Cerca

Vatican News
அயர்லாந்தில் திருத்தந்தை தன் முதல் உரையை வழங்கியபோது அயர்லாந்தில் திருத்தந்தை தன் முதல் உரையை வழங்கியபோது  (ANSA)

அயர்லாந்தில் திருத்தந்தையின் முதல் உரை

திருஅவை பணியாளர்களின் பாலியல் முறைகேடுகளும், அது குறித்த பாராமுகமும், திருஅவைக்கு வேதனையையும் வெட்கக்கேட்டையும் கொணர்ந்துள்ளன‌.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

அயர்லாந்து நாட்டில் என் திருத்தூதுப்பயணத்தின் துவக்கத்திலேயே, இந்நாட்டின் சமூக, கலாச்சார, மற்றும், மத பிரதிநிதிகளையும், நாடுகளின் அரசியல் தூதுவர்களையும் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.

உலக குடும்பங்கள் மாநாட்டில் பங்குபெற நான் வந்துள்ளேன் என்பது நீங்கள் அறிந்ததே. குடும்பங்களை ஊக்கப்படுத்தவேண்டிய அவசியம் திருஅவைக்கு உள்ளது. இந்த குடும்பங்களின் மாநாடு என்பது, குடும்பங்கள் ஒருவருக்கொருவர் ஆதரவு தரவேண்டும், தங்களுக்குள் ஒருவருக்கொருவர் விசுவாசமாக இருக்க வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்துவதற்காக மட்டுமல்ல, மாறாக, தங்கள் குடும்ப அங்கத்தினர்களின் கல்வியிலும் வளர்ச்சியிலும் முக்கிய பங்கு வகித்து, உறுதியான சமூக இணக்கத்தை உருவாக்க உதவுவதற்குமாகும்.

குடும்பங்கள் சந்திக்கும் பிரச்சனைகள்

இன்றைய குடும்பங்கள் சந்திக்கும் பிரச்சனைகள் எண்ணற்றவை. திருமண முறிவுகளும், குடும்பப் பிரிவினைகளும், வருங்கால சமூகங்களை, பல நிலைகளிலும் பாதிக்க வல்லவை. எல்லாச் சூழல்களிலும், குடும்பங்கள் பாதுகாக்கப்பட்டு ஊக்குவிக்கப்பட வேண்டும். வாழ்வின் முதல் அடிகளை நாம் அனைவருமே, குடும்பங்களில்தான் எடுத்து வைத்தோம். அங்குதான் இணக்க வாழ்வையும், சுயநல உணர்களை வெற்றி கொள்வதையும், முரண்பாடுகளிடையே ஒப்புரவை உருவாக்குவதையும், வாழ்க்கை மதிப்பீடுகளையும் கற்றுக்கொண்டோம். இவ்வுலகம் அனைத்தையும் ஒரே குடும்பமாக நோக்கினோமென்றால், ஒன்றிப்பு மற்றும் ஒருமைப்பாட்டிற்கான நம் அழைப்பை, குறிப்பாக, நம் பலவீனமான சகோதரர், சகோதரிகளுடனான ஒருமைப்பாட்டிற்கான அழைப்பை நாம் உணர்வோம். ஆனால், இன்றைய உலகின், ஏழை-பணக்கார இடைவெளி அதிகரிப்பு, மனித உரிமை மீறல், மனித மாண்பு புறக்கணிப்பு, வன்முறை, மோதல், நிற-இன பகைமை போன்றவைகள் முன்னால், வலிமையற்றவர்களாக உணர்கிறோம். உண்மை அமைதி என்பது, கடவுளிடமிருந்தே வருகிறது. இருப்பினும் நம் மனமாற்றங்கள் தொடர்ந்து இடம்பெறவேண்டிய தேவையும் உள்ளது. பொருளாதார வளம், நம்மிடையே நீதியான, சரிநிகரான, ஒரு சமூக ஒழுங்குமுறையை உருவாக்கும் என நம்மால் கூறமுடியுமா? அல்லது, இன்றைய, 'பயன்படுத்தி தூக்கியெறியும் கலாச்சாரம்', ஏழைகளின் தேவைகள் குறித்த நம் பாராமுகத்தை உருவாக்கியுள்ளதா? பிறக்கவிருக்கும் குழந்தைகளின் வாழும் உரிமையைப் பறிக்க நமக்கு உரிமை உள்ளதா? இன்றைய நம் மனச்சான்றிற்கு சவாலாக இருக்கும் கேள்வி, அகதிகள் நெருக்கடி பற்றியது.

கடவுளின் கொடைகளாகிய குழந்தைகளைப் பராமரித்தல்

இந்நாட்டில் திருஅவை அதிகாரிகளால் இளஞ்சிறார் பாலியல் முறையில் தவறாக நடத்தப்பட்டது பற்றி நான் இங்கு குறிப்பிடாமல் இருக்க முடியாது. இதைத் தடுக்கவேண்டிய பொறுப்பிலுள்ள கத்தோலிக்க ஆயர்கள், துறவுசபைத் தலைவர்கள், அருள்பணியாளர்கள், மற்றும், ஏனையோர் செயல்படத் தவறியது, வேதனையையும் வெட்கத்தையும் திருஅவைக்குக் கொணர்ந்துள்ளது. ஒவ்வொரு குழந்தையும் கடவுளின் கொடை. குழந்தைகளைப் பாதுகாக்கத் தவறிய இந்த பாலியல் முறைகேடுகள் தந்துள்ள பாடம், குழந்தைகளைப் பாதுகாக்க வேண்டிய நம் கடமைகளை வலியுறுத்துவதாக இருக்கட்டும். குழந்தைகளுக்கும் வாழ்வின் மதிப்பீடுகள் பற்றி கவனமுடன் கற்பிக்க வேண்டிய நம் கடமைகளை உணர்ந்து செயல்படுவோம்.

1500 ஆண்டுகளுக்கு முன்னரே இந்நாட்டில் நற்செய்தி அறிவிக்கப்பட்டுள்ளது. அது இந்நாட்டு மக்களின் வாழ்விலும் கலாச்சாரத்திலும் ஒரு பகுதியாகவே மாறியுள்ளது. நற்செய்தியைப் பெற்ற இந்நாட்டு மக்கள், வேறு இடங்களுக்கும் மறைபோதகர்களாக நற்செய்தியை எடுத்துச் சென்றுள்ளனர். இந்த நாட்டின் மக்கள், தங்கள் விசுவாசத்தால் பிறந்த ஞானத்தின் துணைகொண்டு தேசிய வாழ்வை வளப்படுத்தியுள்ளனர், வளப்படுத்தி வருகின்றனர். கடவுளின் ஞானம், மகிழ்ச்சி, மற்றும் அமைதியின் அருளை உங்கள் அனைவருக்காகவும் இறைவனிடம் இறைஞ்சுகின்றேன். நன்றி.

25 August 2018, 15:45