தேடுதல்

Vatican News
புதன் மறைக்கல்வியுரையின்போது......130618 புதன் மறைக்கல்வியுரையின்போது......130618  (AFP or licensors)

மறைக்கல்வியுரை : அருளின் புது வாழ்வில் திருச்சட்டத்தின் நிறைவு

இன்றைய உலகில், குறிப்பாக இளையோர், சுவையற்ற ஒரு சாதாரண வாழ்வோடு நிறைவுகாண முடியாமல், ஓர் உண்மையான, முழுமையான வாழ்வு நோக்கி ஆவல் கொள்கின்றனர். இந்த சூழலில், கட்டளைகளைக் கடைப்பிடித்தலும், தமக்குள்ளதை பிறருடன் பகிர்ந்து கொள்ளுதலும் தேவைப்படுகின்றன.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ், வத்திக்கான் செய்திகள்

திருப்பலி குறித்த தன் மறைக்கல்வித் தொடரில் திருநற்கருணை குறித்து அதிகம் அதிகமாகப் பேசிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அதன்பின் திருமுழுக்கு அருளடையாளம் குறித்தும், உறுதிப்பூசுதல் அருளடையாளம் குறித்தும் மறைக்கல்வித் தொடர்களை வழங்கியபின், இப்புதனன்று, வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் குழுமியிருந்த திருப்பயணிகளுக்கு கட்டளைகள் குறித்து தன் மறைக்கல்வித் தொடரைத் துவக்கினார்.

அன்பு சகோதர சகோதரிகளே, இன்று நாம் கட்டளைகள் குறித்த ஒரு புதிய மறைக்கல்வித் தொடரைத் துவக்குகின்றோம். இந்த மறைக்கல்வி உரையின் துவக்கத்தில் இங்கு வாசிக்கப்பட்ட நற்செய்திப் பகுதியில், இயேசுவை நோக்கி ஓர் இளைஞர், 'நிலைவாழ்வை உரிமையாக்கிக் கொள்ள, நான் என்ன செய்ய வேண்டும்?' என கேட்கிறார். இன்றைய உலகில் பொதுவாகக் காணப்படும் ஓர் ஆவலை வெளிப்படுத்துவதாக இந்த கேள்வி உள்ளது. இன்றைய உலகில், குறிப்பாக இளையோர், சுவையற்ற ஒரு சாதாரண வாழ்வோடு நிறைவுகாண முடியாமல், ஓர் உண்மையான, முழுமையான வாழ்வு நோக்கி ஆவல் கொள்கின்றனர். தன்னிடம் கேள்வி கேட்ட இளைஞரை நோக்கி இயேசு, முதலில், கட்டளைகளைக் கடைப்பிடித்து வாழுமாறு கேட்கிறார். அதன் பின்னர் அதற்கும் மேலே சென்று, அந்த இளைஞரிடம் குறையாகத் தெரியும், அதைவிட மேலான ஒன்றை சுட்டிக்காட்டி கடைபிடிக்கச் சொல்கிறார். தன் குழந்தைப் பருவம் முதல், இறைவனின் கட்டளைகளைக் கடைப்பிடித்து வந்த அந்த இளைஞரை நோக்கி இயேசு, அவருக்கு உள்ளதையெல்லாம் விற்று ஏழைகளுக்கு கொடுக்கும்படியாகவும், அதன்பின் வந்து தன்னைப் பின்பற்றும்படியாகவும் உரைக்கிறார். தன் செல்வத்தை விற்று, ஏழைகளுக்குக் கொடுப்பதன் வழியாக அவர் விண்ணகத்தில் செல்வந்தராகத் திகழ்வார் எனவும் கூறுகிறார் இயேசு. 'நான் திருச்சட்டத்தை அழிக்க அல்ல, மாறாக, அதை நிறைவேற்றவே வந்தேன்' என இயேசு கூறியதன் அர்த்தத்தை இங்கு நாம் காண்கிறோம். மேன்மையான ஒன்றை, அதாவது வாழ்வின் செல்வத்தை அபரிவிதமாக நமக்கு வழங்கவே இயேசு ஆவல் கொள்கிறார். திருச்சட்டம் எவ்வாறு, அருளின் புது வாழ்வில் தன் நிறைவைக் காண்கிறது என, வரும் வாரங்களில் ஆழ்ந்து சிந்திப்போம். இறைவன் வழங்கிய பத்து கட்டளைகளை கிறிஸ்துவின் ஒளியில் வாசித்து, வாழ்வின் முழுநிறைவை நோக்கிய பாதையில் இயேசுவைப் பின்தொடர்வதற்கான வாயிலைக் கண்டுகொள்வோம். இயேசுவின் வாழ்வையும், இறைவனின் குழந்தைகளாக நம் வாழ்வையும் இதில் கண்டுகொள்வோம்.

இவ்வாறு, தன் புதன் மறைக்கல்வி உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் வழங்கினார்.

13 June 2018, 11:50