தேடுதல்

Vatican News
Siluva (LITUANIA) திருத்தல அன்னை மரியா Siluva (LITUANIA) திருத்தல அன்னை மரியா 

இறைத்திட்டத்திற்குப் பணிந்து நடக்க மரியா உதவுவாராக

ஆறாம் நூற்றாண்டில், எருசலேமிலுள்ள புனித அன்னா ஆலயம் அர்ச்சிக்கப்பட்டபோது புனித கன்னி மரியாவின் பிறப்பு விழாவின் முதல் திருவழிபாட்டு நிகழ்வு நடைபெற்றது

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

“கடவுள் நம் வாழ்வுக்கென வகுத்துள்ள திட்டத்திற்கு மகிழ்வோடு நம்மைக் கையளிப்பதற்கு, புனித கன்னி மரியா உதவுவாராக” என்ற சொற்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டரில், இச்சனிக்கிழமையன்று வெளியாயின.

புனித கன்னி மரியாவின் பிறப்பு விழாவான செப்டம்பர் 08, இச்சனிக்கிழமையன்று, நாம் கடவுளின் திட்டத்திற்கு இயைந்து நடப்பதற்கு, அன்னை மரியாவின் உதவியை நாடுவோம் என, தன் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

புனித கன்னி மரியாவின் பிறப்பு

இயேசுவின் பிறப்பு, புனித திருமுழுக்கு யோவானின் பிறப்பு, புனித கன்னி மரியாவின் பிறப்பு ஆகிய மூன்று பிறப்புகள் மட்டுமே திருஅவையில் சிறப்பிக்கப்படுகின்றன. புனித கன்னி மரியாவின் பிறப்பைச் சிறப்பிக்கும் விழா பற்றி, ஆறாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட பாடலிலிருந்து அறிய வருகிறோம். மரியா, இறைவனின் அன்னை என அறிவிக்கப்பட்ட, எபேசு பொதுச்சங்கத்திற்குப் பின்னர், சிரியா அல்லது பாலஸ்தீனாவில், குறிப்பாக சிரியாவில், ஆறாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இவ்விழா ஆரம்பிக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

இந்தியாவின் தமிழகத்தில், இவ்விழா, ஆரோக்ய அன்னை விழாவாகவும், கோவாவில், "Monti Fest" அதாவது அறுவடைக்கு நன்றிகூறும் விழாவாகவும் சிறப்பிக்கப்படுகின்றது.

பிரான்ஸ் நாட்டில், திராட்சை இரசம் தயாரிப்பவர்கள், இவ்விழாவை, திராட்சை அறுவடையின் நம் அன்னை விழாவென அழைக்கின்றனர். அன்றைய நாளில் நல்ல திராட்சைப் பழங்கள் ஆலயங்களுக்குக் கொண்டு வரப்படும். திராட்சைப்பழக் கொத்துகள், அன்னை மரியா திருவுருவத்தில், கைகளில் தொங்கவிடப்படும் என்று சொல்லப்படுகின்றது.

08 September 2018, 15:47