தேடுதல்

Vatican News
வெனிசுவேலா நாட்டு ஆயர்கள் சந்திப்பு வெனிசுவேலா நாட்டு ஆயர்கள் சந்திப்பு   (Vatican Media)

வெனிசுவேலாவுக்கு திருத்தந்தையை அழைத்த ஆயர்கள்

பல்வேறு துயரங்களைச் சந்தித்துவரும் வெனிசுவேலா நாட்டு மக்கள், திருத்தந்தை தங்கள் நாட்டுக்கு வரவேண்டும் என்ற வேண்டுகோளை, ஆயர்கள் வழியே முன்வைத்துள்ளனர்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

வெனிசுவேலா நாட்டின் பாதுகாவலரான கொரொமோட்டோவின் அன்னை மரியா திருநாள், செப்டம்பர் 11, இச்செவ்வாயன்று சிறப்பிக்கப்பட்ட வேளையில், அந்நாட்டின் 46 ஆயர்களுடன், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அத்லிமினா சந்திப்பை மேற்கொண்டார்.

வெனிசுவேலா நாட்டில் நிலவும் துன்பகரமானச் சூழலில், அந்நாட்டு ஆயர்கள், எந்த ஒரு குழுவினரையும் சாராமல், நடுநிலையோடு, மக்கள் அனைவருக்கும் நன்மை பயக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதைக் குறித்து, திருத்தந்தை ஆயர்களைப் பாராட்டினார்.

வெனிசுவேலா நாட்டிலிருந்து, பக்கத்து நாடுகளுக்குப் புலம்பெயரும் மக்களுக்கு, ஆயர்கள் ஆற்றிவரும் உன்னத பணிகளுக்கு தன் நன்றியைத் தெரிவித்த திருத்தந்தை, அந்நாட்டு மக்களின் நம்பிக்கையை உயர்த்திப் பிடிக்கும் பணியே, தற்போது ஆயர்களின் முக்கியமான பணி என்பதையும் சுட்டிக்காட்டினார்.

மேலும், ஆயர்களுடன் மேற்கொண்ட இந்த அத்லிமினா சந்திப்பில், அருள்பணியாளர்களின் உருவாக்கம், சவால்களை எதிர்கொள்ளும் அருள்பணியாளர்களுக்கு ஆயர்களின் ஆதரவு ஆகியவை குறித்தும் திருத்தந்தை தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

பல்வேறு துயரங்களைச் சந்தித்துவரும் வெனிசுவேலா நாட்டு மக்கள், திருத்தந்தை தங்கள் நாட்டுக்கு வரவேண்டும் என்ற வேண்டுகோளை முன்வைத்துள்ளனர் என்பதை, அந்நாட்டு ஆயர்கள் திருத்தந்தையிடம் வெளிப்படுத்தினர்

12 September 2018, 15:26