தேடுதல்

Vatican News
புனித மரியா முதல் பேராலயத்தில் திருத்தந்தை புனித மரியா முதல் பேராலயத்தில் திருத்தந்தை  (ANSA)

டப்ளின் புனித மரியா பேராலயத்தில் திருத்தந்தை

அருள்பணியாளர்களின் பாலியல் முறைகேடுகளால் பாதிக்கப்பட்டவர்கள் நினைவாக, டப்ளின் புனித மரியா பேராலயத்தில், ஒரு மெழுகுதிரியை ஏற்றி வைத்து செபித்தார் திருத்தந்தை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

அயர்லாந்து பிரதமர் மாளிகையில் நடைபெற்ற சந்திப்பை நிறைவு செய்து, அவ்விடத்திலிருந்து 5 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள திருப்பீடத் தூதரகம் சென்ற திருத்தந்தை, அங்கு மதிய உணவருந்தி சிறிது ஓய்வும் எடுத்துக்கொண்டார். டப்ளினில் திருப்பீடத் தூதரகம், 1929ம் ஆண்டு நவம்பர் 27ம் தேதியிலிருந்து செயல்பட்டு வருகிறது.

இச்சனிக்கிழமை மாலை 3.30 மணிக்கு, அதாவது இந்திய நேரம் இரவு 8 மணிக்கு டப்ளின் புனித மரியா பேராலயம் சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ். டப்ளினில் மிக முக்கியமான இப்பேராலயம், அந்நகரில் கத்தோலிக்கம் புதுப்பிறப்படைந்ததன் அடையாளமாக உள்ளது. அந்நாட்டின் அரசியல் மற்றும் மத வரலாற்றோடு, இப்பேராலயம் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளது. இப்பேராலயத்தில் ஏறக்குறைய 350 தம்பதியர் திருத்தந்தைக்காகக் காத்திருந்தனர். இங்கு பீடத்திற்கருகில், ஓர் இளம் தம்பதியர் நின்று, திருத்தந்தையிடம் மலர்கள் கொடுத்தனர். சிறிது நேரம் அமைதியாகச் செபித்தார் திருத்தந்தை. பின்னர் அருள்பணியாளர்களின் பாலியல் முறைகேடுகளால் பாதிக்கப்பட்டவர்கள் நினைவாக, ஒரு மெழுகுதிரியை ஏற்றினார் திருத்தந்தை. அதன் பின்னர், அண்மையில் தங்களின் திருமண பொன்விழாவைச் சிறப்பித்த ஒரு வயதான தம்பதியர் திருத்தந்தையை வாழ்த்திப் பேசினர். அதற்குப் பின்னர், Kildare மற்றும் Leighlin மறைமாவட்டத்தைச் சேர்ந்த, வருகிற செப்டம்பர் 27ம் தேதியன்று திருமணம் செய்யவிருக்கும் Denis Nulty மற்றும், Sinead Keoghanம், டப்ளின் உயர்மறைமாவட்டத்தைச் சேர்ந்த Stephen Maguire - Jordan Cahill இளம் தம்பதியரும் திருத்தந்தையிடம் இரு கேள்விகள் கேட்டனர். அதன்பின்னர் திருத்தந்தையின் உரையும் இடம்பெற்றது. இந்த முதல் நாளின் இறுதி நிகழ்வாக, டப்ளின் Croke அரங்கத்தில் குடும்பங்கள் விழா இடம் பெறுகின்றது. அயர்லாந்து கத்தோலிக்கரின் விசுவாசத்தை மேலும் உறுதிப்படுத்தவும், ஆழப்படுத்தவும், அந்நாட்டுக்கு இரண்டு நாள் திருத்தூதுப் பயணத்தை ஆரம்பித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

25 August 2018, 15:32