தேடுதல்

இயேசு சபை புனிதர் ஸ்தனிஸ்லாஸ் கோஸ்கா இயேசு சபை புனிதர் ஸ்தனிஸ்லாஸ் கோஸ்கா 

புனித ஸ்தனிஸ்லாஸ் கோஸ்கா இறந்ததன் 450ம் ஆண்டு நிறைவு

இயேசு சபையில் நவதுறவியாக ஒன்பது மாதங்களே வாழ்ந்த புனித ஸ்தனிஸ்லாஸ் கோஸ்கா அவர்கள், 18வது வயதில் கடும் நோயினால் தாக்கப்பட்டு இறந்தார்

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

இளையோரே, உங்களின் சுதந்திர உணர்வும், வருங்காலத்தை நம்பிக்கையோடு நோக்குவதும், உண்மை, நன்மைத்தனம் மற்றும் அழகின்மீது உங்களுக்குள்ள தாகமும், உலகுக்குத் தேவைப்படுகின்றன என்று கூறியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இயேசு சபை புனிதரான ஸ்தனிஸ்லாஸ் கோஸ்கா அவர்கள் இறந்ததன் 450ம் ஆண்டு நிறைவைமுன்னிட்டு, போலந்து நாட்டின் Płock ஆயர் Piotr Libera அவர்களுக்கு இப்புதன்கிழமையன்று செய்தி அனுப்பிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இளையோரின் பாதுகாவலராகிய இப்புனிதரின் வாழ்வை, இளையோர் பின்பற்றி நடக்குமாறு கேட்டுக்கொண்டார்.

போலந்தின் ராஸ்கோவ் நகரிலிருந்து வியன்னா வழியாக உரோம் நகருக்கு, நடந்தே வந்து சேர்ந்த இப்புனிதரின் குறுகியகால வாழ்வுப்பயணம், புனித வாழ்வின் இலக்கை எட்டுவதற்கு நாடுகளைக் கடந்துவந்த பெரிய பயணமாக உள்ளது என, புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள் (நவ.13,1988) கூறியதையும் சுட்டிக்காட்டியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இப்புனிதர் திருமுழுக்குப் பெற்ற நகரிலிருந்து பிறந்த நகருக்கு, வருகிற செப்டம்பரில் போலந்து இளையோர் நடைப்பயணம் மேற்கொள்ளவிருப்பதைக் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, புனித வாழ்வு நோக்கிய இப்புனிதரின் விரைவேகப் போக்கு, நடைப்பயணம் மேற்கொள்ளும்போது மட்டுமல்லாமல், ஒவ்வொரு நாள் வாழ்வின் பாதைகளிலும் தொடரப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.  

இயேசு சபை புனிதர் ஸ்தனிஸ்லாஸ் கோஸ்கா

ராஸ்கோவில் 1550ம் ஆண்டில் உயர்குலத்தில் பிறந்த புனித ஸ்தனிஸ்லாஸ் கோஸ்கா அவர்கள், தான் இயேசு சபையில் சேரவேண்டுமென்ற ஆவலைத் தந்தையிடம் தெரிவித்தபோது, அதற்கு அவர் மறுப்பு தெரிவித்தார். இதனால், தனது 17வது வயதில், சாக்குத் துணியைத் தன்மீது போட்டுக்கொண்டு, கால் நடையாகவே முதலில் ஜெர்மனியை அடைந்து, புனித பீட்டர் கனிசியுசிடம் தன்னை இயேசு சபையில் சேர்க்குமாறு கூறினார். ஆனால், சூழ்நிலையின் காரணமாக, உரோம் செல்வதே சிறந்தது என அவர் கூற, மேலும் 800 மைல்கள் நடந்து உரோம் வந்து சேர்ந்தார். ஆகஸ்ட் 15, இப்புதனன்று இப்புனிதர் இறந்ததன் 450ம் ஆண்டு நிறைவு சிறப்பிக்கப்பட்டது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 August 2018, 15:38