Cerca

Vatican News
புதன் மறைக்கல்வியுரையின்போது......270618 புதன் மறைக்கல்வியுரையின்போது......270618  (ANSA)

மறைக்கல்வியுரை : மீட்பளிக்கும் அன்பை இறைக்கட்டளைகளில் காண...

இறைக்கட்டளைகளுக்கு நாம் அடிபணிவது என்பது, அடிமைத்தனமானதாகவோ, அல்லது, வெறும் சட்டத்திற்குப் பயந்ததாகவோ இருத்தல் ஆகாது. இறைவிருப்பத்திற்கு அன்புடன்கூடிய கீழ்ப்படிதலில், வாழ்வையும் உண்மை விடுதலையையும் நாம் நிறைவாக அனுபவிக்க உதவும்பொருட்டு, இறைவன் நம்மை விடுவிக்கிறார்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ், வத்திக்கான் செய்திகள்

வெயில் வழக்கத்தைவிட சிறிது அதிகமாகவே இருந்தாலும், குளிர்ந்த காற்றும் வீசிக்கொண்டிருக்க, திருப்பயணிகளின் பெருமளவான எண்ணிக்கையை மனதில் கொண்டு இவ்வாரமும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் புதன் மறைக்கல்வி உரை, தூய பேதுரு பேராலய வளாகத்திலேயே இடம்பெற்றது. ஆயிரக்கணக்கில் திருப்பயணிகளும், சுற்றுலாப் பயணிகளும் தூய பேதுரு வளாகத்தில் குழுமியிருக்க, முதலில் அருளாளர், திருத்தந்தை ஆறாம் பவுல் அரங்கிற்குச் சென்று, அங்கு அமர்ந்து பெரிய தொலைக்காட்சி திரை வழியாக திருத்தந்தையின் மறைக்கல்வி உரையில் பங்குபெற காத்திருந்த நோயாளர்கள், மற்றும், மாற்றுத்திறனாளர்களைச் சந்தித்தார் திருத்தந்தை. அங்கு குழுமியிருந்தவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தபின், 'செவித்திறனை இழந்தோர்க்கான அமெரிக்கக் கண்டத்தின் கத்தோலிக்க இளையோர்  அமைப்பின் அங்கத்தினர்களுக்கு தன் வாழ்த்துக்களையும் திருத்தந்தை தெரிவித்து, தனக்காகச் செபிக்குமாறும் கேட்டுக்கொண்டார். பின், அங்கிருந்து தூய பேதுரு வளாகம் வந்து,  இறைக்கட்டளைகள் குறித்து தன் மறைக்கல்வி உரையை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இறைக்கட்டளைகளுக்கு அடிபணிவது என்பது, அடிமைத்தனமல்ல

அன்பு சகோதர சகோதரிகளே, இறைக்கட்டளைகள் குறித்த நம் தொடர் மறைக்கல்வி உரையில் இன்று, சீனாய் மலையில் மோசேக்கு வழங்கப்பட்ட பத்துக்கட்டளைகள் குறித்து நோக்குவோம். இப்பகுதியைப் பற்றி விடுதலைப்பயண நூல் பிரிவு 20ல் வாசிக்கும்போது, 'நானே உன் கடவுளாகிய ஆண்டவர்; அடிமை வீடாகிய எகிப்து நாட்டினின்று உன்னை வெளியேறச் செய்தவர்' என கடவுள் அருளிய வார்த்தைகளைக் காண்கிறோம். நம் கடவுளாக இறைவன் தன்னை வெளிப்படுத்துவதையும், நம்மை சிறைப்படுத்தும் அனைத்திலிருந்தும் அவரின் அன்பு நமக்கு விடுதலை அளிப்பதையும் இதில் நாம் காண்கிறோம். இறைவனின் இந்த வார்த்தைகளை நாம் உற்றுநோக்கினோமென்றால், அவரின் மீட்பளிக்கும் அன்பிற்கு நன்றியுடன் பதிலளிக்க விடப்படும் அழைப்பாக அது உள்ளது. இந்த மீட்பளிக்கும் அன்புதான், இறைமகனாம் இயேசுவின் வருகையில் முற்றிலுமாக வெளிப்படுத்தப்பட்டது. இறைவனின் எண்ணற்ற கொடைகளுக்கான நன்றியும், இறைவனின் அன்பு அழைப்பை ஏற்றுக்கொள்ளும் விருப்பமும், கிறிஸ்தவ அறநெறி வாழ்வின் இதயத்தில் உள்ளன. இந்த கூறுகளே, நாம் இறைவார்த்தைகளைச் செவிமடுக்கவும், அவர் கட்டளைகளுக்கு அடிபணியவும் நம்மைத் தூண்டுகின்றன. இறைக்கட்டளைகளுக்கு நாம் அடிபணிவது என்பது, அடிமைத்தனமானதாகவோ, அல்லது, வெறும் சட்டத்திற்குப் பயந்ததாகவோ இருந்தால், கிறிஸ்துவில் இறைவனின் குழந்தைகள் என்ற சுதந்திரத்தை நாம் அனுபவிக்கும்பொருட்டு அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்பட வேண்டும் என, அக்கால இஸ்ரயேலர்களைப்போல் நாம் இறைவனை நோக்கி செபக்குரல் எழுப்புவோம். இறைவிருப்பத்திற்கு அன்புடன்கூடிய கீழ்ப்படிதலில், வாழ்வையும் உண்மை விடுதலையையும் நாம் நிறைவாக அனுபவிக்க உதவும்பொருட்டு, இறைவன், நம்மைப் பிணைத்திருக்கும் அனைத்துச் சங்கிலிகளையும் உடைத்தெறிய ஆவல் கொள்கிறார் என தன் மறைக்கல்வி உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 'சிறப்பு ஒலிம்பிக் விளையாட்டுக்கள்' என்ற அமைப்பிற்கு தன் வாழ்த்துக்களை தெரிவித்தார். அறிவு வளர்ச்சியில் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளர்களுக்கு விளையாட்டுப் பயிற்சிகளை வழங்கி, அவர்களுக்கு சிறப்புப் போட்டிகளை நடத்திவரும் இந்த அமைப்பின் 50ம் ஆண்டு கொண்டாட்டங்களையொட்டி இதன் அங்கத்தினர்கள் இப்புதன் மறைக்கல்வி உரைக்கூட்டத்தில் கலந்து கொண்டதற்கு மகிழ்ச்சியை வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், விளையாட்டுப் போட்டிகள், ஒருவர் ஒருவரிடையேயான புரிந்துகொள்ளுதலுக்கும், நட்புணர்வுக்கும் சிறப்பு வாய்ப்பை வழங்குகிறது என்றார். இந்த சிறப்பு ஒலிம்பிக் போட்டிகளுக்கு ஆதரவளிக்கும் அனைவருக்கும், இறைவனின் மகிழ்ச்சி மற்றும் அமைதியுடன்கூடிய ஆசீரை அளிப்பதாகக் கூறி, தன் அப்போஸ்தலிக்க ஆசீரை அனைவருக்கும் வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

27 June 2018, 11:48