தேடுதல்

Vatican News
அயர்லாந்து மக்களிடம் காணொளியில் பேசுகிறார் திருத்தந்தை அயர்லாந்து மக்களிடம் காணொளியில் பேசுகிறார் திருத்தந்தை 

அயர்லாந்து திருப்பயணம் ஒப்புரவை உருவாக்கும்

அயர்லாந்து உலக குடும்பங்கள் மாநாட்டிற்கு திருத்தந்தை அனுப்பியுள்ள காணொளிச் செய்தியில், உலக குடும்பங்கள் மாநாடு, குடும்பத்திற்கென கடவுள் வகுத்துள்ள திட்டத்தின் அழகைக் கொண்டாடுவதாகும் என்று கூறியுள்ளார்

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

அயர்லாந்து நாட்டிற்கு நான் மேற்கொள்ளும் திருத்தூதுப் பயணம், அந்நாட்டின் கிறிஸ்தவர்கள் மத்தியில், ஒன்றிப்பு மற்றும் ஒப்புரவைக் கொண்டுவரும் என்ற நம்பிக்கையைத் தெரிவித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இத்திருத்தூதுப் பயணத்தின் முக்கிய நோக்கம், உலக குடும்பங்கள் மாநாட்டில் கலந்துகொள்வதாக இருந்தாலும், அயர்லாந்து குடும்பங்களின் அனைத்து உறுப்பினர்களையும், தான் அரவணைக்க விரும்புவதாகக் கூறியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

அயர்லாந்தில் ஆகஸ்ட் 21, இச்செவ்வாய் மாலையில் தொடங்கியுள்ள, 9வது உலக குடும்பங்கள் மாநாட்டின் நிறைவு நிகழ்வுகளுக்காக, வருகிற சனி, ஞாயிறு தினங்களில் (ஆக.25,26) அந்நாடு செல்வதையொட்டி, இச்செவ்வாய் மாலையில் அந்நாட்டினருக்கு அனுப்பிய காணொளிச் செய்தியில், இவ்வாறு கூறியுள்ளார் திருத்தந்தை.

கிறிஸ்தவ விசுவாசிகள் மத்தியில், முழு மனித சமுதாயத்திற்கும் கடவுள் காணும் கனவாகிய நிலைத்த அமைதியையும், ஒன்றிப்பையும் ஒப்புரவையும், இம்மாநாடு கொண்டுவரும் என்று, தான் நம்புவதாகத் தெரிவித்துள்ளார் திருத்தந்தை.

இத்தாலிய மொழியில் வழங்கிய இக்காணொளிச் செய்தியில், இடையில் ஆங்கிலத்தில் பேசியவேளையில், நான் அயர்லாந்திற்குத் திரும்பி வருவேன் என்பதை நினைக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கின்றது என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கூறியுள்ளார்.

22 August 2018, 15:49