தேடுதல்

Vatican News
Tv2000க்குப் பேட்டியளிக்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ் Tv2000க்குப் பேட்டியளிக்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ்  

இத்தாலிய வர்த்தக தினத்தாளுக்கு திருத்தந்தை பேட்டி

பொருளாதாரம், சுற்றுச்சூழல், புலம்பெயர்ந்தோர், ஐரோப்பா, அமைதி போன்ற தலைப்புக்களில், "Il Sole 24 Ore" எனப்படும் இத்தாலிய வர்த்தக தினத்தாளுக்கு நீண்ட பேட்டி அளித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

சமூக வாழ்வு, தனிமனிதரின் மொத்த பண்புகளால் அல்ல, மாறாக, மக்கள் ஒன்றாக, முழு மனித சமுதாயமாக வளர்வதால் அமைக்கப்படுவது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஓர் இத்தாலிய வர்த்தக தினத்தாளுக்கு அளித்த நீண்டதொரு நேர்காணலில் கூறியுள்ளார்.

"Il Sole 24 Ore" எனப்படும் இத்தாலிய வர்த்தக தினத்தாளுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கியுள்ள நேர்காணலில், பல்வேறு தலைப்புக்களில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு விரிவான பதில்களை அளித்துள்ளார்.

வேலையும் தனிமனித மாண்பும்

ஒரு சமூகத்தில், யாரும் ஒதுக்கப்படாமல், ஒவ்வொருவரின் ஒத்துழைப்பும் வரவேற்கப்படும்போது மட்டுமே, உண்மையான வளர்ச்சி இடம்பெற முடியும் என்றும், உண்மையான வளர்ச்சி என்பது, ஆதாயங்களில் கவனம் செலுத்தப்படாமல், இரக்கம் மற்றும் கனிவுப் பண்புகளால் உருவாகும் உறவுகளின் பயனாக கிடைப்பது என்றும்,   திருத்தந்தை கூறியுள்ளார்.

ஒவ்வொரு பொருளாதார நடவடிக்கையும், மனிதரை மையப்படுத்தியதாய் அமைய வேண்டும் என்றும், மனிதருக்கு மாண்பைக் கொடுப்பது பணமல்ல, மாறாக, வேலையே என்றும் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, பணம் மற்றும் இலாபத்தின் மீது கவனம் செலுத்துவது, வேலைவாய்ப்பை உருவாக்கத் திறனற்ற ஒரு பொருளாதார அமைப்பின் விளைவால் ஏற்படுவது என்றும் தெரிவித்தார்.

பலர் வேலையை ஒரு சுமையாகக் கருதுவது பற்றிக் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த திருத்தந்தை, வேலை செய்வது, மனித மாண்போடும், தனக்கும், பிறருக்கும் பொறுப்பேற்கும் திறனோடும் தொடர்புடையதால், அது நல்லது என்று கூறினார்.

சுற்றுச்சூழல்

சுற்றுச்சூழல் தொடர்புடைய பல கேள்விகளுக்குப் பதிலளித்த திருத்தந்தை, பொது நலனைக் கட்டியெழுப்புவதற்கு நிறுவனங்கள் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். பல நிறுவனங்கள், தொழிலில் திறமை மற்றும் தொழில்நுட்பத்தில் பயிற்சிகளை வழங்குகின்றன, அதேநேரம் வாழ்வின் விழுமியங்களுக்கும் இதேமாதிரியான பயிற்சிகளை அளிக்க வேண்டுமென்று, தான் விரும்புவதாகவும் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மனித சமுதாயம், இப்பூமியின் பாதுகாவலராக இருப்பதுபோல் தெரியவில்லை, மாறாக அதைச் சுரண்டும் கொடுங்கோலராக இருக்கின்றது என்றும், நல்லிணக்க வருங்காலம், ஒருங்கிணைந்த மனித முன்னேற்றம், சமத்துவமின்மையை குறைத்தல் போன்றவைகளைக் கட்டியெழுப்பும், ஒரு புதிய வாழ்வுமுறைக்கு, சுற்றுச்சூழல் குறித்த மனச்சான்று அழைப்பு விடுக்கின்றது என்றும், திருத்தந்தை கூறினார்.

புலம் பெயர்ந்தோர் மற்றும் ஐரோப்பா

புலம் பெயர்ந்தோர் மற்றும் ஐரோப்பா பற்றிய கேள்விகளுக்குப் பதிலளித்த திருத்தந்தை,  ஐரோப்பாவுக்கு, நம்பிக்கையும் வருங்காலமும் தேவைப்படுகின்றன என்றும், புலம்பெயர்ந்தவர்கள், தங்களை வரவேற்கும் நாடுகளின் கலாச்சாரத்தையும், சட்டங்களையும் மதிக்க வேண்டுமென்றும் கூறினார்.

நம் திட்டங்கள், எப்போதும் இரக்கம், தொலைநோக்குப் பார்வை மற்றும் துணிச்சலுடன் அமைய வேண்டுமென்றும், இதன் வழியாக, அமைதியைக் கட்டியெழுப்புவதில் முன்னேறிச் செல்ல இயலும் என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார்.

07 September 2018, 15:10