந்த அர்ச்சிப்பின் நினைவாகத்தான் ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் மாதம் 14ம் தேதியன்று திருச்சிலுவையின் மகிமை விழாவென திருஅவையில் கொண்டாடப்படுகிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 September 2018, 16:30